பொறுப்பான மின்னணுக் கழிவு மேலாண்மையை முன்னெடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கி டயலொக் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை
2026 செப்டம்பர் 04 கொழும்பு
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) மாவட்ட அதிகாரிகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இணைந்து.
இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) இணைந்து பொறுப்பான மின்னணுக் கழிவு மேலாண்மை (E-Waste Management) தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி (ToT) திட்டத்தை செப்டம்பர் 1, 2026 அன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடத்தின. ஆகஸ்ட் 3, 2026 அன்று டயலொக் மற்றும் CEA இடையே கையெழுத்தான 'e-Kunu' புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) தொடர்ந்து நடத்தப்பட்ட முதலாவது முக்கிய கள விழிப்புணர்வு நடவடிக்கையாக இது அமைந்ததுடன், நாடு முழுவதும் பொறுப்பான மின்னணுக் கழிவு நடைமுறைகள், சுழற்சிப் பொருளாதாரக் கோட்பாடுகள் (Circular-economy principles) மற்றும் சுற்றாடலுக்குப் பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்பயிற்சித் திட்டமானது CEA மாவட்ட அதிகாரிகளுக்கு பிராந்திய மட்டத்தில் விழிப்புணர்வை விரிவுபடுத்தும் நடைமுறை அறிவை வழங்கியது. இலங்கையின் அனைத்து 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 75 மாவட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் 25 அதிகாரிகள் உட்பட மொத்தம் 100 பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர். e-Kunu, சுழற்சிப் பொருளாதாரக் கோட்பாடுகள், மின்னணுக் கழிவு விதிமுறைகள் மற்றும் பொறுப்பான முறையில் கழிவுகளை அகற்றும் நடைமுறைகள் குறித்த அமர்வுகள் மூலம், பாடசாலைகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு டயலொக் மற்றும் CEA உருவாக்கிய விழிப்புணர்வுப் பொருட்களைப் பயன்படுத்தி சீரான விழிப்புணர்வுத் திட்டங்களை வழங்குவதற்கான நடைமுறை வழிகாட்டல்களைப் பங்கேற்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
இத்திட்டமானது டயலொக்கின் தற்போதைய e-Kunu கழிவு சேகரிப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கையிலுள்ள 24 டயலொக் வாடிக்கையாளர் சேவை மையங்களில் வைக்கப்பட்டுள்ள கழிவு சேகரிப்புப் பெட்டிகள் (Collection boxes) மூலம் ஏற்கத்தக்க சிறிய மின்னணுக் கழிவுகளை பொதுமக்கள் எளிதாக ஒப்படைக்க முடியும். சேகரிக்கப்படும் அனைத்து மின்னணுக் கழிவுகளும் சுற்றுச்சூழல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மைப் பங்காளர்களிடம் (Licensed waste management partners) ஒப்படைக்கப்பட்டு, முறையான நடைமுறைகளின் கீழ் அகற்றப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில், டயலொக் பொதுமக்களிடமிருந்து 3.74 மெட்ரிக் தொன் மின்னணுக் கழிவுகளைச் சேகரித்ததுடன், 668 தொன் நிறுவன உள்வாரியான மின்னணுக் கழிவுகளைப் பொறுப்பான முறையில் கையாண்டுள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட வலையமைப்புச் சாதனங்களை அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிப் பங்காளர்கள் மூலம் 100% மறுசுழற்சி செய்துள்ளது.
CEA மாவட்ட அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வை விரிவுபடுத்துவதன் மூலம், நாடு முழுவதிலுள்ள வீடுகள், வணிகங்கள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களைப் பொறுப்பான முறையில் கழிவுகளை அகற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கவும், தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்குப் பங்களிக்கவும் டயலொக் மற்றும் CEA ஆகியன இலக்கு வைத்துள்ளன. டயலொக்-CEA e-Kunu முயற்சி, ஏற்றுக்கொள்ளப்படும் மின்னணுக் கழிவு வகைகள் மற்றும் இலங்கை முழுவதும் கிடைக்கக்கூடிய பொறுப்பான கழிவு அகற்றல் முறைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் https://ekunu.lk/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.