Body

டயலொக் மற்றும் JKOA இணைப்பில் இலங்கையின் சாதாரண கைபேசி பயனர்களுக்கான 4G இணைப்பு வசதி விரிவாக்கம்

2026 அக்டோபர் 02         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: திரு. பிரசன்ன வீரகூன், மொபைல்ஸ் பிரிவுத் தலைவர் - JKOA மற்றும் உதவித் துணைத் தலைவர், John Keells Holdings PLC; திரு. ஜனோத தொரதெனிய, பிரதம நிறைவேற்று அதிகாரி - JKOA, மற்றும் சிரேஷ்ட துணைத் தலைவர், John Keells Holdings PLC; திரு. யுஷான் குணதிலக்க, மொபைல்ஸ் வணிகப் பிரிவுத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ; திருமதி. ஷிரோமி அலி, கார்ப்பரேட் திட்டமிடல், மூலோபாயம் மற்றும் வளர்ச்சிப் பிரிவுத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ; திரு. சரித சுபசிங்க, தலைவர் - ரீட்டெயில் துறை, John Keells Holdings PLC; திரு. தேஷான் விஜேவீர, சாதனங்கள் வணிகப் பிரிவுத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மைத் தொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, John Keells Holdings நிறுவனத்தின் பங்களிப்புடன் இயங்கும் John Keells Office Automation (JKOA) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையிலுள்ள சாதாரண கைபேசி (Feature phone) பயனர்களுக்காக மலிவு விலையிலான 4G கைபேசிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ‘JKOA Classic 4G’ கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண கைபேசி பயன்பாட்டின் எளிமையான மற்றும் பரிச்சயமான அனுபவத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அதேவேளையில், வாடிக்கையாளர்கள் அடுத்த தலைமுறை மொபைல் வலையமைப்புகளுக்கு இலகுவாக மாறுவதற்கு இக்கூட்டாண்மை ஆதரவளிக்கின்றது.

செப்டம்பர் 7 ஆம் திகதி Courtyard by Marriott Colombo ஹோட்டலில் நடைபெற்ற JKOA இன் கைபேசி அறிமுகம் மற்றும் விநியோகஸ்தர் சந்திப்பில் “Powering Tomorrow Together” என்ற கருப்பொருளின் கீழ் இந்த JKOA Classic 4G அறிமுகப்படுத்தப்பட்டது. இது சாதாரண கைபேசிகளின் இலகுவான பயன்பாட்டுடன் 4G இணைப்பு வசதியையும் ஒருங்கிணைத்து வழக்குகின்றது. ரூ. 7,990 விலையுடைய இந்தச் சாதனத்தில் 1.77 அங்குலத் திரை, 1,000mAh பேட்டரி, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு வசதி, FM Radio, உள்ளமைக்கப்பட்ட Torch, 16MB + 16MB உள் நினைவகம் மற்றும் Type-C சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மேலும், இந்தச் சலுகையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் Dialog வலையமைப்பின் ஊடாக 3 மாதங்களுக்கு எந்தவொரு பிணையத்திற்குமான 250 நிமிட இலவச அழைப்பு வசதியையும் பெற முடியும்.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (Group COO) லிம் லி சான் தெரிவிக்கையில், “இலங்கையின் மொபைல் சேவைத் துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மேம்பட்டு வரும் தொடர்பாடல் வசதிகளின் நன்மைகள் அதிகமான இலங்கை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதிலேயே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். 4G தொழினுட்பத்திற்கான மாற்றம் என்பது வெறும் வலையமைப்பு மேம்பாடு மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் பொருத்தமான வழிகளில் 4G வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்புமாகும். JKOA உடனான எங்களது இந்த இணைந்து செயல்படல் சாதாரண கைபேசி பயனர்களுக்கான இந்த இடைவெளியைக் குறைக்க உதவுவதுடன், பரவலான 4G பயன்பாட்டிற்கு ஆதரவளித்து, நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியின் நன்மைகளை அதிகளவிலான இலங்கை மக்கள் அடைவதையும் உறுதி செய்கின்றது,” எனக் குறிப்பிட்டார்.

ஸ்மார்ட்போன் பிரிவுக்கு அப்பாற்பட்டு 4G வசதிக்கான அணுகலை விரிவுபடுத்த உதவுவதற்காக, இக்கூட்டுண்மையானது Dialog இன் தொடர்பாடல் பிணையத் திறனையும் JKOA இன் கைபேசிச் சாதனத் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைக்கிறது. சாதாரண கைபேசிகளைத் தொடர்ந்து நம்பியிருக்கும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், இலங்கை முழுவதும் அடுத்த தலைமுறைக்கான தொடர்பாடல் வசதியை நோக்கிய உள்ளடங்கிய வளர்ச்சியை இக்கூட்டுண்மை ஆதரிக்கின்றது.

JKOA Classic 4G கைபேசியானது தற்போது நாடு முழுவதலுமுள்ள JKOA விற்பனையகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதுடன், இலங்கை முழுவதலுமுள்ள வாடிக்கையாளர்கள் இதனை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.