செயற்கை நுண்ணறிவுடன் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புதிய பரிமாணம்: டயலொக் மற்றும் ருஹுணு சுற்றுலாப் பணியகத்தின் 'Travel Sri Lanka' அறிமுகம்
011 778 8288 எனும் இலக்கம் மூலம் பல மொழிகளில் இயங்கும் AI சுற்றுலா வழிகாட்டியைப் பெறலாம்
2026 அக்டோபர் 08 கொழும்பு
இடமிருந்து வலமாக: தாருஷ வானிகசேகர (மேலாளர் - டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் உள்ளடக்கம், குழும நிலைபேறுதன்மை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); அசித் டி சில்வா (முதுநிலை மேலாளர் - சமூகக் கண்டுபிடிப்பு, குழும நிலைபேறுதன்மை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); அசாங்க பிரியதர்ஷன (குழும முதன்மை கார்ப்பரேட் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); சுபுன் வீரசிங்க (பணிப்பாளர் / குழும முதன்மை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); கௌரவ விஜித ஹேரத் (இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்); பேராசிரியர் சுசிரிபால மனவாடு (ஆளுநர், தென் மாகாணம்); திரு. சுரஞ்ஜித் வேவித (தலைவர், இலங்கை சுற்றுலா வளர்ச்சிப் பணியகம்); திரு. ஜயன் தொடகந்த (தலைவர், ருஹுணு சுற்றுலாப் பணியகம்).
இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ருஹுணு சுற்றுலாப் பணியகத்துடன் இணைந்து 'Travel Sri Lanka – Powered by Dialog AI' எனும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பல மொழி சுற்றுலாக் குரல் உதவிச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகளுக்குச் சுற்றுலாத் தகவல்களை இலகுவாக வழங்கும் நோக்கில் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளது. 12-க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளை ஆதரிக்கும் இச்சேவை மூலம், பயணிகள் மொபைல் செயலியோ (App) அல்லது இணைய இணைப்போ (Internet) இன்றி, ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பின் வழியே இயல்பான குரல் உரையாடல் மூலம் தகவல்களையும் உதவிகளையும் பெற முடியும்.
தென் மாகாணத்தில் முதற்கட்டமாக (Pilot Project) தொடங்கப்பட்டுள்ள 'Travel Sri Lanka', டயலொக்கின் AI ஆற்றலையும் ருஹுணு சுற்றுலாப் பணியகத்தின் இடங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அனுபவங்களையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது. கௌரவ ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவாடு அவர்களின் ஆரம்ப வழிகாட்டலுடனும், ருஹுணு சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் திரு. ஜயன் தொடகந்த அவர்களின் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ள இச்சேவையை, வரவிருக்கும் மாதங்களில் நாடு முழுவதும் விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் கிடைக்கக்கூடிய இச்சேவை, சுற்றுலாத் தலங்கள், பயணத் திட்டங்கள், ஈர்ப்புகள், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறித்த தகவல்களை வழங்குவதோடு, பயணிகளை உள்ளூர் சுற்றுலாச் சேவை வழங்குநர்களுடனும் இணைக்கிறது.
உலகச் சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காலியில் நடைபெற்ற 'Ruhunu NextGen Tourism 2026' நிகழ்வின் போது 'Travel Sri Lanka' அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரச பிரதிநிதிகள், சுற்றுலாத் துறை பங்குதாரர்கள், கல்வி நிறுவனங்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் ஒன்றிணைந்து இலங்கையின் சுற்றுலாத் துறை, கண்டுபிடிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்துக் கலந்தாலோசித்தனர்.
இந்த அறிமுகம் குறித்து உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்: "முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கை தன் நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வேளையில், பார்வையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு சுற்றுலாத் தகவல்களை இலகுவாக அணுகக்கூடியதாக மாற்றும் என்பதற்கும், பல மொழிகளில் பயணிகளுக்கு ஆதரவளிக்கும் என்பதற்கும் 'Travel Sri Lanka' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நாடு முழுவதிலும் உள்ள பார்வையாளர்களுக்கு நம்பகமான சுற்றுலாத் தகவல்களைக் கொண்டு சேர்க்க தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை நிரூபித்த டயலொக் மற்றும் ருஹுணு சுற்றுலாப் பணியகத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளரும் குழும முதன்மை நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க உரையாற்றுகையில்: "செயற்கை நுண்ணறிவை எவ்வாறு உள்ளூர்மயமாக்கி, நிஜ உலகத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதை 'Travel Sri Lanka' நிரூபிக்கிறது. டயலொக்கின் AI திறன்களையும் ருஹுணு சுற்றுலாப் பணியகத்தின் சுற்றுலா நிபுணத்துவத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், தகவல் மற்றும் மொழித் தடைகளைத் தகர்த்து, பயணிகள் இலங்கையைக் கண்டறிவதையும் அனுபவிப்பதையும் எளிதாக்குகிறோம். இத்திட்டத்தை விரிவாக்கும் போது, பார்வையாளர்களின் அனுபவத்தை வலுப்படுத்தவும், சுற்றுலாச் சூழல் அமைப்பு முழுவதும் அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தொழில்நுட்பத்திற்கு பெரும் சாத்தியக்கூறுகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம்."
இலங்கையின் தேவைகளுக்குத் தீர்வுகாணும் மற்றும் தகவல்கள், சேவைகளை அணுகுவதில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி உள்ளூர்மயமாக்கும் டயலொக்கின் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டே 'Travel Sri Lanka' கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ' கொவி மித்துரு AI', 'சயுரு AI' மற்றும் ' Yeheli AI' போன்ற முன்முயற்சிகளுடன் இணைந்து, பல்வேறு துறைகள் மற்றும் சமூகங்களில் நடைமுறை தீர்வுகளை வழங்க டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் AI-ஐப் பயன்படுத்தும் டயலொக்கின் பரந்த அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.
சுற்றுலாத் தகவல்களை இலகுவாகக் கிடைக்கச் செய்வதன் மூலமும், பயணிகளைத் தலங்கள் மற்றும் உள்ளூர் சேவை வழங்குநர்களுடன் இணைப்பதன் மூலமும், இலங்கையின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் வணிகங்கள் மற்றும் சமூகங்களின் பங்களிப்பை அதிகரிக்க 'Travel Sri Lanka' கரம்கொடுக்கிறது. மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வழியே தகவல்களையும் சேவைகளையும் பரவலாக்குவதன் மூலம், நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 9-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொழில், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் இத்திட்டம் பங்களிக்கிறது.
011 778 8288 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் 'Travel Sri Lanka' சேவையைப் பெற முடியும். தென் மாகாண முதற்கட்ட திட்டத்திலிருந்து பெறப்படும் தகவல்கள், வரவிருக்கும் மாதங்களில் இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த உதவும்.