Body

100 நாடுகளுக்கு பரந்து விரிந்த டயலொக்கின் 5G ரோமிங் சேவை: 200 சர்வதேச பங்காளர் வலையமைப்புகளுடன் இணைந்து சாதனை

2026 செப்டம்பர் 07         Colombo

 

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, உலகளவில் 200 பங்காளர் வலையமைப்புகளின் (Partner Networks) ஊடாக தனது 5G ரோமிங் (5G Roaming) எல்லைகளை 100 சர்வதேச நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தொழில், தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் அன்றாட டிஜிட்டல் தேவைகளுக்காக சர்வதேச சந்தைகளில் தடையற்ற, அதிவேக இணைப்புச் சேவையை அனுபவிக்க முடியும்.

இச்சாதனையானது டயலொக்கின் சர்வதேச ரோமிங் ஆற்றல்களின் தொடர்ச்சியான விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட பங்காளர்களின் ஊடாக 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 5G ரோமிங்கை வழங்கிய டயலொக், தற்போது 200 பங்காளர் வலையமைப்புகளின் ஆதரவுடன் 100 நாடுகளுக்கு தன் சேவையை விரிவுபடுத்தி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறை மொபைல் அனுபவங்களுக்கான அணுகலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும முதன்மை இயக்க அதிகாரி லிம் லி சான் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர்கள் பயணம் செய்யும்போது, அவர்களின் டிஜிட்டல் அனுபவமும் அவர்களுடனேயே பயணிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களது 5G ரோமிங் எல்லையின் விரிவாக்கமானது, இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டும் தடையற்ற, அதிவேக இணைப்புச் சேவையை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் தொடர்பிலும், உற்பத்தித்திறனுடனும், பொழுதுபோக்கிலும் திளைத்திருக்க முடியும். இந்த மைல்கல்லானது நாங்கள் உலகளவில் உருவாக்கிய வலுவான கூட்டாண்மைகளுக்கும், உலகத்தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் எமக்கிருக்கும் தொடர்ச்சியான கவனத்திற்கும் சான்றாகும்" என்று கூறினார்.

இந்த விரிவாக்கப்பட்ட சேவையானது, வணிகம், ஓய்வு, கல்வி அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பிலிருப்பதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் டயலொக் வாடிக்கையாளர்களுக்கு 5G வசதியுடன்கூடிய மொபைல் சேவைகளுக்கான சிறந்த அணுகலை வழங்குகிறது. டிஜிட்டல் சேவைகள் அன்றாட வாழ்க்கையில் மேலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவிலான வெளிநாட்டு நன்மைகளுடன் கூடிய வேகமான, நம்பகமான இணைப்புச் சேவையை இப்போது அனுபவிக்க முடியும்.

இந்தச் சாதனை டயலொக்கின் ' எதிர்காலம் இன்றே' ('The Future. Today.') என்ற பிராண்ட் வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இணைப்புச் சேவைக்கான கண்டுபிடிப்புகளில் அதன் முன்னணி நிலையை மேலும் பலப்படுத்துகிறது. நவீன மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீடுகளின் மூலம், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மொபைல் அனுபவங்களை வழங்குவதில் டயலொக் உறுதியுடன் செயல்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு அல்லது ரோமிங் சேவையைச் செயல்படுத்துவதற்கு (Activate roaming) https://dialog.lk/roaming என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.