‘டயலொக் பாடசாலை ரக்பி- 7 ‘ போட்டிகள் டிசம்பர் 18 தொடக்கம் ஆரம்பமாகின்றன
அனைத்து போட்டிகளும் Dialog TV அலைவரிசை 140, Dialog ViU, ThePapare.com மற்றும் Asia Rugby FB Page ஆகியவற்றினூடே நேரடியாக ஒளிபரப்பாகும்
December 17, 2021 Colombo
டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார அவர்கள், 'டயலொக் பாடசாலை ரக்பி- 7' போட்டிகளுக்கான அனுசரணையை இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பி.ஏ. அபேரத்ன அவர்களிடம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ.நாமல் ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் கையளிப்பதை படத்தில் காணலாம்.
மேலும் படத்தில் (இ -வ ) விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுசார் மருத்துவ நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் டொக்டர் கே.ஏ.பி. கிரியெல்ல, டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் வர்த்தக நாமம் மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் ரக்பி ஆலோசனைக் குழு தலைவர் அசங்க செனவிரத்ன, இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் செயலாளர் நிரோதா விஜேராம, மற்றும் கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை மற்றும் உடற்கல்வி பணிப்பாளர் தயா பண்டார ஆகியோரையும் உடன் காணலாம் .
இலங்கையில் அதிகமானோரின் அபிமானத்தைப்பெற்ற பாடசாலை மட்டத்திலான விளையாட்டுக்களுள் ஒன்றான ரக்பி 7 போட்டிகள் கொவிட் - 19 பரவலின் காரணமாக ஏறக்குறைய இரண்டு பருவகால இடைவெளிக்குப் பின்னர் , மீண்டும் டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றன. அதற்கமைய, மாகாண மட்டத்திலான சிறந்த பாடசாலை ரக்பி அணிகள் டிசம்பர் 18 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதிவரை மோதலில் ஈடுபடவுள்ளன .
நமது எதிர்காலம் இன்றே என்பதற்கேற்ப எதிர்காலத்தை முன்னிட்டு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும்,திறமைகளை முதலீடு செய்து கொள்வதற்கும் கரம்கொடுக்க தயாராகவுள்ள டயலொக் பாடசாலை ரக்பி -7 களமானது இன்று பாடசாலை இறுதி ஆண்டுகளில் 'ரக்பி' போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்த மாணவர்கள் கழக மட்டத்திலும் , தேசிய மட்டத்திலான ரக்பி வரையிலும் முன்னேறி செல்வதற்கு சிறந்தவோர் வாய்ப்பை வழங்குகின்றது.
அதற்கமைய மேற்படி அணிக்கு 7 பேரைக்கொண்ட பாடசாலை ரக்பி போட்டிகளில் மேல், மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்றுள்ள பாடசாலை அணிகள் குழு வடிவில் சுற்றுப் போட்டிகளில் போட்டியிடும். இதன்போது அவ்வவ் குழுவிலிருந்து முதலிடம் பெறும் அணியினர் 'நொக் அவுட்' முறையில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவர். அதேவேளை, சப்ரகமுவ மாகாண அணிகள் செம்பியன் அணியை தெரிவு செய்வதற்காக லீக் முறையில் ஒவ்வொரு அணியோடும் மோதுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் இலங்கையின் ரக்பி அபிமானிகள் ஆகியோரின் நலன் கருதி DTV Channel 140, Dialog ViU , Thepapare.com மற்றும் Asia Rugby FB Page ஆகியவற்றினூடே இப்போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப போட்டிகளின் பிரதான அனுசரணையாளர்களான டயலொக் ஆசி ஆட்டா ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேற்படி டயலொக் ரக்பி - 7 போட்டிகள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மூடிய அரங்கினுள்ளேயே நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'பாடசாலை ரக்பி -7' அபிமானிகள் dlg.lk/mostpopular இணையத்தை பார்வையிடுவதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் அந்தந்த போட்டி நாட்களில் போட்டியில் கலந்துகொள்ளும் பிரபலமான அணிக்கோ அபிமான அணிக்கோ வாக்களிக்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெறுவார்கள். இறுதிக்கிண்ண போட்டிக்கு முன்பாக ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வெற்றிபெறும் அணி அறிவிக்கப்படும். வெற்றிபெறும் அணிக்கு வாக்களித்த ரசிகர்களில் தெரிவாகின்ற அதிர்ஷ்டசாலிக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கக்கூடிய மதிப்பைக்கொண்ட ரூபா 50,000 வெளச்சர் பரிசாக வழங்கப்படும்.
மேற்படி பாடசாலை ரக்பி-7 போட்டியானது சுகாதாரத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் சுகாதார வழிகாட்டுதல்களின்படி உரிய விதிமுறைகளுக்கமைய நடைபெறும். போட்டியாளர்கள் கட்டாய உயிரியல் பாதுகாப்பு சூழலுக்குள் அந்தந்த பாடசாலைகளின் மேற்பார்வையின்கீழ் வைக்கப்படுவதுடன், சீரான இடைவெளியில் விரைவான அன்டிஜென்ட் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
இப்போட்டிகளையிட்டு மேல் மாகாண போட்டிகளுக்கான தமது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ள பாடசாலைகள் வருமாறு ; றோயல் கல்லூரி, இசிபத்தான கல்லூரி, புனித பீற்றர்ஸ் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, விஞ்ஞானக் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, டீ .எஸ். சேனநாயக்க கல்லூரி, மஹாநாம கல்லூரி, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, பிலியந்தல மத்திய கல்லூரி, கேரி கல்லூரி, மொரட்டு வித்தியாலயம், புனித ஜோன்ஸ் கல்லூரி, சிடபிள்யூடபிள்யூ கன்னங்கர கல்லூரி, சுமங்கல கல்லூரி, புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் பியரத்தன கல்லூரி ஆகியனவாகும். இவ் அணிகளிக்கிடையிலான போட்டிகள் டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கொழும்பு 07, ரோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
மேலும், மத்திய மாகாண போட்டிகளுக்கான தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ள பாடசாலைகள் வருமாறு : டிரினிட்டி கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி, தர்மராஜா கல்லூரி, புனித அன்தனிஸ் கல்லூரி, வித்யார்த்த கல்லூரி, ஸ்ரீ சுமங்கல கல்லூரி, புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராகுல கல்லூரி ஆகியனவாகும். இவ் அணிகளிக்கிடையிலான போட்டிகள் டிசம்பர் 27 ஆம் திகதியன்று பல்லேகலே ரக்பி மைதானத்தில் நடைபெறும்.
சப்ரகமுவ மாகாண போட்டிகளுக்காக பங்கேற்கின்ற அணிகளின்படி எஹலியகொட மத்திய கல்லூரி, தல்துவ கல்லூரி, மாவனெல்ல சாஹிரா கல்லூரி, கேகலு வித்தியாலயம் மற்றும் தெஹியோவிட்ட மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் கலந்து கொள்ளும் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் திகதி ருவன்வெல்ல பொது மைதானத்தில் இடம்பெறும்.
மேலும் , வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகளில் மல்லியதேவ கல்லூரி, புனித அன்னம்மாள் கல்லூரி, இப்பாகமுவ மத்திய கல்லூரி, வெலகெதர கல்லூரி, லக்தாஸ் டிமெல் கல்லூரி, குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி ஆகியன டிசம்பர் 30 ஆம் திகதி குருநாகல் மல்லியதேவ கல்லூரி மைதானத்தில் மோதவுள்ளன.
டயலொக் பாடசாலை ரக்பி-7 செம்பியன் அணியை தெரிவு செய்வதற்கான மேற்படி போட்டிகளில் தென் மாகாணத்தில் உயர்மட்ட அளவில் பிரதிநிதித்துவப்படுத்தி கடுமையாகப் போட்டியிடக்கூடிய புனித அலோசியஸ் கல்லூரி, ரிச்மன்ட் கல்லூரி, மகிந்த கல்லூரி, தேவபதிராஜா கல்லூரி, வித்யாலோக்க கல்லூரி, தெபரவெவ மத்திய கல்லூரி மற்றும் ராகுல கல்லூரி ஆகியவற்றிற்கிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் போட்டிகள் டிசம்பர் 31ஆம் திகதியன்று கொக்கல சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெறவுள்ளன.
பாடசாலை ரக்பி -7 போட்டிகள் இறுதியாக 2018 ஆம் ஆண் டிலேயே நடைபெற்றது. இருப்பினும், அதற்கு அடுத்த வருடம் இப்போட்டிகள் ஆரம்பமாகி முதல் சுற்று மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில் கொவிட் -19 பரவலின் காரணமாக இப்போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகள் இறுதியாக 2018 ஆம் ஆண்டுதான் நடைபெற்றிருந்தது . இருப்பினும், அதற்கு அடுத்த வருடமான 2019 இல் கொவிட் -19 தொற்றின் காரணமாக இப்போட்டிகள் ஆரம்பமாகி முதல் சுற்றிலேயே போட்டி நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வருடம், அனைத்து வீரர்களினதும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மூடிய அரங்கினுள்ளேயே போட்டிகள் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இலங்கையில் பாடசாலை மட்டத்திலான விளையாட்டுகளுக்கான கால அட்டவணையின்படி ரக்பி போட்டிகளே அதிகமாக இடம்பெறும் போட்டியாக உறுதிப்படுத்துகின்றன. மேலும் , இலங்கை பாடசாலை ரக்பி கால்பந்து சங்கம் (SLSRFA) மற்றும் போட்டி அனுசரணையாளர்களான டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் ஆகியன இந்த அளவில் இப்போட்டிகளை நடத்துவதற்கு கைகோர்த்து முன்னேறி வருவதை பார்க்கையில் அது மிகவும் ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. மேலும், மேற்படி ரக்பி 7 போட்டியானது ரக்பி விளையாடும் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கியிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.” என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கெளரவ. நாமல் ராஜபக்ஷ எம்.பி. அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “கொவிட் தொற்றுநோய் காரணமாக சுமார் இரண்டு வருடங்களாக பாடசாலை சுற்றுவட்டத்தில் இருந்து புதிய திறமைகளை இனங்காணும் வாய்ப்பை தேசிய அணி தவறவிட்டுள்ளது. அத்தகைய நிலையில் 'டயலொக் பாடசாலை ரக்பி-7' போட்டிகள் புதிய திறமைகளை இனங்கண்டு தேசிய அணிக்கு தெரிவு செய்வதற்கான சிறந்தவொரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். எனவே, இந்த பாடசாலை ரக்பி போட்டிகள் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு சிறந்தவோர் ஆட்ட ரசனையை வழங்கும் விதமாக அமைவதற்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்." என்றார்.
"தற்போதைய சூழ்நிலையில் ரக்பி -7 போட்டியை நடத்துவதானது இலங்கையில் பாடசாலைகள் மத்தியில் ரக்பியை மீண்டும் தொடங்குவதற்கான மிகவும் பொருத்தமான நடைமுறையான வழிமுறையாக அமைந்துள்ளது , மேலும், நாங்கள் எதிர்கொண்டுள்ள இந்த சவாலான சந்தர்ப்பத்தில் இத்தகைய அளவில் ரக்பி போட்டிகளை நடத்துவதில் இலங்கை பாடசாலை ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு (SLSRFA) க்கு ஆதரவளிக்க டயலொக் ஆசி ஆட்டா முன்வந்துள்ளதையிட்டு நான் டயலொக் நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன்," என இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பி.ஏ.அபேரதன தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், "ரக்பி ஒரு முழுமையான தொடுகைமுறை விளையாட்டாக இருப்பதால், இந்தப் போட்டியை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கு சுகாதாரத்துறை அமைச்சு , கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றிடமிருந்து சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டல்களையும் பெற்றுள்ளோம்." என்றார் .
டயலொக் ஆசி ஆட்டா நிறுவனமானது இலங்கையின் தேசிய கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய தேசிய அணிகளின் பெருமைமிக்க அனுசரணையாளர்களாவர். அவ்வாறே ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்டம் , கனிஷ்ட கரப்பந்தாட்டம் ,தேசிய சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வலைப்பந்தாட்ட போட்டித்தொடர், பாடசாலை ரக்பி போட்டித்தொடர் , நொக்அவுட் மற்றும் எழுவர் அணி தொடர்கள், பிரீமியர் கால்பந்தாட்டம் ஆகியவற்றுடன் பராலிம்பிக் பிரிவில் இராணுவ பராலிம்பிக் போட்டிகள் ,தேசிய பரா விளையாட்டுகள் ஆகியவற்றின்போது இணைந்து நெருக்கமாக செயற்படும் அதேவேளை ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆகியவற்றில் கலந்துகொள்ளும் இலங்கை அணியினரை பலமூட்டும் செயற்பாடுகளையும் டயலொக் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.