டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் 71வது Battle of the Golds போட்டிகள்
January 11, 2022 Colombo
இடப்பக்கம்: மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி நடுநிலைப்பள்ளி பொறுப்பாளர் அருட்தந்தை ஹெர்மன் எரங்க, மொரட்டுவை, புனித செபஸ்டியன் கல்லூரி, விளையாட்டுப் போட்டிகளின் அதிபர் சமேஷ் அந்தோனி, மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை ஷர்ம் தசநாயக்க, மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி, அதிபர் அருட்தந்தை சஞ்சீவ மெண்டிஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான செயற்பாட்டு அதிகாரி லசந்த தெவரப்பெரும மொரட்டுவை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி, அதிபர், திமுத்து தெரன்னாகொட, மொரட்டுவை, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி, பிக் மேட்ச் கமிட்டி தலைவர், பிரீதி குமார பெர்னாண்டோ, மொரட்டுவை, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயவீர, மற்றும் மொரட்டுவை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி, பிக் மேட்ச் ஏற்பாட்டுக் குழு செயலாளர் சிசிர சந்திரபால
கொவிட் பெருந்தொற்றின் காரணமாக இரண்டு வருட கால இடைவேளையின் பின்னர், மொரட்டுவ புனித செபஸ்டியன்ஸ் மற்றும் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான 71வது Battle of the Golds மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மீண்டும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான மேற்படி போட்டியானது மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட 50% பார்வையாளர்களுடன் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற 50 ஓவர் போட்டியானது மறுநாள் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி 50 ஓவர் போட்டியானது இவ்வருடம் நடைபெறுகின்ற 36 ஆவது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளினதும் பயிற்சியாளர்கள், இணை ஒத்துழைப்பு உத்தியோகத்தர்கள், நடுவர்கள் மற்றும் போட்டிக்கான உத்தியோகப்பூர்வ அதிகாரிகள் ஆகியோர் பிராந்திய சுகாதார சேவையினரின் மேற்பார்வையின் கீழ் கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து ஏழு நாட்கள் உயிர்-பாதுகாப்பு குமிழி வளையத்தின்கீழ் இருந்து செயற்படுவார்கள்.
இம்முறை போட்டியின்போது பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி அணிக்கு நடுவரிசை துடுப்பாட்ட வீரர் தினுர பெர்னாண்டோவும், புனித செபஸ்டிஸ்யன் கல்லூரி அணிக்கு சுகித்த பிரசன்னவும் தலைமை தாங்குவர்.
1996 இல் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த ரொமேஷ் களுவித்தாரன மற்றும் இலங்கை அணியின் தலைவராக இருந்த துலீப் மென்டிஸ் உட்பட, இரண்டு கல்லூரிகளையும் சேர்ந்த ஏராளமான வீரர்கள் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இலங்கை அணியை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களில் ஓஷத்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அமில அபோன்ஸு ஆகியோர் புனித செபஸ்தியன் கல்லூரியையும், குசல் மென்டிஸ், லஹிரு திரிமான ஆகியோர் கேம்ப்ரியன்ஸ் கல்லூரியையும் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னணி அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா, வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டியை thepapare.com, Dialog VIU மொபைல் App மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் Dialog TV அலைவரிசை இலக்கம் 140 இலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இரண்டு கல்லூரிகளுக்குமிடையே இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி ஆறு போட்டிகளிலும், செபஸ்டியன்ஸ் கல்லூரி மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. கடந்த 2011 ஆம் வருடம் சனிதா டி மெல் தலைமையில் கிண்ணத்தை வென்ற புனித செபஸ்டியன் கல்லூரியே கடைசியாக கிண்ணத்தை கைப்பற்றிய அணியாக திகழ்கின்றது. இருப்பினும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டு கல்லூரிகளுக்குமிடையே கடைசியாக இடம்பெற்ற போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த அதேவேளை, 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி மழையின் காரணமாக டக்வேர்த்லுயிஸ் விதிப்படி ஐந்து ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, இதுவரை நடைபெற்றுள்ள வரையறுக்கப்பட்ட 50 ஓவர் போட்டிகளில், செபஸ்டியன்ஸ் கல்லூரி 17 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது, பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி சம நிலையில் முடிவுற்றதுடன் மற்றும் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.