பொருள் விரிவாக்கம்

ஒரே தளத்தில் இணைப்புச் சேவை, கொடுப்பனவுகள் மற்றும் நிதியியல் சேவைகள்: டயலொக்கின் புதிய 'Dialog Pay' அறிமுகம்

ஒருங்கிணைந்த டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊடாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தல்

2026 ஜூலை 07         கொழும்பு

 

Dialog Pay அறிமுக நிகழ்வு (இடமிருந்து வலமாக): சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ரேணுகா பெர்னாண்டோ, குழும தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; நவீன் பீரிஸ், குழும தலைமை அதிகாரி, டயலொக் என்டர்பிரைஸ்; லசந்த தெவரப்பெரும, குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MyDialog App இன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளமான Dialog Pay இன் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. இணைப்புச் சேவை, கொடுப்பனவுகள் மற்றும் நிதியியல் சேவைகளை ஒரே புள்ளியில் கொண்டு வரும் இத்தளமானது, தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கையையும் வணிகங்களையும் வளப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட LankaQR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு (Lanka QR Payment Promotion Programme) ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள Dialog Pay, டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதையும், நிதியியல் ரீதியாக உள்ளடக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரே தடையற்ற டிஜிட்டல் தளத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட கொடுப்பனவுகளையும் நிதியியல் சேவைகளையும் மிக எளிதாக நிர்வகிக்க இது வழிவகுப்பதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு இயல்பான அங்கமாக மாறுவதையும் ஊக்குவிக்கிறது.

இலங்கையின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தகர் வலையமைப்பைக் கொண்டுள்ள Dialog Pay, நாடு முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள், ஆடை விற்பனையகங்கள், மின்னணு சாதனக் கடைகள், மருத்துவச் சேவை நிலையங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறு வணிகக் கடைகள் உட்பட 100,000-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் பாதுகாப்பான, வசதியான QR கொடுப்பனவுகளுக்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அன்றாடப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கும் போதும், உணவகங்களுக்குச் செல்லும் போதும் எவ்வித சிரமமுமின்றி டிஜிட்டல் முறையிலான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். அதேவேளை, சிறு வர்த்தகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் இலங்கையின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எளிதாகப் பங்கெடுக்கவும் இது பெருமளவில் வழிவகுக்கிறது.

இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக, டயலொக் நிறுவனம் தனது 'Genie' தளத்தை 'Dialog Pay' என மறுபெயரிடுகிறது. இது அதன் டிஜிட்டல் கொடுப்பனவுத் தளமானது, பரந்தளவிலான ஒரு டிஜிட்டல் நிதியியல் கட்டமைப்பாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதைப் பிரதிபலிக்கிறது. Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் ஊடாகக் கிடைக்கும் இச்சேவையை, வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் மிக எளிதாகச் செயல்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம், ஒரே தளத்தில் LankaQR கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், பணப்பரிமாற்றம் செய்யவும், தங்களது digital wallet ஐ அணுகவும் முடியும். அத்துடன், Dialog Finance இன் கீழ் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளை ஆரம்பிக்கவும், கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட இணைப்புச் சேவை மற்றும் நிதியியல் தேவைகளுக்காக வெவ்வேறு செயலிகளுக்கு மாற வேண்டிய அவசியம் இனி இருக்காது.

அன்றாட பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தகுதியான QR கொடுப்பனவுகளுக்கு Dialog Pay ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டயலொக் டேட்டா வெகுமதிகள் (data rewards) வழங்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவதுடன், டிஜிட்டல் கொடுப்பனவுப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுவதற்கும் பெரும் ஊக்கமாக அமையும்.

இந்த அறிமுகம் குறித்து, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்: "மக்களை இணைப்பதற்கும் அப்பால், தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கையையும் வணிகங்களையும் வலுப்படுத்துவதே டயலொக்கின் முதன்மை நோக்கமாகும். ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் கொடுப்பனவுகளையும் நிதியியல் சேவைகளையும் எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், அதிக லாபகரமானதாகவும் மாற்றுவதன் மூலம் Dialog Pay தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் இலங்கை அரசாங்கம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மத்திய வங்கி மற்றும் LankaPay ஆகியவற்றின் பங்களிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இந்த தேசிய முயற்சியில் எம்மோடு கைகோர்த்துள்ள அனைத்துப் பங்காளிகளுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை விரைவுபடுத்த ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்."

தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து காட்டி வரும் அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவே Dialog Pay உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகர் வலையமைப்பை டிஜிட்டல் நிதியியல் சேவைகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் வெகுமதிகளுடன் இணைப்பதன் மூலம், Dialog Pay அன்றாட டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாகவும், வசதியாகவும், லாபகரமானதாகவும் மாற்றுகிறது. இது, நாடு மிகவும் உள்ளடக்கிய மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி விரைவாக முன்னேற வழிவகுக்கிறது.