பொருள் விரிவாக்கம்

Yeheli.lk ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை

2026 அக்டோபர் 04         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) தலைவர் டாக்டர் சஞ்சீவ குணசேகர மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க ஆகியோர், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜெயசூரிய திஸாநாயக்க, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகத்தினருடன் இணைந்து டயலொக் கார்ப்பரேட் தலைமையகத்தை இளஞ்சிவப்பு நிற விளக்குகளால் ஒளிரச்செய்தபோது.

இலங்கையின் முதன்மைத் தொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் கரம்கோர்த்துள்ளது. இதற்கமைய, நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் தனது கார்ப்பரேட் தலைமையகத்தை இளஞ்சிவப்பு (pink) வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்துள்ளது.

டயலொக்கின் Yeheli.lk தளத்தின் ஊடாக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக, இவ்வாண்டின் செயற்திட்டமும் 'மனதிலிருந்து ஓர் உறுதிமொழி' (A Pledge from the Heart) எனும் கருப்பொருளின் கீழ் அக்டோபர் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. இப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் yeheli.lk இணையத்தளத்திற்கு விஜயம் செய்து, இலவச மாதாந்த SMS நினைவூட்டல் சேவைக்குச் பதிவுசெய்து கொள்ளலாம். இதன்மூலம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் முழுவதும் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதற்கான உறுதிமொழியையும் அவர்கள் எடுத்துக்கொள்ள முடியும். அத்துடன், மார்பக ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாகக் கலந்துரையாடுவதை ஊக்குவித்தல், சுய மார்பகப் பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்வதை வழக்கமாக்குதல் மற்றும் எளிதில் அணுகக்கூடிய, நம்பகமான, நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதையும் இம்முயற்சி முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தர்மகர்த்தாவும் தலைவருமான டாக்டர் லங்கா ஜெயசூரிய திஸாநாயக்க மற்றும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) தலைவர் டாக்டர் சஞ்சீவ குணசேகர ஆகியோருடன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சார்பில் பணிப்பாளரும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க, குழுமத் தலைமை கார்ப்பரேட் அதிகாரி அசங்க பிரியதர்ஷன, குழுமத் தலைமை மனிதவள அதிகாரி ரேகா வீரசூரிய மற்றும் குழுமத் தலைமை நிதி அதிகாரி சிம் சியூ ஷான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தர்மகர்த்தாவும் தலைவருமான டாக்டர் லங்கா ஜெயசூரிய திஸாநாயக்க, “மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முடிவுகளை வெற்றிகரமானதாக மாற்றுவதில் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தொடர்ச்சியான விழிப்புணர்வும் துல்லியமான தகவல்களுக்கான அணுகலும் அத்தியாவசியமானவையாகும். டயலொக் நிறுவனத்துடனான எமது தொடர்ச்சியான பங்களிப்பானது, Yeheli.lk தளத்தின் ஊடாக அதிகளவிலான மக்களைச் சென்றடையவும்; பெண்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மார்பக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவும், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்கப்படுத்த எமக்கு பெரிதும் உதவுகிறது,” எனக் குறிப்பிட்டார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமத் தலைமை கார்ப்பரேட் அதிகாரி அசங்க பிரியதர்ஷன கருத்துத் தெரிவிக்கையில், “இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடனான எமது கூட்டுப் பங்களிப்பானது, நவீன தொழில்நுட்பம் மற்றும் நம்பகமான கூட்டாண்மைகளைப் பயன்படுத்தி முக்கியமான சுகாதாரத் தகவல்களை மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கச் செய்வதன் மூலம், சமூக நிலையான தன்மையை (social sustainability) மேம்படுத்துவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில், Yeheli.lk தளமானது நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவல்களையும் வழக்கமான நினைவூட்டல்களையும் வழங்குவதன் மூலம், வெறுமனே விழிப்புணர்வோடு நின்றுவிடாமல் சரியான நேரத்தில் தகவலறிந்த உரிய நடவடிக்கைகளை எடுக்க மக்களை ஊக்குவிக்கிறது. 'மனதிலிருந்து ஓர் உறுதிமொழி' எனும் பிரச்சாரத்தின் ஊடாக, சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறியும் வழக்கத்தையும் ஒரு தொடர்ச்சியான கலாச்சாரமாக நிலைநிறுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இயங்கும் இலங்கையின் முதலாவது அடையாளத்தை வெளிப்படுத்தாத டிஜிட்டல் ஆலோசனைத் தளமான Yeheli.lk, சுகாதாரம், சட்டம் மற்றும் உளவியல் சார்ந்த விடயங்களில் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட வழிகாட்டல்களை வழங்குகிறது. வெளிப்படையாகப் பேசக் தயங்கும் தலைப்புகள் குறித்தும் பாதுகாப்பான முறையில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த தளமாகவும் இது விளங்குகிறது. மேலும், இத்தளத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திலான Chat & Voice Bot வசதியானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 24/7 இலவசமான மற்றும் இரகசியமான ஆதரவை வழங்குகிறது. 'மனதிலிருந்து ஓர் உறுதிமொழி' எனும் இத்திட்டத்தின் மூலம், டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை அக்டோபர் மாதத்தையும் தாண்டி மார்பக ஆரோக்கியம் குறித்த உரையாடலை விரிவுபடுத்தி, நம்பகமான வழிகாட்டல்களைப் பெறவும், விழிப்புணர்வுடன் கூடிய கலந்துரையாடல்களில் ஈடுபடவும், தங்கள் நல்வாழ்வை உறுதிசெய்ய சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்களை ஊக்குவிக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு https://www.yeheli.lk/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.