பொருள் விரிவாக்கம்

Dialog Axiata தொடர்ந்து 5வது வருடமாக இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தக நாமமாக Brand Finance இனால் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது

2023 ஆகஸ்ட் 3         கொழும்பு

 

Most Valuable Brand by Brand Finance

படத்தில் இடமிருந்து வலமாக: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, Brand Finance தலைவர் ருச்சி குணவர்தன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார

உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான Brand Finance தமது 20வது வருடாந்த ஆய்வில் ‘இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமம்’ எனும் மேன்மைமிகு பட்டத்தை நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இற்கு ரூ. 52 பில்லியன் வர்த்தக நாம பெறுமதியுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் வழங்கி கௌரவித்துள்ளது. அதற்கமைய இலங்கையின் பலம்பொருந்திய வர்த்தகநாமமாக வளர்ந்திருக்கும் டயலொக், AAA+ ஃபிட்ச் மதிப்பீட்டை பெற்றுள்ளது. அத்துடன் டயலொக் ஆனது தொடர்ந்து 16வது முறையாக ‘மிகவும் மதிப்புமிக்க தொலைத்தொடர்பு வர்த்தகநாமம்’ எனும் பட்டத்தையும் சுவீகரித்துள்ளது.

இவை மட்டுமின்றி 17 மில்லியன் இலங்கையர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையை டயலொக் வென்றிருப்பதையும் இலங்கை மக்களின் வாழ்வு மற்றும் நிறுவனங்களை நிலைபேறான டிஜிட்டல் சூழல் அமைப்புகளின் ஊடாக வலுவூட்டி வளப்படுத்தும் நிறுவனத்தின் தீர்க்கமான அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் விதமாக ‘மிகவும் விரும்பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தகநாமம்’ எனும் பட்டத்தையும் தொடர்ந்து 7வது ஆண்டாக சூடிக்கொண்டது.

‘எதிர்காலம் இன்றே’ எனும் தன் வர்த்தகநாம உறுதிமொழிக்கு உண்மையாக இருக்கும் வகையில் டயலாக் தொடர்ந்தும் அனைவரையும் உள்வாங்கும் வகையிலான, மலிவான, எல்லோரும் அணுகக்கூடிய அபரிமிதமான தொழில்நுட்பம் மற்றும் இணைப்பையும் தொடர்ந்து வழங்குவதோடு நாட்டை ஒரு டிஜிட்டல் தேசமாக மாற்றியமைப்பதற்கான தன் முயற்சியிலும் மும்முரம் காட்டிவருகின்றது.

‘உளமார்ந்த சேவை’ எனும் நிறுவனத்தின் கொள்கைக்கு தீர்க்கமான அர்ப்பணிப்பை வழங்கும் பொருட்டு நிறுவனமானது தன்னிகரற்ற வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்கிவருகிறது. எடுத்துக்காட்டாக, இதன் டிஜிட்டல் பராமரிப்பு சூழலமைப்பை குறிப்பிடலாம். இதில் 'DIA' எனும் மெய்நிகர் உதவியாளர் (Virtual Assistance) , MyDialog App மற்றும் Google Assistant உடன் குரல் கட்டளை வசதியை ஒருங்கிணைத்தல் ஆகியனவும் அடங்கும்

நாடளாவிய ரீதியில் சமூகத்தில் நல்மாற்றத்தை விளைவிக்கும் பொருட்டு நிறுவனமானது தனது கூட்டாளர்களுடன் இணைந்து நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வினை காணும் வகையில் ‘தேசிய எரிபொருள் அட்டை (Fuel Pass)’ யை அறிமுகப்படுத்தியது. மேலும், தனது பங்காளர்களுடன் கைகோர்த்து நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 120,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமுகமாக ‘மனிதநேய ஒன்றிணைவு’ எனும் மனிதாபிமான கூட்டின் மூலம் அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கியது. அத்துடன், ‘Karuna.lk' எனும் இலங்கையின் முதல் crowdfunding தளத்தின் அறிமுகமானது தொழில்நுட்பம் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை நிகழ்த்த டயலொக் காட்டும் முனைப்பை எடுத்துக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இது குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் “இந்த அங்கீகாரத்தை வெற்றிகொள்ள எமக்கு உதவிய 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரின் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் நாம் நன்றியுடையவர்கள் ஆகின்றோம். இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பலம்பொருந்திய வர்த்தகநாமமாக நாம் தொடர்ந்தும் தொழில்நுட்பத்தின் மாறிவரும் சக்தியை கையாண்டு இலங்கையர்களின் வாழ்க்கை தரம் மற்றும் நிறுவனங்களை வளமூட்டி வலுவூட்டுவோம்” என்றார்.

இலங்கை Brand Finance இன் தலைவர் ருச்சி குணவர்தன உரையாற்றுகையில், “எமது பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட டயலொக்கிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இது ஏனைய வர்த்தகநாமங்களால் பின்தொடரப்பட வேண்டிய ஒரு முன்னுதாரணம் ஆகும். தொலைத்தொடர்புத் துறையில் பல்வேறு குறிகாட்டிகளினூடாக நாம் மேற்கொண்ட மதிப்பீடுகள் அத்தனையூடாகவும் டயலொக் தனது வர்த்தகநாமத்தின் மதிப்பை அதிகரித்து வர்த்தகநாமத்தின் பலத்தை கட்டியெழுப்பியுள்ளமை புலப்பட்டுள்ளது” என்றார்.

Brand Finance உலகின் முன்னணி சுயாதீனமான வர்த்தகநாம மதிப்பிடல் ஆலோசனை நிறுவனமாகும். இது இலங்கை உட்பட 25 நாடுகளில் தன் அலுவலகங்களை கொண்டியங்கி வருகிறது. Brand Finance ஆனது வர்த்தகநாமங்களின் நிதி மதிப்பை அளவிடுதல் மூலம் சந்தைப்படுத்தல் மற்றும் நிதிக்கிடையிலான இடைவெளிக்கு ஒரு பாலமாய் அமைகிறது. Brand Finance ஆனது தனது லீக் அட்டவணையிலுள்ள வர்த்தகநாமங்களின் மதிப்புகளை Royalty Relief approach எனும் ISO 10668 சான்றுக்கு இணங்கிய ஒரு வர்த்தகநாம மதிப்பீட்டு முறை மூலம் கணக்கிடுகிறது. இது ஒரு வர்த்தகநாமம் அடையக்கூடிய எதிர்கால வருவாய்களை மதிப்பிடுதலை உள்ளடக்கும். இம்மதிப்பிடல் அதன் பாவனைக்காக அறவிடப்படும் ஒரு ராஜரீக அணுகுமுறை விகிதத்தின் மூலம் கணக்கிடப்படும். இதன்மூலமாகவே ஒரு வர்த்தகநாம மதிப்பை அடையமுடியும். வர்த்தகநாம மதிப்பென்பது திறந்த சந்தையில் வர்த்தகநாமத்தின் உரிமத்தை பெறுவதன் மூலம் அவ்வர்த்தகநாமத்தின் உரிமையாளர் பெறக்கூடிய நிகர பொருளாதார அனுகூலம் ஆகும்.