Body

டயலொக், இலங்கை கடற்றொழில் சமூகத்தை வலுப்படுத்தும் வகையில் மும்மொழியில் சயுறு App-ஐ வெளியிடுகிறது

2024 செப்டம்பர் 19         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

புகைப்படத்தில் இடமிருந்து வலமாக - திரு.எம்.எம். ஆரியர்தன, ஆழ்கடல் பிரிவுப் பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்; திரு. முதலிகே ஜானக பிரசன்ன, பொது முகாமையாளர், இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம்; திரு. அசங்க பிரியதர்ஷன, நிலைபேறாண்மை பிரிவின் தலைவர், குழும பிரதம இடர் மற்றும் இணக்கப்பாடு அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கௌரவ. டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சர்; திருமதி. கல்யாணி ஹேவாபதிரண, செயற்பாட்டு பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்; திரு. நிலங்க ஜயவர்தன, பிரதானி, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம்; திரு. வடிவேல் சத்தியநாதன், நிர்வாகப்பணிப்பாளர், இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம்; திரு. உதித கம்ஹேவ, கண்காணித்தல், கட்டுப்படுத்தல், கவனக் கண்காணிப்புப் பிரிவின் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்; திருமதி. திலினி நவகமுவ, தகவல் தொழில்நுட்பப்பிரிவின் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்.

இலங்கையின் மீனவ சமூகங்களை மேம்படுத்தும் முயற்சியாக, இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து வள்ளங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு உதவிடும் வகையில் நிகழ்நேர (real-time) வானிலை அறிக்கைகள் மற்றும் பிற சேவைகளை அணுகுவதற்கான வசதிகளை மும்மொழியிலும் அளிக்கும் சயுறு சேவைக்கான அலைபேசி செயலியை (Mobile App) அறிமுகப்படுத்தியது.

சயுறு செயலி, 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சயுறு SMS மற்றும் அழைப்பு அடிப்படையிலான வானிலை சேவையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும், இதில் இன்றைய வானிலை, Mark My Route, மீன்கள் அதிகம் உள்ள இடங்களைக் குறித்துவைத்தல், திணைக்கள சேவைகள், விழிப்புணர்வு செயற்றிட்டங்கள், ஒரு டிஜிட்டல் திசைகாட்டி, SOS (அபாய எச்சரிக்கை) விழிப்பூட்டல்கள் மற்றும் ஒரு எரிபொருள் கணிப்பான் (calculator) ஆகிய அம்சங்கள் உள்ளன. சயுறு SMS மற்றும் அழைப்பு இலவசம் என்றாலும், புதிய அம்சங்களை அணுக 90 நாள் சோதனைக்காலத்தை இச்செயலி வழங்குகிறது, மேலும் சோதனைக் காலத்திற்குப் பிறகு ஒரு நாளைக்கு ரூ.2 + வரி மட்டுமே. Google Play Store-இல் இலவசமாக பதிவிறக்கம் (download) செய்யலாம். டயலொக் வாடிக்கையாளர்கள் எந்த டேட்டா கட்டணமும் இல்லாமல் செயலியைப் பயன்படுத்தலாம்.

ஐ. நா. வின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 1, 9, மற்றும் 13ஐத்தழுவி, இந்த முன்னெடுப்பு மீன்பிடி சமூகங்களை மேம்படுத்த முயல்கிறது மற்றும் 2023 இல் உள்ளிணைக்கை (inclusion) மற்றும் சமூகத்திற்கான NBQSA விருது உட்பட பல பாராட்டுதல்களை வென்றுள்ளது. 2020-இல் வெளியிடப்பட்டதிலிருந்து இன்றளவில், 100,000 இற்கும் மேற்பட்ட வள்ளம் செலுத்தும் மீனவர்களை கொண்ட துடிப்பான பயனர் தளத்தை கொண்டுள்ளது. வருடாந்தம் 2.1 மில்லியன் SMS வழி வானிலை விழிப்பூட்டல்களை அளிப்பதோடு, சராசரியாக 800,000 அவசர அழைப்புகளுக்கு உதவி புரிகிறது.

"ஒரு நாள் பயணத்தில் பணிபுரியும் மீன்பிடி படகுகளின் உயிர் மற்றும் பாதுகாப்பு பற்றிய எந்த தகவலையும் பெற முடியாத ஒரு காலகட்டத்தில், சயுறு 828 சேவையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அறிமுகப்படுத்தியது" என கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "சயுறு அலைபேசி செயலியின் அறிமுகமானது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொருத்தமான மற்றும் சரியான நடவடிக்கையாகும். அத்துடன் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியமைக்காக Dialog நிறுவனத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்நிகழ்வில் பேசுகையில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம இடர் மற்றும் இணக்கப்பாடு அதிகாரியும், நிலைபேறாண்மையின் தலைவருமான அசங்க பிரியதர்ஷன கருத்துத் தெரிவிக்கையில், "சயறு அலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் உள்ள நலிவடைந்த சமூகங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட எங்கள் தற்போதைய முன்னெடுப்புகளுக்கு சயுறு செயலி ஒரு மதிப்புமிக்க வரவாகும். இது வள்ளத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தம் வாழ்வாதார தேவைக்காக கடலுக்கு செல்கையில் ஊகிக்கமுடியாத வானிலை மாற்றங்களால் ஏற்படும் இடர்களை தணிக்க இது உதவும்” என்றார்.

சயுறு SMS மற்றும் குரல் அடிப்படையிலான வானிலை சேவை மற்றும் அலைபேசி செயலி குறித்த மேலதிக தகவல்களுக்கு https://www.dialog.lk/sayuru ஐப் பார்வையிடவும்.