டயலொக் அனுசரணையில் ‘புனித ஜோசப் - புனித பீட்டர்ஸ்’ கல்லூரிகளுக்கிடையிலான 87வது மாபெரும் கிரிக்கெட் சமர்
டிசம்பர் 13 ,14 ஆம் திகதிகளில் ‘எஸ்எஸ்சி’ மைதானத்தில் நடைபெறவுள்ளது
December 13, 2021 Colombo

படத்தில் இடமிருந்து வலம்: கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரஞ்சித் அந்தராடி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சட்ட மற்றும் ஒழுங்குமுறை, பிரிவு பொது ஆலோசகர்/துணைத் தலைவர் றினேஷ் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் ரோஹித்த ரொட்ரிகோ
இலங்கையின் முதன்மையான கத்தோலிக்க ஆண்கள் பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி ஆகியன, அருட் தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன . இப்போட்டி டிசம்பர் 13ஆம், 14ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில், நடைபெறவுள்ளது .‘Battle of Saints’, (புனிதர்களின் சமர் ) என அழைக்கப்படும் விறுவிறுப்பான போட்டித்தன்மை கொண்ட இரண்டு நாட்கள் நடைபெறும் மேற்படி வருடாந்த கிரிக்கெட் போட்டியானது மிகுந்த ஆர்வத்தை கொண்ட போட்டியாகும். இப்போட்டியானது முதல் இன்னிங்ஸ் தலா 60 ஓவர்களை கொண்டதாக வரையறுக்கப்பட்டிருக்கும். இதற்கமைய , இம்முறை 2021ஆம் வருடத்திற்கான 19 வயதுக்குட்பட்ட கொழும்பு, டார்லி வீதி, புனித ஜோசப் கல்லூரி அணியானது சகலதுறை ஆட்டக்காரரான துனித் வெல்லலகே தலைமையிலும், பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியானது சிறந்த துடுப்பாட்ட வீரரான நிபுனக பொன்சேகாவின் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.
"கொவிட் தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் பரவி உலகையே முடக்கியுள்ள ஒரு தருணம் இது. இருப்பினும், நீண்டகால பாரம்பரியங்களை கொண்ட கிரிக்கெட் விளையாட்டுக்களினூடாக, அத்தகைய பாரம்பரியத்தை,வரலாற்றை பாதுகாக்க வல்ல ஒரு தனித்துவத்தை நாம் கொண்டிருப்பதும் அதிர்ஷ்டகரமானதாகும்." என இம்முறை போட்டியை நடத்தும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் ரோஹித்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார் . மேலும் அவர் குறிப்பிடுகையில் , "ஜோ-பீட் (ஜோசப் -பீட்டர்ஸ்) பிணைப்பானது சகோதரத்துவம், ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் தனித்துவமான உணர்வை வளர்க்கின்றது, மேலும், இம்முறை நடைபெறுக்கின்ற போட்டியானது சுகாதார கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கமைய அரங்கில் பார்வையாளர்கள் இல்லாத நிலையில் நடைபெறவுள்ள போதிலும் போட்டியானது எவ்வகையிலும் விறுவிறுப்பும், மிகுந்த போட்டித்தன்மையும் குன்றாத வகையில் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொவிட் தொற்றுப் பரவல் சூழ்நிலையிலும்கூட தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுடன் சவால்களை சமாளிக்கும் வகையில் போட்டி ஏற்பாடுகளையிட்டு முனைப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் , இப்போட்டிகளை நடத்துவதில் எம்மை ஊக்குவித்து கரம் கொடுக்கின்ற நமது பிரதான அனுசரணையாளர்களான டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளகின்றேன் ." என்றார்.
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரஞ்சித் அந்தராடி தெரிவிக்கையில், “சகோதரத்துவம் மற்றும் தோழமை உணர்வுடன்கூடிய தலைமுறை
தலைமுறையாக உடைக்கப்படாத சங்கிலித் தொடராக மற்றொரு 'ஜோ-பீட்' கிரிக்கெட் போட்டிக்கான களத்தை தயார் செய்வதில் பலரது அயராத உழைப்பும், இறைவனின் ஆசீர்வாதமும் கிட்டியதன் பேரில் அதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். போட்டிகளையிட்டு கடினமாக பயிற்சிகளை பெற்றுள்ள நமது மாணவர்கள், மேலும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த முக்கியமான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இரு அணிகளுக்கும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், அனுசரணையாளர்களான டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார்.
இந்த இரண்டு கல்லூரிகளும் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளுள் புனித ஜோசப் கல்லூரி 12 வெற்றிகளுடன் தொடரில் முன்னிலை வகிக்கின்றது, 2008 இல் ருவந்த பெர்னாண்டோபுள்ளே தலைமையிலான போட்டியின்போதே புனித ஜோசப் கல்லூரிக்கு கடைசி வெற்றி கிட்டியிருந்தது. அதேவேளை, புனித பீற்றர்ஸ் கல்லூரி இதுவரை 10 வெற்றிகளை பெற்றுள்ளது. 2016 இல் வினு மொஹொட்டியின் தலைமையிலான போட்டியிலேயே புனித பீற்றர்ஸ் கல்லூரி கடைசியாக வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்திருந்தது. மேற்படி அருட்தந்தை மொரிஸ் ஜே. லெகோக் ஞாபகார்த்த கிண்ணமானது பம்பலப்பிட்டி புனித பீற்றர்ஸ் கல்லூரியில் காட்சி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .
1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான முதலாவது வரையறுக்கப்பட்ட ஓவர்களைக்கொண்ட போட்டியானது புனித ஜோசப் -புனித பீட்டர்ஸ் கல்லூரிகளுக்கிடையிலேயே நடைபெற்றிருந்தது. இதற்கமைய, பாடசாலைகளுக்கியிடையிலான 50 ஓவர்களைக்கொண்ட ஒருநாள் போட்டியானது எப்போதும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கும் போட்டியாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கொவிட் தொற்றின் காரணமாக சுகாதார பாதுகாப்பின் நிமித்தம் சுகாதாரத்துறை அமைச்சும் , விளையாட்டுத்துறை அமைச்சும் விதித்துள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய போட்டிகளின்போது பார்வையாளர் அரங்கில் எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. எனினும், போட்டிகளை உணர்வுபூர்வமாக ரசிக்கும் அதிக எண்ணிக்கையிலான இந்நாள் மாணவர்கள் , பழைய மாணவர்கள், கிரிக்கெட் அபிமானிகள் ஆகியோர் தமது இருப்பிடங்களில் இருந்தவாறும், தொலைதூர இடங்களில் இருந்தவாறும் இணைய வழி ஒளிபரப்புகளினூடே பாதுகாப்பாக போட்டிகளை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
துனித் வெல்லலகே, ஷெவோன் டேனியல், சதீஷ் ஜெயவர்தன, செயின்ட் ஜோசப்ஸ் மற்றும் வனுஜ சஹான், டனல் ஹேமானந்தா, லஹிரு டெவட்டகே ஆகிய 6 வீரர்கள், சுற்றுலா பங்களாதேஷ் U19 அணிக்கு எதிராக விளையாடியிருப்பது இந்த ஆண்டு ஆட்டங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. செயின்ட் ஜோசப் அணியின் கேப்டன் துனித் வெல்லலகே, இரண்டு சுற்றுப்பயணங்களுக்கும் இலங்கை U19 கேப்டனாக நியமிக்கப்பட்டார், செயின்ட் பீட்டர்ஸின் வனுஜ சஹான் மற்றும் செயின்ட் ஜோசப்ஸின் ஷெவோன் டேனியல் ஆகியோர் இரண்டு தொடர்களிலும் வழக்கமான போட்டி வெற்றியாளர்களாக இருந்தனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடும் ஐந்து பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் U19 ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் U19 உலகக் கோப்பைக்காக டிசம்பர் 19 ஆம் திகதி புறப்படும் இலங்கை அணியில் இடம்பிடிப்பார்கள்.
மேலும், இந்த இரண்டு கல்லூரிகளும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பல சிறந்த வீரர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளமையும் ஒரு சிறப்பம்சமாகும் . இலங்கையின் தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்யூஸ் , சமிந்த வாஸ், திசர பெரேரா, ஆஷ்லி டி சில்வா, மைக்கல் வென்டோர்ட் , ரொஷேன் சில்வா, பிரியமல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாவர். அவ்வாறே , புனித பீட்டர்ஸ் கல்லூரியின் றோய் டயஸ், ரொமேஷ் ரத்நாயக்க, வினோதன் ஜோன், அமல் சில்வா, ரசல் ஆர்னோல்ட், கௌஷல் லொக்கு ஆராச்சி, மலிந்த வர்ணபுர மற்றும் ஏஞ்சலோ பெரேரா ஆகியோரும் இலங்கை அணியில் இடம்பெற்ற புனித பீட்டர்ஸ் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாவர்.
புனித ஜோசப்- புனித பீட்டர்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான மேற்படி மாபெரும் கிரிக்கெட் போட்டியை பிரதான அனுசரனையாளர்களான டயலொக் ஆசி ஆட்டா thepapare.com மற்றும் Dialog VIU மொபைல் App மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேற்படி கல்லூரிகளின் மாணவர்கள் , பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆதரவாளர்கள், கிரிக்கெட் அபிமானிகள் ஆகியோரின் நலன் கருதி Dialog TV யிலும் இப்போட்டி நேரடியாகக் காண்பிக்கப்படும். நலன்விரும்பிகள் மற்றும் கிரிக்கெட் அபிமானிகள் ஆகியோரும் சுகாதார நெறிமுறைகளுக்கேற்ப பாதுகாப்பான முறையில் இப்போட்டிகளை கண்டுகளிப்பதை இது உறுதி செய்வதாக அமையும்.
டயலொக் ஆசி ஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட் , ரக்பி, கரப்பந்தாட்ட மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளின் அனுசரணையாளர்களாவர். அத்துடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்ட போட்டிகள், கழக ரக்பி , பிரீமியர் கால்பந்து, பாடசாலை கிரிக்கெட், ஜூனியர் கரப்பந்தாட்டம் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளுடன் - இராணுவ பாரா விளையாட்டு, தேசிய பாரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான அனுசரணையையும் டயலொக் ஆசிஆட்டா வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.