Body

ஒரு அணி, ஒரு இலக்கு: விளையாட்டினூடே மக்களை ஒன்றிணைத்தல்

 

JICA - Dialog அனுசரணையில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை வவுனியா மற்றும் குருணாகலில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு நேரலையில் காணும் வாய்ப்பளிக்கப்பட்டது

டிசம்பர் 12, 2022         (கொழும்பு)

 

JICA-Dialog Partnership brings FIFA World Cup Football

‘ஃபிபா’ உலகக் கிண்ண போட்டிகளில் ஜப்பான் மற்றும் கோஸ்டாரிகா இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தை கண்டு ரசிக்கும் குருநாகலை சேர்ந்த மாணவர்கள்

JICA-Dialog Partnership brings FIFA World Cup Football

வவுனியாவில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த 8 பேர் கொண்ட மாணவர்கள் கால்பந்து போட்டியை விளையாடுகின்றார்கள்.

தற்போது கட்டாரில் நடைபெற்றுவரும் ‘ஃபிபா’ உலகக் கிண்ண 2022 கால்பந்தாட்ட போட்டிகளுடன் முழு உலகமும் மூழ்கியுள்ள நிலையில், குருணாகல் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளுக்கு ஃபிபா உலகக் கிண்ண போட்டிகளில் ஜப்பான் மற்றும் கொஸ்ட்டரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியை நேரலையில் பார்க்கவும் ஒருவருக்கொருவர் நட்புரீதியான விளையாட்டுகளை விளையாடவும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா மற்றும் சர்வதேச ஜப்பான் கூட்டுறவு முகவரகம் (JICA - Japan International Corporation Agency) ஆகியன ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை அண்மையில் மேற்கொண்டிருந்தன.

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் மகளிர் மற்றும் ஆடவர் கால்பந்தாட்ட அணிகளும், குருணாகல் ஸ்புட்னிக் சர்வதேச கல்வி நிலையத்தின் கால்பந்தாட்ட வீர - வீராங்கனைகளும் வவுனியாவில் தமது அபிமானத்திற்குரிய கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடியும் மகிழ்வு கொண்டனர்.

இதன்போது, அணிக்கு 8 பேர் கொண்ட நட்பு ரீதியிலான போட்டிகள் இரண்டு பாடசாலைகளையும் சேர்ந்த வீரர்களுடன் கலந்து விளையாடப்பட்டன. இதனால் ஒவ்வொரு அணியிலும் சரஸ்வதி வித்தியாலயம் ஆண்கள் அணி, பெண்கள் அணி மற்றும் ஸ்புட்னிக் சர்வதேச கல்வி நிலையம் ஆகியவற்றின் போட்டியாளர்கள் நட்பு மற்றும் தோழமை உணர்வுடன் விளையாடினர். ஒவ்வொரு அணிக்குள்ளும் பல வேறுபாடுகள் இருந்தன, அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினர். மற்றும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு வயது மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இலங்கையின் வெவ்வேறு மாகாணங்களில் இருந்து வந்ததால் வெவ்வேறு வாழ்க்கைமுறை பின்னணிகளைக் கொண்டிருந்தனர் , இவர்கள் அன்றுதான் முதன்முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள்; ஆனாலும், இந்த வேறுபாடுகள் எதுவுமே ஒரே அணி, ஒரே இலக்கு என்பதை மனதில் கொண்டு விளையாடுவதில் எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை.

மேற்படி, நட்புரீதியிலான போட்டிகளைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் கொஸ்ட்டரிக்கா அணிகளுக்கிடையிலான ஃபிபா உலகக் கிண்ண முதல் சுற்று ஆட்டம் பாடசாலை மண்டபத்தில் நேரலையில் காண்பிக்கப்பட்டது. அத்துடன், குருணாகலிலுள்ள ஜப்பானிய மொழி பாடசாலையான ஸ்புட்னிக் சர்வதேச கல்வி நிலையத்திலும் மேற்படி ஃபிபா உலகக் கிண்ண போட்டிகள் நேரடியாக காண்பிக்கப்பட்டது.

இதனூடே 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் விளையாட்டின் உற்சாகத்தையும் விளையாட்டுத்திறனையும் அனுபவிக்க முடிந்தது.

இலங்கையில் சுற்றுச்சூழல் கல்வி, நலன்புரி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி மற்றும் இலங்கையில் சிறுவயதுக் கல்வி ஆகிய சேவைகளை வழங்கிவரும் ஜப்பான் வெளிநாட்டு ஒத்துழைப்பு தன்னார்வத் தொண்டர்கள் (JOCV) இலங்கையில் தமது பணிகள் குறித்தும் ஸ்புட்னிக் சர்வதேச கல்வி மையத்தில் உரையாற்றியிருந்தனர். ஜப்பான் மற்றும் அதன் கலாச்சாரம் பற்றியும், இரு நாடுகளுக்குமிடையிலான அன்னியோன்யம் குறித்தும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குருணாகலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்புட்னிக் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஷாந்த ஆரியதாச அவர்கள் மற்றும் JICA வின் இலங்கைக்கான சிரேஷ்ட பிரதிநிதி யோஷிட கென்டாரோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதி பிரதம செயலாளர் உமாகாந்தன், வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் லெனின் அறிவாலன், சரஸ்வதி வித்தியாலய அதிபர் ஜே.மனோகௌரி, JICA வின் இலங்கைக்கான பிரதம பிரதிநிதி யமடா டெட்சுயா ஆகியோர் உட்பட வடமாகாண மற்றும் JICA அதிகாரிகள் ஆகியோர் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து மேற்படி வவுனியா சுந்தரபுரம் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

சுந்தரபுரம் என்பது JICA வின் நிதியுதவியுடன் ‘வளர்ச்சி கண்டுவரும் பிராந்தியங்களில் கிராமப்புற உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் (RIDEP)’ கீழ் பராமரிக்கப்பட்டுவரும் ஒரு கிராமமாகும். அதன் ஓர் அங்கமாக இதே சமகாலத்தில், RIDEP யினால் சுந்தரபுரம் குடிநீர் வழங்கல் துணைத் திட்டத்தின்கீழ் பெண்கள் தலைமை தாங்கும் இரண்டு குடும்பங்களுக்கு குழாய் மூலம் நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும் அதிதிகளினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை - ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கையில் JICA இன் 40 ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வருடம் ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இந்த நிகழ்வுகள் முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.