Body

தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு தேசத்தின் கௌரவிப்பு வழங்கப்பட்ட உன்னதமான நிகழ்வு

September 18th, 2022         Colombo

 

National Cricket team

தேசிய கிரிக்கெட் அணியை கௌரவிக்குமுகமாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைப்பெற்ற விழாவின்போது இலங்கை T 20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க ( 2022 ஆசிய வெற்றிக் கிண்ணத்துடன் ) உட்பட தேசிய கிரிக்கெட் அணியினர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்ஹ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ, டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்புன் வீரசிங்ஹ ஆகியோர் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

National Netball team

கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் தேசிய வலைப்பந்து அணிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பம். தேசிய வலைப்பந்து அணியின் தலைவி கயஞ்சலி அமரவங்ச (ஆசிய வலைப்பந்து வெற்றிக் கிண்ணத்துடன் ) உட்பட தேசிய வலைப்பந்து அணியினர் , இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்ஹ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ, டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்புன் வீரசிங்ஹ ஆகியோர் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இது செம்பியன்கள் உருவாகின்ற காலப் பருவமாகும். அதிலும் இலங்கை விளையாட்டுத்துறையின் வசந்தகாலமாகும். மீண்டெழ போராடும் ஒரு தேசத்திற்கு தேவையான மன உத்வேகத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் நமது விளையாட்டு வீரர்கள் வெற்றிக்கு மேல் வெற்றிகளைப் பெற்றுள்ளமை இந்நாட்டின் விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படுகின்ற ஓர் அத்தியாயமாக இது அமைந்துள்ளமை மறுக்க முடியாதது.

அடைந்த வெற்றிகளை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதுடன் நாட்டினதும், விளையாட்டினதும் வெற்றிகளை ஈட்டக்கூடிய திறன் கொண்டவர்களுக்கு போதிய உத்வேகத்தை அளிக்க வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும், அதற்கான கௌரவத்தை அளிக்க வேண்டிய தருணமும் இதுவேயாகும்.

அதற்கமைய ஜனாதிபதி செயலகம், விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கட் நிறுவனம், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம், சினமன் லேக்சைட் ஆகியன, இலங்கையின் விளையாட்டுத்துறையோடு வெற்றியிலும் தோல்வியிலும் என்றென்றும் உறுதுணையாக இருந்து, அனுசரணைகள் மூலம் ஆதரவளித்த டயலொக் ஆசியா ஆட்டா நிறுவனத்துடன் இணைந்து கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதியன்று சினமன் லேக்சைட் ஹோட்டல் வளாகத்தில் விளையாட்டுத்துறை வெற்றியாளர்களை கௌரவிப்பதற்கான விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்படி, கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நாட்டின் விளையாட்டுத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமை யும் வகையில் டுபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ண கிரிக்கெட் செம்பியனாகிய தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியினரும், சிங்கப்பூரில் சிங்கப்பூரை வீழ்த்தி ஆசிய வலைப்பந்து செம்பியனாகிய கயஞ்சலி அமரவன்ச தலைமையிலான நமது தேசிய வலைப்பந்து அணியினரும் , கடந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு பரா போட்டிகளில் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார, 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யுப்புன் அபேகோன், மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹிங்சா மற்றும் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இசுரு திலங்க ஆகியோர் சர்வதேச அளவில் இலங்கையின் வெற்றிச் சாதனைகளை பதிவு செய்தமைக்காக அவர்களை கௌரவிக்குமுகமாக இலங்கையின் முதல் குடிமகனான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான மேற்படி கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க உட்பட விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் அதிகாரிகள், தேசிய வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி உட்பட அச்சம்மேளனத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு தொடர்ச்சியாக 9 வருடங்களாக அனுசரணை வழங்கி வருவதுடன், இலங்கை வலைப்பந்து அணிக்கும் 4 வருடங்களாக அனுசரணை வழங்கி வருவதுடன் விளையாட்டுத்துறைக்கு ஊக்கத்தையும் அளித்து வருகின்ற டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், "ஆப்கானிஸ்தானுடனான போட்டியை தோல்வியுடன் ஆரம்பித்து பின்னர் ஆசியாவை முழுவதுமாக தோற்கடித்து தொடங்கிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நமது கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படுத்திய பாடம், கஷ்டங்களுக்கு மத்தியிலும் நமது தேசிய வலைப்பந்தாட்ட அணி பெற்ற வெற்றி மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் நமது வீரர், வீராங்கனைகள் பெற்ற வெற்றி ஆகியன மூலம் வெளிப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஆகியன ஒட்டுமொத்த தேசத்திற்கே உரிய முன்னுதாரணமாக அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் " என குறிப்பிட்டார்.

மேலும், இவ்விழாவில் ஆசியா உட்பட பொதுநலவாய நாடுகளின் பிராந்தியத்தில் பதக்கம் வென்றவர்கள் நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, இந்நிகழ்விற்கு மனிதாபிமான ரீதியிலான உன்னதமான ஒரு மதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு அத்தியாவசியமான மருந்துகளுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இந்நிகழ்வின்போது நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டின்மூலம் நாட்டிற்கு ஓர் உத்வேகத்தை அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களும் ஒரே மேடையில் இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்ட அதேவேளை ஆடல், பாடல், நடனம் என வண்ணமயமான ஓர் இரவாக இது அமைந்ததுடன், நாட்டின் எதிர்கால சாதனைகளுக்குத் தேவையான தைரியத்தையும் வலிமையையும் ஆற்றலையும் புகுத்திய ஓர் அழகான தருணமாகவும் இது அமைந்தது.

டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் தேசிய கரப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து போட்டிகள், தேசிய ஜூனியர் மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, இராணுவ பரா விளையாட்டு போட்டிகள், தேசிய பரா விளையாட்டு போட்டிகள், உலக பராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கின்ற இலங்கை பரா அணி ஆகியனவற்றிற்கும் அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.