Body

மனிதாபிமான நடவடிக்கையால் ஒளியடைந்த பாடசாலை

December 23, 2020        Colombo

 

news-1
news-1

எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட நிலம் மட்டுமே தெரிகிறது. கஷ்ட்டத்தை மட்டுமே கண்டு வாழும் பிரதேசம் அது. தகிக்கும் வெயிலில் புழுதியை பூசிகொண்ட மரங்கள், மெலிந்த விலங்குகள் உட்பட கறுத்த மனிதர்கள், என்று யாவரும், வளமான வாழ்வை எதிர்பார்த்திருக்கின்றனர். இத்தகையச் சூழலில் மனதை ஒருநிலைப்படுத்தி கொண்டு கல்வி புகட்டுவதென்றால் அது சுலபமான விடயமல்ல. இப்படியான கடினமான சுற்றாடலில் கல்விபயின்று வரும் கிவுலேகட பாடசாலை மாணவர்கள் சில தினங்களுக்கு முன் ஒரு அற்புதமான அனுபவத்தை அடைந்தார்கள். ஆம். டயலொக் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை குழுவினரால், அணல் காற்றடிக்கும் இப்பிரதேசத்திற்கு புது நம்பிக்கையை கொண்டு வரப்பட்டது.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் வழியில் திரியாயச் சந்தியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கிவுலேகட பாடசாலை, ஆரம்ப கல்வி தொடக்கம் சாதாரண தரம் வரை அங்கு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்தப் பாடசாலை, மாணவர்களின் அறிவுக்கண்ணை திறப்பதற்காய் இன்று வரை போராடி வருகிறது. மிகக் குறைந்தளவான வளங்களை கொண்ட இப்பாடசாலையில் 14 ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் 242 மாணவர்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில் கல்வி கற்று வருகிறார்கள்.

தங்கள் பிள்ளைகள், எதிர்காலத்தை வெற்றிகொண்டு பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால், கல்வி இன்றியமையாத விடயம் என்பதை உணர்ந்த பெற்றோர்கள், தங்களை அர்ப்பணித்து அயராது பாடுபட்டு வருகிறார்கள். தமது பிள்ளைகள் முகம் கொடுத்து வரும் சிரமங்கள் தொடர்பாக தாயொருவர் இவ்வாறு கூறினார்.

“இந்தப் பாடசாலைதான் எங்களுகிருக்கின்ற மிகப்பெரிய வளம். ஆனாலும் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் எமது பிள்ளைகள் பெரும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இதனால் அதிகமான பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்துகிறார்கள். இதற்கு முன்னர், ஒருவர் தண்ணீர் தாங்கி ஒன்றிக்கும், நீர்க் குழாய்கள் அமைப்பதற்கும் நிதி உதவி செய்திருந்தார். என்றாலும், போதியளவு தண்ணீர் கிடைக்காத காரணத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இதன்காரணமாக பெற்றோர்களே நெடுந்தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து இந்த தாங்கியை நிரப்புகிறார்கள்;.”

எமது நாட்டில் பாடவிதானங்களும் மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பெறுபேறுகளும் யாவருக்கும் பொதுவானதாக இருக்கின்ற போதும், சுகாதார வசதிகள் குன்றிய இப்பிரதேச மாணவர்களுக்கு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கல்விபயில்கின்ற பெரும்பாலான மாணவர்கள் அனுபவிக்கின்ற சலுகைகள் எட்டாக் கனியாகவே இருக்கின்றது. மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றான நீர்க்கூட சரியான முறையில் கிடைக்காது அவதியுறும் கிவுலேகட பாடாசலை மாணவர்கள், இதனை ஒரு சவாலாகவே எடுத்து கொண்டு, கல்வியிலும் விளையாட்டிலும் மற்றும் ஏனைய துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

தண்ணீர் பிரச்சினையால் இம்மாணவர்கள் முகங்கொடுக்கும் கஷ்ட்டங்களையும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளையும் கருத்தில் கொண்டு, டயலொக் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைக் குழு தனது நடவடிக்கையினை தாமதிக்காது முன்னெடுத்தது. இப்பிரதேசத்தில் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் குழாய் கிணறுகள் வழியாக நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனோடு நீர் குழாய் அமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் என்பனவற்றை மேம்படுத்துவதற்காக தமது ஒத்துழைப்பை வழங்கும் மனிதாபிமான நடவடிக்கை குழுவினர், தாமே முன்நின்று அத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி முடித்தமை சிறப்பம்சமாகும்.

எதிர்பார்ப்புகள் நொறுங்கிபோகின்ற வேளையிலும் சளைக்காது, புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்கி வாழ்ந்து வரும் இம்மக்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த மனிதாபிமான நடவடிக்கை குறித்து கிவுலேகட பாடசாலையின் அதிபர் கே.பீ.கே.டீ பண்டார அவர்கள் இவ்வாறு கருத்துரைத்தார். “ஆசிரியர்கள் என்றவகையில் எத்தனை கஷ்ட்டங்கள் வந்தாலும் நாங்கள் தொடர்ந்தும் மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றோம். என்றாலும், மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வதற்கும் ஒரு எல்லையுண்டு. டயலொக் மனிதாபிமான நடவடிக்கை ஊடாக எமக்கிருந்த அடிப்படை பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு வழி தேடி கொள்ள முடிந்தது. இது தற்போதைய மாணவர்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் சேர்த்து பெற்றுகொண்ட வெற்றியாகும். இது தொடர்பாக முன்நின்று உழைத்த டயலொக் நிறுவனத்தாருக்கு எமது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நான் எனது நன்றியினை மனப்பூர்வமாக தெரிவித்துகொள்கிறேன்.”