'ஃபிபா' கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நீர்கொழும்பு கடற்கரை மற்றும் CH&FC ஆகிய இடங்களில் அகன்ற திரையில் நேரலையில் ஒளிபரப்பாகும்
இந்த உலக நிகழ்வை காட்சிப்படுத்துவதில் JICA, Dialog மற்றும் Tourist Board ஆகியன கைகோர்க்கின்றன
டிசம்பர் 15, 2022 கொழும்பு
படத்தில் (இ-வ) யோஷிதா கென்டாரோ - சிரேஷ்ட பிரதிநிதி, JICA இலங்கை அலுவலகம், திசும் ஜயசூரிய - தலைவர், இலங்கை கன்வென்ஷன் பீரோ, சிரந்த டி சொய்சா - டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் துணைத் தலைவர் / ஊடக வணிகத் தலைவர், யமடா டெட்சுயா - தலைமைப் பிரதிநிதி, ஜைக்கா இலங்கை அலுவலகம், நாமல் ரலபனாவ - மூத்த நிபுணர், JICA இலங்கை அலுவலகம்
உலகக் கிண்ண கால்பந்து ஜுரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள கால்பந்தாட்ட இறுதிப்போட்டியை ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன நிறுவனம், இலங்கை சுற்றுலா சபை மற்றும் இலங்கையின் முதன்மை தொலைத் தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா ஆகியன ஒன்றிணைந்து, அர்ஜன்டீனா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையேயான இந்த மாபெரும் நிகழ்வை நேரலையில் ஒளிபரப்புகின்றன. இவ் ஒளிபரப்பு இரவு 8.30 மணி முதல் நீர்கொழும்பு கடற்கரை பூங்கா (Negombo Beach Park) மற்றும் கொழும்பு CH&FC மைதானத்தில் அகன்ற திரையில் ஒளிபரப்பாகும்.
உலகில் அதிக எண்ணிக்கையினரால் பார்க்கப்படும் விளையாட்டான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் முதலாவது குழுநிலை சுற்றுப் போட்டிகள் நொவம்பர் 20 ஆம் திகதியன்று, கட்டாரின் டோஹா நகரில் ஆரம்பமாகியது. மத்திய கிழக்கு நாடொன்றில் முதல் முறையாக நடைபெறுகின்ற உலகக் கால்பந்து போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன நிறுவனம், இலங்கை சுற்றுலா சபை மற்றும் டயலொக் ஆசி ஆட்டா ஆகியன ஒன்றிணைந்து நீர்கொழும்பு கடற்கரை பகுதியில் FIFA உலகக் கிண்ண ரசிகர்களுக்கான இந்த ஒளிபரப்பை மேற்கொள்கின்றன. குறிப்பாக, இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்ற சூழலில் அதனை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்து விருந்தோம்பும் நோக்கிலுமே மேற்படி ஒளிபரப்பு நடைபெறுகின்றது. நீர்கொழும்பில் உள்ள FIFA இனால் அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் வலயத்தில் நேரடி இசைக்குழுக்கள், DJ இசை, நடன நிகழ்ச்சிகள், மெஜிக் காட்சிகள், உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதல் தர தொலைக்காட்சியான Dialog Television, FIFA உலகக் கிண்ண 2022 ற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ Direct to Home PayTV பங்காளியாகும்.
JICA மற்றும் Dialog ஆகியன ஒன்றிணைந்து குருணாகல் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளுக்கு FIFA கிண்ண உலகக் கிண்ண போட்டிகளில் ஜப்பான் மற்றும் கொஸ்டரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியை நேரலையில் கண்டுகளிக்கவும், பாடசாலை மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்புரீதியான சில விளையாட்டுகளை விளையாடவும் அண்மையில் வாய்ப்பளித்திருந்தன.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மொஸ்கோ லுஷிங்கி அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெற்றி கொண்டு தனது இரண்டாவது உலக கிண்ண பட்டத்தை உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.