பொருள் விரிவாக்கம்

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பதற்காக டயலொக் ஆசிஆட்டா மற்றும் IITM பிரவர்த்தக் இடையிலான உத்திபூர்வக் கூட்டாண்மை

தொழில்நுட்பம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஊடாக இந்தியா-இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

2026 அக்டோபர் 23         கொழும்பு

 

கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை IITM பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனின் முதன்மை நிறைவேற்று அதிகாரி டொக்டர் எம். ஜே. சங்கர் ஜெயராமன் (இடமிருந்து 3 ஆவது) மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க (இடமிருந்து 5 ஆவது) ஆகியோர் பரிமாறிக்கொண்ட போது எடுத்த படம். அருகில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கு சந்தோஷ் ஜா (இடமிருந்து 4 ஆவது) காணப்படுகிறார்.
படத்திலுள்ளவர்கள் (இடமிருந்து வலமாக): ஸ்ரீமதி தேவிகா லால் (பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர், இந்திய உயர்ஸ்தானிகராலயம்); திரு. அரவிந்தன் சௌந்தரராஜன் (துணை முகாமையாளர், IITM பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்); டொக்டர் எம். ஜே. சங்கர் ஜெயராமன் (முதன்மை நிறைவேற்று அதிகாரி, IITM பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்); மேன்மைதங்கு சந்தோஷ் ஜா (இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்); திரு. சுபுன் வீரசிங்க (குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); மற்றும் திருமதி விராந்தி அத்திகல (குழும நிறுவனச் செயலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி).

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையில் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னேற்றும் நோக்கில், இந்தியாவின் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனுடன் (IITM Pravartak Technologies Foundation) உத்திபூர்வப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

தேசிய மற்றும் சமூக சவால்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உருவாக்குவதற்காக சர்வதேச நிபுணத்துவம், மற்றும் தொழிற்துறைப் பங்காளர்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. மேலும், இது இலங்கையின் ஆராய்ச்சித் திறன்களை வலுப்படுத்துவதோடு, புதிய யோசனைகளை நிஜ உலகப் பயன்பாடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், டயலொக் நிறுவனம் தொழில்நுட்பச் செயல்பாட்டாளராகச் செயல்பட்டு, IITM பிரவர்த்தக்கின் ஆராய்ச்சி வலையமைப்புகளை தொழிற்துறைப் பங்காளர்களுடன் இணைக்கும். இக்கூட்டாண்மையானது கண்டுபிடிப்பு மற்றும் தொழில் தொடக்க மையம், பயன்பாட்டு ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித மைய தீர்வுகள், தொழிற்துறை திறன் மேம்பாடு, மற்றும் சர்வதேச அறிவுப் பகிர்வு ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும்.

ஆரம்பக்கட்டக் கூட்டாண்மைக்கான சாத்தியமான பகுதிகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி உரையாடல் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப அடிப்படையிலான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் மனித-யானை மோதல்களுக்கான தீர்வுகள் ஆகியவை ஆரம்பக்கட்டக் கூட்டாண்மையின் முக்கிய சாத்தியக்கூறுகளாகும். இவை இலக்கு மையப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் முன்னோடித் திட்டங்கள் மூலம் ஆராயப்பட்டு, அவற்றின் முடிவுகளுக்கு ஏற்ப மேலும் விரிவுபடுத்தப்படும்.

இக்கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கனம் சந்தோஷ் ஜா அவர்கள், "இந்தியாவும் இலங்கையும் நீண்டகால வரலாற்றுப் பிணைப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய பன்முகத் தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன. எமது இருதரப்புப் பங்களிப்பு தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியிலான ஒத்துழைப்பு இரு நாடுகளின் நிறுவனங்களுக்கும் மக்களுக்குமான தொடர்பை மேலும் ஆழப்படுத்தப் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மைக்கு மற்றொரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இந்த முயற்சியை நான் மனதார வரவேற்கிறேன்," எனக் குறிப்பிட்டார்.

IITM பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனின் முதன்மை நிறைவேற்று அதிகாரி டொக்டர் சங்கர் ஜெயராமன் கருத்துத் தெரிவிக்கையில், "கல்வி சார்ந்த ஆராய்ச்சிக்கும் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்த ஒத்துழைப்பு ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது. டயலொக், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், நிஜ உலகத் தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்கவும் கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடியும். ஆராய்ச்சி சமூகம் மற்றும் தொழிற்துறை ஆகிய இரண்டிற்கும் மதிப்பைக் கூட்டக்கூடிய பயனுள்ள கூட்டாண்மையை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்," எனக் குறிப்பிட்டார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், "தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பானது, நிஜ உலகச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதிலும் மக்களுக்கும் சமூகங்களுக்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதிலும்தான் உள்ளது என டயலொக் நிறுவனத்தில் நாங்கள் நம்புகிறோம். இக்கூட்டாண்மையின் மூலம், நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்க உலகளாவிய நிபுணத்துவத்தை இலங்கையின் திறமையாளர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இலங்கையர்களின் வாழ்வையும் தொழில்களையும் வளம்படுத்தும் எங்களது முயற்சிகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி, இக்கூட்டாண்மையை நனவாக்கிய இந்திய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயக் குழுவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முயற்சியும் தெளிவான இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய முடிவுகளால் வழிநடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இக்கூட்டாண்மையானது விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கு முன், அதன் திறனை மதிப்பீடு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களுடன் கட்டம் கட்டமான அணுகுமுறையைப் பின்பற்றும்.