பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா மற்றும் SLIIT கூட்டிணைவிலான 'தொழில்துறை கருத்தரங்கம் 2023'

2023 ஏப்ரல் 19         கொழும்பு

 

e-Swabhimani Awards

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து மாலபேயில் உள்ள SLIIT வளாகத்தில் 'தொழில்துறை கருத்தரங்கம் 2023' ஒன்றை நடத்தியது.

இந்நிகழ்வு பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த முன்னோடிகளை ஒன்றிணைத்து தற்போதைய தொழில்துறை சவால்கள் குறித்து விவாதிக்கவும் ஆராயவும் புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்திற்காக கல்வியாளர்களுடன் பயனுள்ள ஒத்துழைப்புக்கான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. Zone 24x7, Meu Labs, ACL Cables, LTL, MIDAS, MAS, Magicbit, Divor Automation மற்றும் FIMER ஆகியவை Dialog உடன் கைகோர்த்தவாறு இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொண்டதுடன், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தொழில்துறை எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து சிந்தனை ஊட்டல்களையும் மேற்கொண்டனர்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை புத்தாக்க அதிகாரியும் பிரதம கட்டிடக் கலைஞருமான எந்தனி ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், "புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதால், படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்புமிக்க கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை மேம்படுத்துவதற்கு டயலொக் ஆகிய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இலங்கையின் 12 முன்னணிப் பல்கலைக்கழகங்களில் 'Dialog Future Zone' புத்தாக்க மையங்கள், நிஜ உலகப் பிரச்சினைகளுக்கு புதுமையான, செலவு குறைந்த தீர்வுகளை உருவாக்குவதற்கான தளத்தை வழங்குகின்றன. அடுத்த தலைமுறைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தேவையான கருவிகளை அவர்களுக்கு வழங்குவதும், படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பின் கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலம், முடிவிலா சாத்தியங்கள் குறித்து எல்லைகளைத் தாண்டி ஆராய்வதற்கான அச்சமற்ற இளம் மனங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

லங்கா எலெக்ட்ரிசிட்டி கொம்பனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொது முகாமையாளரும், நிகழ்வின் பிரதான பேச்சாளருமான டொக்டர் நரேந்த டி சில்வா, தனது உரையின் போது தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். LECO வலையமைப்பில் ஸ்மார்ட் எலக்ட்ரிசிட்டி மீட்டர்களுக்கான தகவல்தொடர்பு தொகுதிகளை உருவாக்க டயலொக் உடன் பணிபுரிந்த அனுபவத்திலிருந்து சில கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார், அவர் கூறியதாவது "தொழில்துறை பயன்பாடு இல்லாமல் செய்யப்படும் ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி பயனற்றது, மேலும் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்காத அதனையொத்த தொழில் முயற்சிகளும் நீண்ட கால மதிப்புடையவை அல்ல. எனவே, சந்தையில் தற்போது நிலவும் வெற்றிடத்தை நிரப்ப தையல் தொழில் மற்றும் கல்வித்துறையில் Future Zone முன்னணியில் உள்ளது என்பது பொருத்தமானது" என்றார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சமன் திலகசிறி கூறுகையில், "SLIIT இன் தொலைநோக்குப் பார்வையின்படி பொறியியல் பீடம் எப்பொழுதும் தொழில்துறையுடனான தனது உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மாணவர்கள் தமது ஆண்டு இறுதி ஆய்வு அறிக்கைகளாக தொழில்துறை சார்ந்த ஆய்வு அறிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இத்தகைய தொழில்துறை கருத்தரங்குகள் இந்த செயல்முறையை எளிதாக்குகிறது. மேலும் தொழில்துறையின் ஆராய்ச்சித் தேவைகளைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தொழில்துறையினரை நாம் நேரடியாக அழைக்கிறோம். SLIIT பொறியியல் பீடம் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இடையேயான இந்த கூட்டு முயற்சி நீண்ட காலம் நீடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.