பொருள் விரிவாக்கம்

டயலொக் அனுசரணையில் 93வது கபிலங்களின் சமர்

2023 பெப்ரவரி 17         கொழும்பு

 

Dialog Powers 93rd Battle of the Maroons

படத்தில் இடமிருந்து வலமாக : ஆனந்த கல்லூரி அணியின் தலைவர் -நெத்ம சமரவீர, ஆனந்த கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுக் குழுவின் தலைவர் பிமல் விஜயசிங்க, ஆனந்த கல்லூரியின் அதிபர் லால் திஸாநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் டெலி-உள்கட்டமைப்பு தலைமை அதிகாரி உபாலி கஜநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பிஎல்சியின் இடர் மற்றும் இணக்கத்தின் குழும தலைவர், அசங்க பிரியதர்ஷன, நாலந்த கல்லூரியின் அதிபர் - திலக் வத்துஹேவா, "Battle of the Maroons " சார்பாக நாலந்த கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுக் குழுவின் தலைவர்- வருண ரத்னவீர, நாலந்த கல்லூரி அணியின் தலைவர் - சனுல் அத்துகோரல

இலங்கையின் முதன்மை பௌத்த பாடசாலைகளான ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையிலான "The Battle of the Maroons" எனும் வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 93வது போட்டி, 2023 மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொவிட் கட்டுப்பாடுகள் மற்றும் பிற காரணிகளாலும் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் சீர்குலைந்திருந்த நிலையில் இரண்டு வருட இடைவெளியின் பின்னர், மேற்படி "The Battle of the Maroons" போட்டியானது பார்வையாளர் வருகைக்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி, இரண்டு பாடசாலைகளினதும் தற்போதைய மற்றும் பழைய மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

69 வருட காத்திருப்பிற்கு பின்னர், கொழும்பு நாலந்த கல்லூரி, கடந்த வருட போட்டியில் அவர்களது சகோதரப் பாடசாலையான ஆனந்த கல்லூரியை தோற்கடித்து கைப்பற்றிய கலாநிதி என்.எம். பெரேரா சவால் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் ஆனந்த கல்லூரி இம்முறை கடும் பிரயத்தனத்தில் ஈடுபடும் என கருதப்படுகின்றது.

இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்குமிடையிலான மறைந்த பி டி எஸ் குலரத்ன சவால் கிண்ண வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி 2023 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி ஞாயிறன்று "The Battle of the Maroons" வரலாற்றில் 46 ஆவது தடவையாக அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் ஆனந்த கல்லூரி 26 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளதுடன் , நாலந்த கல்லூரி 15 வெற்றிகளை பெற்றுள்ளது.

மேற்படி 93வது Battle of the Maroons போட்டிகள், Dialog Television அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் ThePapare.com மற்றும் Dialog ViU app ஊடாக LIVE stream இல் பார்வையிடலாம்.

இம்முறை போட்டிகளில், ஆனந்த கல்லூரி அணிக்கு சிறந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரான நெத்ம சமரவீர தலைமை தாங்குவார். இவர் தொடர்ச்சியாக 3 வருடங்களாக அணி சார்ப்பாக விளையாடி வருபவராவார். அதேவேளை, நாலந்த கல்லூரி அணிக்கு சிறந்த வலதுகை துடுப்பாட்ட வீரரான சனுல் அத்துகோரல தலைமை தாங்குவார். இவர் தொடர்ச்சியாக 4 வருடங்களாக அணி சார்ப்பாக விளையாடி வருகின்றார்.

இலங்கையின் இரண்டு முதன்மையான பௌத்த பாடசாலைகளான ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி ஆகியன சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அதிக எண்ணிக்கையிலான (55 க்கும் மேற்பட்ட) தேசிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளன. அவர்களுள் மறைந்த பந்துல வர்ணபுர, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம, மார்வன் அதபத்து, மஹேல ஜயவர்தன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் நாட்டை வழிநடத்திய பெருமையைப் பெற்ற குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரான மறைந்த பந்துல வர்ணபுர நாலந்த கல்லூரியை சேர்ந்தவர் என்பதுடன், 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன ரணதுங்க ஆனந்த கல்லூரியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இரண்டு கல்லூரிகளுக்குமிடையே நடைபெற்றுள்ள 2 நாள் போட்டித் தொடரில் ஆனந்த கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கின்ற அதேவேளை, நாலந்த கல்லூரி 07போட்டிகளில் வெற்றி கொண்டுள்ளது. அதேவேளை 73 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளன.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, பிரீமியர் கால்பந்து மற்றும் பராலிம்பிக் விளையாட்டுக்கள், இராணுவ பரா விளையாட்டுகள், மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுகளுக்கு இலங்கை அணியை வலுப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி இலங்கை விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றது.