பொருள் விரிவாக்கம்

டயலொக் வரலாற்று சிறப்புமிக்க றோயல்-தோமஸ் சமருக்கு 19வது முறையாக அனுசரணை அளிக்கிறது

2024 பிப்ரவரி 21         கொழும்பு

 

Dialog Powers Junior National Netball Championship 2023

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 19வது முறையாகவும் உத்தியோகபூர்வ அனுசரணையாளர் என்ற ரீதியில் ‘Battle of the Blues’ 2024 இற்கு தனது ஆதரவை வழங்குகிறது. கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை பரி.தோமாவின் கல்லூரிக்கு இடையில் கௌரவ. டி. எஸ் சேனநாயக்க ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இப்போட்டிகள் மார்ச் 7, 8 மற்றும் 9ம் திகதிகளில் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறும். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட ‘Mustang’s கிண்ண’ போட்டி மார்ச் 16ம் திகதி அதே மைதானத்தில் நடைபெறும்.

இந்த 145வது கிரிக்கெட் போட்டி Dialog Television - ThePapare TV HD (அலைவரிசை இலக்கம் 126)ல் நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்துடன் ThePapare.com மற்றும் Dialog ViU App ஆகியவற்றில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும், இலங்கையிலுள்ள பாடசாலைகள் மத்தியிலான கிரிக்கெட்டை உயர்த்தும் நோக்கத்துடன் 'Play for a Cause' எனும் அறக்கட்டளை முன்னெடுப்பை டயலொக் முன்னெடுத்துள்ளது. பெறும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் ரூ.1,000 உம் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் ரூ.10,000 உம் எனும் பெருந்தன்மைமிக்க உறுதிமொழிக்கமைய கடந்த வருட போட்டியில் ரூ.1,128,000 நன்கொடையாக சேர்ந்தது. இந்த வருமதிகள் றோயல் கல்லூரி மற்றும் பரி.தோமாவின் கல்லூரி அதிபர்மாரின் ஆலோசனையின்படி பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த அளப்பரிய முயற்சி நாட்டிலுள்ள தகுதிவாய்ந்த நான்கு பாடசாலைகளுக்கு ஆதரவளித்து மேம்படுத்த உதவியாய் அமைந்தது.

இவ்வாண்டுச்சமரில் மஹித் பெரேரா தலைமையில் பரி.தோமாவின் மைந்தர்களும், 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியின் தலைவரான சினெத் ஜயவர்தன தலைமையில் வேத்தியர்களும் களம் காணவுள்ளனர். 144 ஆண்டுகால பழமையும் செழுமையும் வாய்ந்த ‘றோயல்-தோமிய’ போட்டித்தொடர் உலகில் இடையறாது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டித்தொடர்களில் இரண்டாவது இடத்தை பெறுகிறது. முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் அடிலெய்ட் பிரின்ஸ் அல்ஃப்ரெட் கல்லூரிக்கும் இடையிலான போட்டித்தொடர் இதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆரம்பமானதாகும். பெருமதிப்புமிக்க இப்பாரம்பரியம் 1880ல் காலி முகத்திடலில் ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. இவ்விடத்தில் தற்போது தாஜ் சமுத்ரா ஹோட்டல் அமைந்துள்ளது. போட்டியில் கலந்துகொள்வதற்காக இரு அணியினரும் பேர வாவி மீது படகு செலுத்தி வந்த வரலாறும் உண்டென கூறப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஆஷஸ் தொடரை காட்டிலும் பழமை வாய்ந்தது இச்சமர் என்றால் மிகையில்லை. இதுவே உலக கிரிக்கெட் அரங்கில் இதன் முக்கியத்துவத்தை சான்றுபகர்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க இச்சமர் ஆட்ட நற்றிறத்துக்கும் தோழமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி நூற்றாண்டு கடந்து நிலைக்கும் இரு பாடசாலைகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையின் சின்னமாக மிளிர்கிறது. ‘Roy-Tho’வின் களங்கள் திறம்வாய்ந்த கிரிக்கெட்டர்களின் பிறப்பிடமாகவும் பின்னாளில் நாட்டின் தலைவர்கள் தோன்றிய கருவறையாகவும் திகழ்ந்து வருகின்றன. பரி. தோமாவின் மண்ணிலிருந்து நாட்டின் தந்தை அமரர் கௌரவ. டி. எஸ். சேனாநாயக்க அவர்கள் தோன்றினார். அவரின் ஞாபகார்த்தமாக இந்த கிண்ணம் பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மகன் அமரர் கௌரவ. டட்லி சேனாநாயக்கவும் இதே மண்ணின் மைந்தர் ஆவார். இருவரும் சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையின் பிரதமராக கடமையாற்றியுள்ளனர். அதேவேளை றோயல் கல்லூரி அமரர் கௌரவ. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலவை அளித்தது. இவரும் நாட்டின் பிரதமாராக கடமையாற்றியவர். அத்துடன் இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமரர் ஜே. ஆர். ஜெயவர்தனவை நம் நாட்டுக்கு அளித்தது.

தற்போதைய நிலவரப்படி இரு பாடசாலைகளிலும் றோயல் கல்லூரி 36 வெற்றிகளுடன் 35 வெற்றிகள் பெற்ற பரி. தோமாவின் கல்லூரியை விஞ்சி முன்னிலையில் உள்ளது. இதில் 1885ல் றோயல் கல்லூரி அணி ஒன்பது ஆட்டங்களுக்கு அனைவரும் ஆட்டமிழக்க இரண்டாம் நாளில் ஆடமுடியாது என மறுக்கவும் பரி. தோமாவின் கல்லூரிப்படி வெற்றியாகவும் றோயல் கல்லூரியின் படி சமநிலையாகவும் கருதப்பட்டது(இரு கல்லூரிகளினதும் நினைவிதழ்களில் விளக்கப்பட்டுள்ளதன் படி). 144வது நீலச்சமரிலே டசிஸ் மஞ்சநாயக்க தலைமையிலான அணி 181 ஓட்டங்களை குவித்து தமது 2016ம் ஆண்டுக்கு பின்னரான முதல் வெற்றியை வேத்தியர்கள் வசமாக்கினர். 144வது சமரில் அவர்கள் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தை தொடர்ந்து இந்த கேடயம் தற்சமயம் றோயல் கல்லூரியின் வெற்றிக்கோப்பைகளுக்கு மத்தியில் மணிமகுடமாய் ஜொலிக்கின்றது

“றோயல் இல்லாமல் பரி. தோமா இல்லை பரி. தோமா இல்லாமல் றோயல் இல்லை” என சென்ற ஆண்டு றோயல் கல்லூரி அதிபர் கூறியதைப்போல களத்திலும் வெளியிலும் இரு பாடசாலைகளும் பரஸ்பரம் மரியாதை, தோழமை, ஆட்ட நற்றிறம், மற்றும் நட்பு ரீதியான ஆலோசனைகளை தமக்கிடையே பரிமாறி ஒன்றரை நூற்றாண்டாக தொடர்ந்து வரும் பாரம்பரியத்தின் மேன்மையை பேணிக்காக்கின்றனர்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃபிற்கு பிரதான அனுசரணையாளராக திகழ்வதுடன், பராலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய பரா விளையாட்டுகளுக்கும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கும் அனுசரணை அளிக்கிறது. இவற்றுடன் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியவற்றிற்கு தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.