டயலொக் ஆசிஆட்டா அனைத்து இலங்கையர்களுக்கும் டிஜிட்டல் நலனை வழங்கும் பொருட்டு GSMA தொழில்நுட்ப திட்டத்தில் இணைந்துள்ளது
ஜனவரி 11, 2022 கொழும்பு
அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களின் திறன் மட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிக டிஜிட்டல் உள்ளடக்கத்தை செயல்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மாற்றுத்திறனாளிகளுக்கான மொபைல் தொழில்நுட்பங்களை அதிகளவில் அணுகவும் பயன்படுத்தவும் மற்றும் சமூக மற்றும் பொருளாதார உள்ளடக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் GSMA (கைபேசி இணைப்பு செயற்பாட்டாளர்களின் உலகளாவிய தொழில் அமைப்பு) எனும் நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகின்ற 'அசிஸ்டிவ் டெக்' எனும் திட்டத்தினூடே டிஜிட்டல் கட்டமைப்பொன்றை இயக்குவதற்கான திட்டத்தில் இணைந்துள்ளது.
மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பங்குபெறுவதற்கும் உதவித் தொழில்நுட்பத்திற்கான அணுகல் வழிமுறையானது பெரிதும் முக்கியத்துவம் பெறுவதால், புதுமைகளினூடே டிஜிட்டல் உள்ளடக்கிய இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு டயலொக் உறுதிபூண்டுள்ளது. செவிகேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடுடையோர் ஆகியோர்களுக்கான விசேட நிலையமாக செயற்படுகின்ற இரத்மலானையில் அமைந்துள்ள செவிகேள் குறைபாடுடையோர்களுக்கான மத்திய நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேச்சு சிகிச்சை மத்திய நிலையம் போன்றவற்றினூடாக டயலொக் வழங்குகின்ற தொழிநுட்ப ரீதியிலான சேவை முன் முயற்சிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இந்நிலையங்கள் செவிப்புலன் மற்றும் பேச்சு குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு மையங்களாக இயங்கி வருகின்றன.எவ்வித கட்டணமும் அறவிடாமல் இந்நிலையங்களினூடாக சேவைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் பெறுவோருக்கும், மாணவர்களுக்கும் இந்நிலையங்கள் மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளன. டயலொக்கின் மற்றுமொரு முன்முயற்சியாக கருதக்கூடிய petralex (பெட்றாலெக்ஸ்) என்பதானது பயனர்களின் பொதுவான பாவனையிலுள்ள வயர் தொடர்புள்ள 'ஹெட்செட்(headset) மற்றும் 'ப்ளூடூத் ஹெட்செட்' (bluetooth headset) ஆகியவற்றில் செவிப்புலன் திறனை மேம்படுத்தத்தக்க வகையில் பயன்படக்கூடிய ஒருமும்மொழியிலான சாதனமாகும். இது செவித்திறன் ஸ்கிரீனிங் சோதனைகளை செயல்படுத்தவும் தனிப்பயனாக்கப்பட்ட செவிப்புலனை மேம்படுத்தும் சாதனமாக பயன்படுத்தவும் உதவுகிறது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், "ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக இந்த டிஜிட்டல் கொள்கை கோட்பாடுகளில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செவித்திறன், பார்வை மற்றும் பேச்சு திறன் ஆகியவற்றையிட்டு நாம் கவனம் செலுத்திவருகின்றோம். மேலும், வெறுமனே டிஜிட்டல்உள்ளடக்கம் என மட்டுமன்றி மாற்றுத்திறனாளிகளை டிஜிட்டல் முறையில் செயற்படுத்துவதில் பெரும் முன்னேற்றத்தை இதனூடே நாம் அடைகின்றோம். GSMA உடன் சேர்த்தல் துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் பல வருடங்களாக நாம் செயற்பட்டு வந்துள்ளதுடன் இந்நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு சக்தியின்பால் நாம் மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளோம். எனவே, GSMA யின் பின்புலமாக உள்ள அதன் கொள்கைகளானது மாற்றுத்திறனாளிகளை சமூகமயப்படுத்துவதில் பயனுள்ள வகையிலான வழிமுறைகளில் நிறுவன ரீதியிலும், தொழில்துறை ரீதியிலும் எம்மை வழிநடத்தும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
இந்த முயற்சியில் இணைந்துக் கொள்வதில் டயலொக்கின் செயற்பாடுகளை வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ள GSMA யின் மகளிர் மற்றும் சமூக இணைப்பு தலைவர் கிளயர் சிப்தோர்ப் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்கின்ற தடைகளை நீக்குவதற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையாகும். எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பயன்தரு வகையில் அணுகக்கூடியதாக இருப்பதை கைபேசிதுறையினர் உறுதிசெய்வதற்கான காலநேரம் இதுவாகும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். மேலும்,டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஒப்டஸ், ஒரேன்ச் குரூப், சஃபாரிகொம் பிஎல்சி, டெலி ஃபோனிகா குரூப், டார்க் செல் , வொடாகொம் சௌத் அஃப்ரிக்கா மற்றும் செய்ன் குரூப் ஆகிய நிறுவனங்கள் நம்முடன் ஏற்கனவே இது தொடர்பான கொள்கை உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். மேலும், இனிவரும் நாட்களில் இன்னும் பல துறைசார் நிறுவனங்கள் இந்த அர்ப்பணிப்பில் நம்முடன் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன் " என்றார்.
GSMA அசிஸ்டிவ் டெக் திட்டமானது, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக டிஜிட்டல் சேர்க்கையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், தற்போது மாற்றுத்திறனாளிகள் டிஜிட்டல் அணுகல்களை மேற்கொள்வதில் முகம் கொடுக்கின்ற தடைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில், பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகளுடன், கைபேசி தொழில்துறைசார் நடவடிக்கைக்கான ஒரு கட்டமைப்பை அமைக்கும் 'கொள்கைகளை' அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.