பொருள் விரிவாக்கம்

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை Dialog நிறைவு செய்தது

முழுமையான உபகரணங்களுடன் கூடிய அவசரகால சிகிச்சைப் பிரிவை (ETU) வழங்கி அவசரகால மருத்துவ சேவைகளை வலுப்படுத்துகிறது

2026 நவம்பர் 05         கொழும்பு

 

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை Dialog நிறைவு செய்தது

நினைவுக் கல்வெட்டு திறப்பு விழா. இடமிருந்து வலமாக: அசித் டி சில்வா, சிரேஷ்ட சமூகப் புதுமைக்கால முகாமையாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; டாக்டர் நிரஞ்சி விஜேசூரிய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS), நுவரெலியா மாவட்டம்; அசங்க பிரியதர்சன, குழுமத் தலைமை நிறுவன அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லசந்த தெவரப்பெரும, குழுமத் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், இலங்கை; அனுஷ்க திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர், நுவரெலியா மாவட்டம்; ஜகத் அதிகாரி, செயலாளர், மத்திய மாகாண சுகாதார அமைச்சு; டாக்டர் ஹிமேஷ் வீரதுங்க, பிரதேச மருத்துவ அதிகாரி, கொத்மலை மருத்துவமனை; அஜித் முரமுதலி, தலைவர், கொத்மலை பிரதேச சபை.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதோடு, அதிநவீன உபகரணங்களுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவையும் (ETU) வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டுள்ள இந்த புதிய வசதியானது, அவசரகால மருத்துவச் சேவைகளை வலுப்படுத்துவதுடன், கொத்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் மேம்படுத்தும்.

'டித்வா' (Ditwah) அனர்த்தத்தின் பின் டயலொக்கின் 420 மில்லியன் ரூபாய் பெறுமதியான மீளெழுச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுகாதாரம் மற்றும் கல்விக் கட்டமைப்புகளைப் புனரமைத்து வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ததை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் பயனடையும் இரண்டாவது வைத்தியசாலையாக கொத்மலை திகழ்கிறது. எதிர்வரும் மாதங்களில் மேலும் சில சுகாதாரப் புனரமைப்பு முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. அத்துடன், டிஜிட்டல் கல்விக்கான வாய்ப்பை வலுப்படுத்தும் வகையில் 20 பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்பக் (ICT) கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

இந்த புதிய அவசர சிகிச்சைப் பிரிவு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் 2026 நவம்பர் 5 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொத்மலை வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் ஹிமேஷ் வீரதுங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமப் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமப் பிரதான நிறுவனச் செயற்பாட்டு அதிகாரி அசங்க பிரியதர்ஷன ஆகியோருடன் அரச பிரதிநிதிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியசாலை முகாமைத்துவத்தினர் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் எந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை வலுவான பொதுச் சுகாதார அமைப்புமுறை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சையானது வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நிர்ணயிக்கக் கூடிய அவசரகாலச் சிகிச்சைப் பிரிவுகளை, சமூக மட்டத்தில் மேம்படுத்துவது இதற்கு மிக அவசியமாகும். நாடு முழுவதும் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியுடன் செயற்பட்டு வருவதுடன், இத்தகைய முயற்சிகளை ஆதரிப்பதில் டயலொக் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மையில் நடைபெற்ற சிலாபம் வைத்தியசாலைப் புனரமைப்பு முதல், கொத்மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி வரை, டயலொக் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்புடன் எமது மக்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய அது காட்டிவரும் அர்ப்பணிப்பினை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.”என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமப் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்கள் குறிப்பிடுகையில், “இலங்கையின் மீட்சி மீதான எமது அர்ப்பணிப்பு என்பது, பாதிக்கப்பட்டவற்றை மீளக் கட்டுவது மாத்திரம் அல்ல; மாறாக, எமது சமூகங்கள் எதிர்காலத்தை மேலும் வலுவாகவும் சிறந்த தயார்நிலையுடனும் எதிர்கொள்ள உதவுவதாகும். கொத்மலையில் இந்த வசதியை நிறைவு செய்திருப்பது, அண்மையில் சிலாபத்தில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட பங்களிப்பைத் தொடர்ந்து, அந்தப் பயணத்தில் அமைந்த மற்றொரு முக்கியமான படியாகும். வரவிருக்கும் ஆண்டுகளில் மக்களுக்குச் சேவை செய்யவுள்ள இத்தகைய மேம்பாடுகளை வழங்குவதற்காக, அரசாங்கத்துடனும் சுகாதார நிபுணர்களுடனும் இணைந்து பணியாற்றக் கிடைத்தமையை நாம் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளின் மூலமாகவே இலங்கையர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள, நிலையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்” என்றார்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2026 அக்டோபர் மாதம் அத்தியாவசிய கருவிகளுடன் கூடிய சத்திரசிகிச்சை பிரிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்நோக்கியியல் பிரிவு என்பன கையளிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் புனரமைப்பு முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சிகிச்சை முதல் சத்திரசிகிச்சை மற்றும் நோயறிதல் பராமரிப்பு வரை, அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக டயலொக் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நடவடிக்கைகள் யாவும் கூட்டாகப் பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு டயலொக் வழங்கி வரும் நீண்டகால பங்களிப்பின் அடிப்படையில், அத்தியாவசியப் பொதுச் சேவைகளை வலுப்படுத்தவும், சமூகங்களை ஆதரிக்கவும், நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யவும் அரசாங்கத்துடனும் சுகாதார நிறுவனங்களுடனும் டயலொக் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகிறது.

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை Dialog நிறைவு செய்தது

கொத்மலை பிரதேச மருத்துவமனையில் நவீனப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பிரிவைப் (Emergency Treatment Unit) பார்வையிடும் அழைப்பாளர்கள்.