பொருள் விரிவாக்கம்

International Customer Experience Awards 2026 இல் டயலொக் தங்க விருதை வென்றுள்ளது

2026 நவம்பர் 26         கொழும்பு

 

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஒவ்வொரு வாடிக்கையாளர் தொடர்புத் தளத்திலும் (Touchpoint) தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காக, International Customer Experience Awards (ICXA) 2026 விருதுகளில் தங்க விருதை வென்றுள்ளது. வாடிக்கையாளர் சார்ந்த புத்தாக்கங்களில் டயலொக் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீட்டை இச்சாதனை எடுத்துக்காட்டுவதுடன், உலகளாவிய வாடிக்கையாளர் அனுபவ அரங்கில் இலங்கையின் திறமையையும் பறைசாற்றுகிறது.

வாடிக்கையாளர் மையப்படுத்தல் (Customer centricity), வாடிக்கையாளர் மூலோபாயம், பணிப் பண்பாடு, புத்தாக்கம் மற்றும் அளவிடக்கூடிய வாடிக்கையாளர் பெறுபேறுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் "Customers at the Heart of Everything" பிரிவின் கீழ் இவ்விருது வழங்கப்பட்டது.

50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து விண்ணப்பங்களை ஈர்க்கும் International Customer Experience Awards, உலகின் முன்னணி வாடிக்கையாளர் அனுபவ விருதுத் திட்டங்களில் ஒன்றாகப் பரவலாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர் தொடர்புத் தளத்திலும் உயர்ந்த தரத்தைப் பேணும் அதேவேளையில், வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்குத் தொடர்ந்து செவிமடுத்தல், புத்தாக்கம் மற்றும் சேவை மேம்பாடு ஆகியவற்றின் ஊடாக வாடிக்கையாளர் அனுபவத்தை மெருகூட்ட டயலொக் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை இச்சாதனை பிரதிபலிக்கிறது.

இச்சாதனை குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் பிரதானி (Chief of Group Customer Experience) அயோமல் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், "டயலொக் மீது எமது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கைக்காகவும், நாம் தொடர்ச்சியாக மேம்படுவதற்கு உதவும் அவர்களின் பெறுமதிமிக்க பின்னூட்டங்களுக்காகவும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள எமது அணிகள் நாளாந்தம் வெளிப்படுத்தும் முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அர்த்தமுள்ள அங்கீகாரமே இவ்விருதாகும். திரைமறைவில் இடம்பெறும் ஆயிரக்கணக்கான உரையாடல்கள், தீர்மானங்கள் மற்றும் மேம்பாடுகளினாலேயே சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் உருவாக்கப்படுகிறது; எமது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த பெறுபேறுகளை வழங்குவதில் எமது ஊழியர்களின் கூட்டுப் பங்களிப்பை இவ்விருது பிரதிபலிக்கிறது. உலகளாவிய தளத்தில் அங்கீகரிக்கப்பட்டமைக்கு நாம் நன்றியுடையவர்களாக இருப்பதுடன், இலங்கையில் வாடிக்கையாளர் அனுபவத்தின் தரத்தை மேலும் உயர்த்துவதற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், Best Use of AI in Telecommunications பிரிவிலும் டயலொக் இறுதிப் போட்டியாளராகத் (Finalist) தெரிவு செய்யப்பட்டுள்ளது; இது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தப் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இப்புதிய அங்கீகாரம் டயலொக் இன் வாடிக்கையாளர் அனுபவப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைவதுடன், புத்தாக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றின் ஊடாக வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் விதத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன், உலகளாவிய அரங்கில் போட்டியிட்டு வெற்றிபெறும் இலங்கை நிறுவனங்களின் வளர்ந்து வரும் ஆற்றலையும் இது எடுத்துக்காட்டுகிறது.