பொருள் விரிவாக்கம்

தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுறவின் மூலம் இலங்கையின் ஒலிம்பிக் பயணத்திற்கு பலம் சேர்க்கும் டயலொக் ஆசிஆட்டா

2026 ஜூலை 24         கொழும்பு

 

Left Image - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமத் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும, இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் திரு. அஸங்க செனவிரத்னவுடன் உத்தியோகபூர்வ கூட்டாண்மை ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொள்கிறார்.

Right Image - இடமிருந்து வலமாக: திரு. சுதர்ஷன முத்துத்தந்திரி - பிராண்ட் மேனேஜர் (Sports Marketing), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. ரியாஸ் ஹனீபா - சந்தைப்படுத்தல் செயல்பாட்டுத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. ஹர்ஷ சமரநாயக்க - துணைத் தலைவர் (Group Marketing), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. லசந்த தெவரப்பெரும - குழுமத் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. அஸங்க செனவிரத்ன - தலைவர், இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOCSL); திருமதி. நிலூ ஜெயதிலக - துணைத் தலைவர், NOCSL; திரு. பிரிதிவிராஜ் பெரேரா - துணைத் தலைவர், NOCSL; மற்றும் திரு. ரிப்டி பாஹ்மி - பொதுச் செயலாளர், NOCSL ஆகியோர் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மேற்கொண்ட கூட்டாண்மையின் உத்தியோகபூர்வ தொடக்க விழாவில் கலந்துகொண்ட போது.

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநரும், விளையாட்டுத் துறையின் தீவிர ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 'Los Angeles 2028 Olympic Games' வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் (NOCSL) உத்தியோகபூர்வ தொலைத்தொடர்புப் பங்காளராக இணைந்து, நாட்டின் ஒலிம்பிக் கனவுகளுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையின் மூலம், 'Commonwealth Games', 'Asian Games' மற்றும் 'Olympic Games' ஆகிய விளையாட்டு தொடர்களுக்கான இலங்கை வீரர்களின் பயணத்திற்கு டயலொக் ஆதரவளிக்கும். இதன் மூலம் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கும், உள்ளூர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்கும் உதவும் தனது அர்ப்பணிப்பை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சர்வதேச அரங்கில் தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ஈட்டி எறிதல் வீரர் ரமேஷ் தரங்க நாட்டின் முன்னணி பதக்க வாய்ப்புகளில் ஒருவராக உருவெடுத்துள்ள நிலையில், இலங்கை வரலாற்றைப் படைக்க வலுவான நிலையில் இருக்கும் தருணத்தில் இந்தக் கூட்டாண்மை இணைந்துள்ளது. இலங்கை தனது வரலாற்றில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது; 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டு ஓட்டத்தில் டன்கன் வைட் (Duncan White) வெள்ளிப் பதக்கத்தையும், 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் சுசந்திகா ஜெயசிங்க (Susanthika Jayasinghe) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமத் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும கருத்து தெரிவிக்கையில்: "இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, டயலொக் இலங்கை விளையாட்டுத் துறையை வலுப்படுத்துவதில் உறுதியுடன் உள்ளது. விளையாட்டானது தேசத்தை ஒன்றுபடுத்தும் மற்றும் தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடனான எங்களது கூட்டாண்மை, சர்வதேச அரங்கில் விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க உதவுவதற்காக நாங்கள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீட்டைப் பிரதிபலிப்பதாகும். 'Glasgow' இல் நடைபெறும் 'Commonwealth Games' இல் இருந்து இலங்கை அணி தனது பயணத்தைத் தொடங்கி 'Road to Los Angeles Olympics 2028' நோக்கி நகரும் இந்த வேளையில், தங்கம் வெல்லும் நாட்டின் இலக்கிற்குப் பலம் சேர்த்து, வீரர்களின் சாதனைப் பயணத்திற்கும் தேசிய பெருமைக்கும் ஆதரவாக நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்."

இந்தக் கூட்டாண்மை குறித்து இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் அஸங்க செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்: "விளையாட்டின் சக்தியால் ஒவ்வொரு இலங்கையரையும் இணைப்பதுடன், நாடு தழுவிய ரீதியில் சமூகங்களை ஊக்கப்படுத்தும், ஒன்றுபடுத்தும் மற்றும் கட்டியெழுப்பும் வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களது தொலைநோக்காகும். டயலொக் நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த தலைமுறையினருக்காக முதலீடு செய்வதுடன், இளைஞர்கள் அச்சமின்றி கனவு காணவும், சாதனைகளைப் படைக்கவும், சர்வதேச அரங்கில் இலங்கையைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தவும் நாங்கள் வழிவகுக்கிறோம்."

டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் தேசிய கிரிக்கெட், வாலிபோல் மற்றும் Esports அணிகளின் பெருமைக்குரிய அனுசரணையாளராகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன் 'Sri Lanka Golf Open' மற்றும் 'National Para Games' ஆகிய தொடர்களுக்குப் பலம் சேர்ப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கும், 'World Paralympic Games' போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிக்கும் பிரதான அனுசரணையாளராகச் செயல்படுகிறது. மேலும், நாளைய வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பிற்கு அமைவாக, 'President’s Gold Cup Volleyball', தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் 'Netball' தொடர்கள், மற்றும் 'Schools Rugby' ஆகியவற்றுடனும் நிறுவனம் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.