'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்': டிட்வா நிவாரணப் பணிகளுக்காக டயலொக் ரூ. 420 மில்லியன் நிதியுதவி
2026 ஜனவரி 06 கொழும்பு
புகைப்படத்தில் இடமிருந்து வலம்: ஏ. பி. எம். அஷ்ரப், மேலதிக செயலாளர் (அபிவிருத்தி), பிரதமர் அலுவலகம்; அசங்க பிரியதர்ஷன, குழும முதன்மை நிறுவன அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கலாநிதி குமார விக்கிரமசிங்க, மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்), சுகாதார அமைச்சு; கலாநிதி அனில் ஜாசிங்க, செயலாளர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு; நாலக களுவேவ, செயலாளர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு; கௌரவ கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு; கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கைப் பிரதமர்; கௌரவ எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் செயலாளர்; வருண ஸ்ரீ தனபால, பதில் செயலாளர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு; வசந்த தெவரப்பெரும, குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் (ஓய்வு), பணிப்பாளர் நாயகம், இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு.
இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC), டிட்வா புயலைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கத்தின் "இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்" (Rebuilding Sri Lanka) திட்டத்திற்காக ரூ. 420 மில்லியனை வழங்க உறுதியளித்துள்ளது. இந்த நிதியுதவியானது சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் மேற்கொள்ளப்படும் முக்கியமான மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இதில் அத்தியாவசிய வைத்தியசாலை உட்கட்டமைப்புகளைச் சீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) வசதிகளைப் புனரமைத்தல் போன்றவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.
இந்த உறுதியளிப்பானது, இலங்கை பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் டயலொக் நிறுவனத்தின் உயர் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்போது, தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க, முன்மொழியப்பட்ட கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான கூட்டுப் பங்காண்மை (Partnership) முறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சுகாதாரத் துறையில், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை, கொத்மலை பிரதேச வைத்தியசாலை, மதுல்கலை பிரதேச வைத்தியசாலை மற்றும் புத்தளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் முக்கிய உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் மேம்படுத்தவும் டயலொக் நிறுவனம் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படும். கல்வித் துறையில், புயலால் பாதிக்கப்பட்ட 20-இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் கணினி ஆய்வகங்களைப் புனரமைக்கவும், மாணவர்களின் தொடர்ச்சியான கற்றலுக்கு ஆதரவாக ICT உட்கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பை மீட்டெடுக்கவும் கல்வி அமைச்சுடன் இணைந்து டயலொக் செயற்படும்.
இந்தத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, “இவ்வளவு பாரியதொரு இயற்கை அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்புப் பணிகளில், தேசிய முன்னுரிமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச-தனியார் பங்காண்மைகள் (Public-Private Partnerships) மிக முக்கியமானவை. 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்' திட்டத்தில் டயலொக் நிறுவனம் கொண்டுள்ள இந்த உறுதியான அர்ப்பணிப்பை அரசாங்கம் வெகுவாகப் பாராட்டுகிறது. இது அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுப்பதற்கும், எதிர்கால இடர் முகாமைத்துவத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கும் பேருதவியாக அமையும். அதேவேளை, கல்வி அமைச்சர் என்ற வகையில், புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளையும் கல்வித் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்துவதன் அவசியத்தை நான் வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீண்டகாலப் பயன்களைப் பெற்றுக்கொடுக்க இத்தகைய கூட்டு முயற்சிகள் மிகவும் இன்றியமையாதவை,” என்றார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துக் கூறுகையில், “பேரிடர் காலங்களுக்குப் பிந்தைய மீட்சிப் பணிகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தடையற்ற மருத்துவச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யச் சுகாதார உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிக அவசியமாகும். முக்கியமான வைத்தியசாலை வசதிகளைப் புனரமைக்கவும், தரம் உயர்த்தவும் டயலொக் நிறுவனம் வழங்கும் இந்த ஆதரவானது, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் மீளுந்திறனை (Resilience) மேம்படுத்துவதற்குப் பாரிய பங்களிப்பை வழங்கும்,” என்றார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க குறிப்பிடுகையில், “டிட்வா புயல் நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் சவாலாகவும் அமைந்துள்ளது. எமது இந்த அர்ப்பணிப்பின் ஊடாக, அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை மீட்டெடுப்பதற்கும், மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளோம். அரசாங்கத்தின் தேசிய மீட்புப் பணிகளுக்கு அமைவாக, தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்களிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்,” என்றார்.
டிட்வா புயலின் போதும், அதற்குப் பின்னரும், டயலொக் நிறுவனம் தனது 8 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் (SMS), மொபைல் டேட்டா, அவசரகால Home Broadband டேட்டா மற்றும் Dialog Television அலைவரிசைகளை இலவசமாக வழங்கியதன் மூலம் ஆதரவளித்தது. இந்த ஆதரவானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மிக முக்கியமான தருணங்களில் அத்தியாவசியத் தொடர்புகளைப் பேணவும், உடனுக்குடன் தகவல்களைப் பெறவும் உதவியது.
இந்த நிதியுதவியானது, தேசம் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களில் தேசிய மீட்புப் பணிகளுக்காக டயலொக் நிறுவனம் வழங்கி வரும் நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு தொடர்ச்சியாகும். கடந்த 2016-2017 காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘சினேஹே சியபத’ திட்டத்தின் கீழ் அரநாயக்க, கொட்டப்பொல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளில் மாதிரி கிராமங்களை நிர்மாணித்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு டயலொக் வாழ்வாதாரம் அளித்தது. அதனைத் தொடர்ந்து, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால ஆதரவை வழங்க ‘ரேலி டு கேயார்’ (Rally to Care) நிதியம் உருவாக்கப்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் (2020-2021), நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் முழுமையான வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளை (ICUs) அமைத்துக் கொடுத்து நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு வலுசேர்த்தது.
மேலும், 2022 பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள் விநியோகத்தைச் சீர்செய்ய ‘தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர’ (National Fuel Pass) முறைமையை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதோடு, ‘மனுதம் மெஹெவர’ செயற்திட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்தது.