இலங்கையின் முதலாவது AI ஆற்றல் கொண்ட கடற்றொழில் ஆலோசனைக் குரல் உதவியாளரான 'Sayuru AI' சேவையை டயலொக் அறிமுகப்படுத்துகிறது
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 828 என்ற இலக்கத்தின் ஊடாக அணுகலாம்
2026 நவம்பர் 25 கொழும்பு
(இடமிருந்து வலமாக): நுஷான் ராஜபக்ஷ (Nushan Rajapaksha), இணை வடிவமைப்பாளர் - AI தீர்வுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; தருஷ வணிகசேகர (Tharusha Wanigasekara), முகாமையாளர் - டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் (குழும இடர், இணக்கப்பாடு மற்றும் நிலைபேற்றாண்மை), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; அசங்க பிரியதர்ஷன (Asanga Priyadarshana), குழுமப் பிரதான நிறுவனத் தொடர்பாடல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கௌரவ ஸ்டெப்னி பெர்னாண்டோ (Hon. Stepni Fernando), பாராளுமன்ற உறுப்பினர், கம்பஹா மாவட்டம்; மலித் பெர்னாண்டோ (Malith Fernando), வானிலை ஆய்வாளர், இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்; ஹர்ஷநாத் ஜயசிங்க (Harshanath Jayasinghe), துறைமுக முகாமையாளர், நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகம்.
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , இலங்கையின் முதலாவது AI ஆற்றல் கொண்ட கடற்றொழில் ஆலோசனைக் குரல் சேவையான Sayuru AI-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடற்றொழில் சமூகத்தினரும் ஏனைய பங்குதாரர்களும் எந்தவொரு கைபேசியிலிருந்தும் 828 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அத்தியாவசியக் கடற்றொழில் தகவல்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் இச்சேவையானது, பாதுகாப்பான கடற்றொழில் நடைமுறைகள், தகவல் சார்ந்த தீர்மானம் எடுத்தல் மற்றும் இலங்கையின் கடற்றொழில் துறையில் பரந்த டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு (digital inclusion) ஆதரவளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் ஊடாக வாழ்வை வளப்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Sayuru AI, உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த AI ஆற்றல் கொண்ட குரல் உதவியாளர், டயலொக்கின் தற்போதைய Sayuru ஊடாடும் குரல் பதிலளிப்பு (IVR) சேவையை மேலும் மேம்படுத்துகிறது; இதன் மூலம் பயனர்கள் வழக்கமான மெனு அடிப்படையிலான (menu-based) முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயல்பான குரல் உரையாடல்கள் ஊடாகக் கடற்றொழில் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 24 மணிநேரமும் செயற்படும் இச்சேவையானது, கடல்சார் வானிலை முன்னறிவிப்புகள், கடலில் பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுறுத்தல்கள், மீன் சந்தை விலைகள் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த வழிகாட்டல்கள் ஆகிய தகவல்களை வழங்குகிறது.
ஸ்மார்ட்போன் (smartphone) அல்லது இணைய இணைப்பு எதுவுமின்றி சாதாரண குரல் அழைப்பின் மூலமே அணுகக்கூடியதாக இருப்பதால், கடற்றொழில் துறையில் நிலவும் முக்கியத் தகவல் இடைவெளிகளை நிவர்த்தி செய்ய Sayuru AI உதவுகிறது. Sayuru கைபேசிச் செயலி (mobile application) தனது தற்போதைய வசதிகளைத் தொடர்ந்து வழங்கும் அதேவேளை, இந்தப் புதிய AI உதவியாளர் டயலொக்கின் தற்போதைய Sayuru IVR சேவையின் ஊடாக அறிமுகப்படுத்தப்படுகிறது; இது அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் உள்ளடக்கிய ஒரு வழிமுறையின் ஊடாக அத்தியாவசியத் தகவல்களைப் பரந்தளவில் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது.
தகவல் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அத்தியாவசியத் தகவல்களை எளிதில் பெறுவதற்கும் குரல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவ முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில், அரசாங்கப் பிரதிநிதிகள், கடற்றொழில் துறைசார் பங்குதாரர்கள் மற்றும் கடற்றொழில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இது குறித்துக் கூறுகையில், "இலங்கையின் பொருளாதாரத்திலும் நாடெங்கிலுமுள்ள மக்களின் வாழ்வாதாரத்திலும் கடற்றொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. கடற்றொழில் சமூகங்களுக்கு உரிய நேரத்தில் பொருத்தமான தகவல்கள் கிடைப்பதை உறுதிசெய்வது, வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் இத்துறையின் நிலைத்து நிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். Sayuru AI போன்ற முன்னெடுப்புகள் ஊடாக அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, அத்தியாவசியச் சேவைகளின் எல்லையை விரிவுபடுத்தவும், கடற்றொழில் சமூகங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகள் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் உறுதிசெய்ய உதவும். பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து நவீன, தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் அறிவு சார்ந்த தொழில்துறையை நோக்கி நகரும் இம்முன்னெடுப்பு, இலங்கையின் கடற்றொழில் துறையில் புதிய மாற்றத்திற்கான முக்கியப் படியாகவும் திகழ்கிறது. இந்த மாற்றம் கடற்றொழில் துறையின் தாக்குப்பிடிக்கும் திறனையும் உற்பத்தித் திறனையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ.எல்.கே. விஜேமான்னகே (Mr. A.L.K. Wijemannage) தெரிவிக்கையில், “இலங்கையின் கடற்றொழில் சமூகங்களின் பாதுகாப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் உரிய நேரத்திலான மற்றும் நம்பகமான வானிலைத் தகவல்கள் மிக முக்கியமானவை. Sayuru ஊடான எமது ஒத்துழைப்பின் மூலம், முக்கியமான கடல்சார் வானிலைத் தகவல்களையும் எச்சரிக்கைகளையும் அவை தேவைப்படுபவர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிந்துள்ளது. இச்சேவையில் AI இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், எளிமையான மற்றும் பரிச்சயமான குரல் உரையாடல் ஊடாக இத்தகவல்களை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக்கி கடற்றொழில் சமூகங்களுக்கு இன்னும் சிறப்பாகச் சேவையாற்றும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. கடற்றொழில் சமூகங்கள் சிறந்த தகவல் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளவும், கடலில் மிகவும் பாதுகாப்பாகச் செயற்படவும் உதவும் வகையில், உரிய நேரத்திலான வானிலைத் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை வழங்கி Sayuru AI-க்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம்” என்றார்.
அறிமுக நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமப் பிரதான நிறுவனத் தொடர்பாடல் அதிகாரி திரு. அசங்க பிரியதர்ஷன (Mr. Asanga Priyadarshana), "செயற்கை நுண்ணறிவின் (AI) உண்மையான பெறுமதி, நிஜ உலக சவால்களுக்குத் தீர்வு காண்பதிலும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதிலுமே தங்கியுள்ளது என டயலொக் நம்புகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் Sayuru சேவையை அறிமுகப்படுத்தியது முதல், இலங்கையின் கடற்றொழில் சமூகங்களுக்குச் சிறப்பாகச் சேவையாற்றும் நோக்கில் புதிய வசதிகள் மற்றும் சேவைகளுடன் இத்தளத்தை நாம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம்; இப்போது AI தொழில்நுட்பத்துடன் இதனை மேம்படுத்தியிருப்பது அப்பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாகும். துறைசார் நம்பகமான அறிவை, குரல்வழி அணுகல் மற்றும் AI ஆற்றலுடன் ஒன்றிணைப்பதன் மூலம், அன்றாடம் இத்தகவல்களில் தங்கியுள்ள சமூகங்களுக்கு அத்தியாவசியத் தகவல்கள் எளிதில் கிடைப்பதை நாம் உறுதிசெய்கிறோம். இலங்கை தனது டிஜிட்டல் மாற்றத்திற்கான இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் நிலையில், தொழில்துறைகளை வலுப்படுத்தவும், சமூகங்களை மேம்படுத்தவும், தேசிய முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும் புத்தாக்கங்களைப் பயன்படுத்துவதில் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என்றார்.
இலங்கையின் கடற்றொழில் சமூகங்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியத் தகவல்களைப் பெறுவதை வலுப்படுத்தவும், பாதுகாப்பான தீர்மானங்களை மேற்கொள்ள ஆதரவளிக்கவும், மேலும் நிலைத்திறன் கொண்ட மற்றும் டிஜிட்டல் ரீதியில் உள்ளடக்கப்பட்ட கடற்றொழில் துறைக்குப் பங்களிக்கவும் Sayuru AI ஆற்றல் கொண்டுள்ளது. Sayuru AI சேவையைப் பெற, எந்தவொரு டயலொக் கைபேசி இணைப்பிலிருந்தும் 828 என்ற எண்ணை அழைத்து தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இச்சேவையுடன் உரையாடலாம்.