பொருள் விரிவாக்கம்

டயலொக், MAS, Hemas மற்றும் சர்வோதய ஆகியன ஒன்றிணைந்து அவசரத் தேவையுடையோருக்கு உதவுவதற்காக ‘மனிதநேய ஒன்றிணைவு’ நிவாரண திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன

100,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்கப்படுகின்றன

ஏப்ரல் 9th, 2022         கொழும்பு

 

Manudam Mehewara

படத்தில் இடமிருந்து வலம்: PwC ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, சுஜீவ முதலிகே, சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, Hemas Holdings PLC இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் மற்றும் MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ

Manudam Mehewara group

படத்தில் இடமிருந்து வலம்: சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு,பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ரவி சிறிவர்தன, Voice of Asia Network இன் தலைமை நிர்வாக அதிகாரி அஜாஸ் ஷபீக், PwC ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, சுஜீவ முதலிகே, சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, Hemas Holdings PLC இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன், MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ, EAP வலையமைப்பு பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் அலைவரிசை பிரிவு தலைவர் ரங்கன டி சில்வா, பவர் ஹவுஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் சந்தைப்படுத்தல் குழும பணிப்பாளர் துஷார பெரேரா

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், டயலொக் ஆசிஆட்டா, MAS Holdings Pvt Ltd, Hemas Holdings PLC, சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் PwC Sri Lanka ஆகியன இணைந்து ‘மனிதநேய ஒன்றிணைவு’ நிவாரண திட்டமொன்றை கூட்டாக ஆரம்பித்துள்ளன .

பாதிப்பிற்குள்ளாகியுள்ள சமூகங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில் தொலைநோக்குப் பார்வையுடன், ‘மனிதநேய ஒன்றிணைவு’ நிவாரண திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வோதயா உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்டமேற்படி பெருநிறுவன கூட்டணியுடன் டயலொக் கைகோர்த்துள்ளது, இதற்கமைய, இந்த பெருநிறுவன கூட்டு நிறுவனங்கள் நாட்டில் 100,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ள மற்றும் வறுமையில் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு அவசரகால நிவாரணங்களை வழங்கவுள்ளன. குறித்த பெருநிறுவன கூட்டாளர்களின் இணக்கத் தேவைகளின்படி நிதி நிர்வாகத்தையும் அறிக்கையிடலையும் கண்காணிக்கும் முயற்சியை PwC மேற்கொண்டுள்ளது. மேலும், ITN, Siyatha Swarnawahini, TV Derana மற்றும் வசந்தம் ஆகியன ஊடக பங்காளிகளாக இந்த முயற்சியில் இணைந்துள்ளன. மேற்படி ‘மனிதநேய ஒன்றிணைவு’ நிகழ்வானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி செயற்படத் தொடங்கும், அதற்கமைய அனைத்து 25 மாவட்டங்களிலும் அவசர நிவாரணம் தேவைப்படும் இடங்களில், குடும்பங்களுக்கு இதனூடாக அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “100,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் இந்த முயற்சியில் எம்முடன் இணைந்து செயற்படுகின்ற MAS, Hemas நமது செயற்றிட்ட செயற்பாட்டு பங்காளியான சர்வோதய மற்றும் பொறுப்புக்கூறல் பங்குதாரரான PwC ஆகியோருக்கு நாம் நன்றி கூறுகின்றோம். நாடு முழுவதும் 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் நம்பகமான டிஜிட்டல் பங்காளியாக உள்ள டயலொக் நிறுவனமாகிய நாம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்கள் அத்தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். விளிம்பு நிலை சமூகங்களுக்கு அவர்களின் மிகப்பெரிய தேவைகளின் போது அவர்களுக்கு உதவ இதுபோன்ற நிவாரண முயற்சிகளை நாங்கள் எப்போதும் முன்னெடுத்து வருகின்றோம். எதிரில் உள்ள சவாலின் அளவைக் கருத்தில் கொண்டு, இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு இலங்கை பெருநிறுவனங்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்"என்றார்.

மேற்படி நிவாரண திட்டம் குறித்த அறிமுக விழாவில் உரையாற்றிய MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ அவர்கள், “MAS என்பது அதன் சமூக மனசாட்சிக்கு பெயர் பெற்ற ஒரு அமைப்பாகும், மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் MAS நிறுவனமும் முக்கிய பங்காளராக செயற்பட கிடைத்துள்ளதை பெரும் பாக்கியமாக நாம் கருதுகின்றோம். நமது வீடு என்று நாம் அழைக்கின்ற தாய் நாட்டிற்கு சர்வோதயவுடன் இணைந்து பலமுறை பணிபுரிந்துள்ளதால், இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமையும் திறனும் எவருக்கேனும் இருக்குமாயின், அது நிச்சயமாக சர்வோதயதான் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சர்வோதய நிறுவனமானது அதன் நோக்கம் மற்றும் அவர்களின் நாடளாவிய வளங்களின் வலையமைப்புடன் சிறந்த செயற்பாட்டு பங்காளியாக இருந்து வருகின்றது. எனவே, இலங்கையில் உள்ள ஏனைய பெருநிறுவனங்களும் இவ்வாறே எம்முடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இந்த வேலைத்திட்டத்தினூடாக நம்முடன் ஒன்றிணைந்து இக்கட்டான சூழ்நிலையில் இந்நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீளச்செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிய உத்வேகம் பெறுவார்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இது நமது தேசம், நமது மக்கள் மற்றும் நமது கூட்டுப் பொறுப்பு." என்றார்

Hemas Holdings பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் , “இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாடு முழுவதிலுமுள்ள எமது மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும். ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குதல், சமத்துவமின்மையை அகற்றுவதில் கவனம் செலுத்துதல் போன்ற நமது நோக்கங்களுடன் மேற்படி நிவாரண திட்டமும் ஒத்துப் போகின்றது. எனவே, அடுத்து வரும் மாதங்களில், நாம் நமது பங்காளிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவதுடன் நமது சமூகங்கள் மற்றும் சேவையாளர்களின் சுமையை குறைக்கும் பங்களிப்பினை தொடர்ந்தும் வழங்குவோம் " என்றார்..

சர்வோதய சிரமதான சங்கத்தின், “குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதற்காக இந்த மனிதாபிமான முயற்சியை முன்னெடுக்கும் நோக்கில் டயலொக், MAS மற்றும் Hemas போன்ற உயர்தர நிறுவனங்களுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எண்ணிக்கைகளின் அடிப்படையிலான அறிவியல் அளவுகோல்கள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகளை நாங்கள் அடையாளம் காண்போம், மேலும் இந்த நிவாரண திட்டத்தில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். உணவுப் பாதுகாப்பின்மை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதால், இந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அப்பால் வீட்டுத்தோட்டம் அமைத்தல் போன்ற நிலையான தீர்வுகளை வழங்குவதிலும் ஒரு படி தாண்டிச்செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஏனைய பெரு நிறுவன நிறுவனங்களையும் இந்த முயற்சியில் நம்முடன் ஒன்றுசேர வருமாறு நான் அழைக்கின்றேன், இதன்மூலம் கூட்டாக, நாட்டில் உள்ள நமது சொந்த சகோதர சகோதரிகளை நாம் பராமரித்துக்கொள்ள முடியும்." என்றார்.

பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை மேற்படி ‘மனிதநேய ஒன்றிணைவு’ வேலைத்திட்டமானது 60-90 நாட்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.