பொருள் விரிவாக்கம்

தேசிய விளையாட்டில் இளைஞர்களுக்கு வலுவூட்டுமுகமாக டயலொக் ஜனாதிபதி கிண்ண கரப்பந்து 2024 போட்டிகள் மார்ச் 30 இல் ஆரம்பமாகின்றன

2024 மார்ச் 28         கொழும்பு

 

Dialog Powers President’s Gold Cup Volleyball Tournament 2024

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்களால் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமை செயலாளர் ஏ.எஸ் நாலக்க அவர்களிடம் அனுசரணைக்கான காசோலையை கையளிப்பதை படத்தில் காணலாம். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாமம் மற்றும் ஊடக துணைத் தலைவர் ஹர்ஷ சமரநாயக்க (இடது பக்கம்), இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஜே.என். பிரபாத் இந்திக்க (வலது பக்கம்) ஆகியோரும் உடனிருப்பதை காணலாம்.

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணையின் கீழ், இலங்கை கரப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து 2024 போட்டிகள் மார்ச் 30 ஆம் திகதி மேல் மாகாண போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. 14 ஆவது வருடமாக இந்த போட்டி டயலொக் அனுசரணையில் நடத்தப்படுவதுடன், இலங்கையின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு 2500 இற்கும் மேற்பட்ட அணிகளின் பங்குபற்றுதலுடன் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

மாகாண மட்டம், தேசிய மட்டம் மற்றும் இறுதிப் போட்டி என மூன்று கட்டங்களாக இப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய, மேல் மாகாண போட்டிகள் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஹொரணை நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மாகாண மட்டத்திலான போட்டிகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேசிய மட்டத்திலான போட்டிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் அதேவேளை, இவ்வருட இறுதியில் டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து இறுதிப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியானது 25 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான போட்டியாக அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இதன்படி, இளம் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய அளவிலான போட்டித் தேவையை இது பூர்த்தி செய்வதுடன், தேசிய அணிக்கென ஆற்றல்மிக்க இளம் வீரர்களை அடையாளம் காணவும் இப்போட்டிகள் வழிவகை செய்யும் எனவும் எதிரிபார்க்கப்படுகின்றது.

“25 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் என்போர் தேசிய அணியின் கதவைத் தட்டும் ஒரு குழுவினராவர். மேற்படி வயதுடைய விளையாட்டு வீர,வீராங்கனைகளுக்கு இவ்வாறான போட்டிகளை நடத்துவது இந்நாட்டின் கரப்பந்து விளையாட்டின் எதிர்காலத்திற்கான பெறுமதியான முதலீடாக கருத முடியும். டயலொக் நிறுவனம் இரண்டு தசாப்தங்களாக நமது தேசிய விளையாட்டுடன் நிலைத்திருந்து கொடுக்கின்ற ஆதரவு கரத்திற்காக கரப்பந்து குடும்பத்தின் நன்றிகளை அவர்களுக்கு தெரிவிப்பதோடு, அவர்கள் நமது தேசிய அணிக்கு வழங்கி வருகின்ற அனுசரணையை இந்த தருணத்தில் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்” என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

“இந்நாட்டின் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் டயலொக் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் அதே வேளை, இந்த ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட போட்டிகளின் மூலம் இலங்கையின் தேசிய கரப்பந்து அணிக்கு தேவையான சிறந்த ஆற்றல்மிகு வீர, வீராங்கனைகளை இனங்காண்பதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேசிய விளையாட்டு மற்றும் டயலொக் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த கூட்டிணைவின் மூலம் இலங்கையானது சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பதைக் காண வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்” என டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃப் செம்பியன்ஷிப் மற்றும் தேசிய பரா விளையாட்டுகள் ஆகியனவற்றிற்கு வலுவூட்டுவதுடன் பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முன்னணி அனுசரணையாளராகவும் பங்களிப்பை வழங்குகின்றது. மேலும், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியனவற்றிற்கும் டயலொக் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.