பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆதரவுடன் மத்திய ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்காக தேசிய ஆண்கள் கரப்பந்தாட்ட அணி பாகிஸ்தான் பயணம்

2026 ஜூலை 17         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: இலங்கை தேசிய ஆண்கள் கரப்பந்தாட்ட அணியின் தலைவர் தீப்தி ரொமேஷ், பயிற்றுவிப்பாளர் மொரிஸ் சாமிந்த, உதவிப் பயிற்றுவிப்பாளர் காலிக வசந்தப்ரிய, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மதவத்த, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. எச். எம். யூ. அருண பண்டார, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. அச்சுதன், அணி மேலாளர் ஜெனரல் டபிள்யூ. எம். என். கே. டி. பண்டார, முதன்மைப் பயிற்றுவிப்பாளர் பெட்ரோஸ் பெட்ரோக்ளூ மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் எம். எஸ். எம். குமார ஆகியோர் புகைப்படத்தில் தோன்றுவதைக் காணலாம்.

இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டுடன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கைகோர்த்து, நாட்டின் விளையாட்டுத் துறையின் முன்னணி புரவலராகவும் முதன்மைத் தொடர்பாடல் சேவை வழங்குநராகவும் திகழும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வழங்கும் ஆதரவுடன், மத்திய ஆசிய பிராந்திய கரப்பந்தாட்ட சவாலை வெல்லும் நோக்குடன் இலங்கை தேசிய ஆண்கள் கரப்பந்தாட்ட அணி வரும் 19ஆம் திகதி அதிகாலை தீவிலிருந்து புறப்படவுள்ளது.

வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள ‘2026 மத்திய ஆசிய ஆண்கள் கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்’ தொடரில் இலங்கை உட்பட 7 நாடுகள் போட்டியிடத் தயாராக உள்ளன.

தீப்தி ரொமேஷ் தலைமையில் மற்றும் ஆயேஷ் தில்ஹானின் உப தலைமையில் போட்டியிடும் இலங்கை அணி, தொடரின் தொடக்க நாளான ஜூலை 22ஆம் திகதி பலம் வாய்ந்த கசகஸ்தானையும், ஜூலை 23ஆம் திகதி தொடரை நடத்தும் பாகிஸ்தானையும், 24ஆம் திகதி நேபாளத்தையும், 26ஆம் திகதி ஆப்கானிஸ்தானையும் மற்றும் 27ஆம் திகதி பங்களாதேஷையும் லீக் சுற்றின் கீழ் எதிர்கொள்ளவுள்ளது.

விளையாட்டுத் துறைக்கான டயலொக் நிறுவனத்தின் பங்களிப்பு கரப்பந்தாட்டத்தையும் தாண்டிப் பரந்து விரிந்தது. டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் Esports ஆகிய தேசிய அணிகளின் பெருமைமிக்க அனுசரணையாளராகவும், இலங்கை ஓபன் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரின் முதன்மை அனுசரணையாளராகவும் விளங்குகிறது. பாராலிம்பிக் குழுவிற்கான தீவிர அனுசரணைய வழங்குவதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் நாட்டின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வழிவகை செய்து, விளையாட்டில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை டயலொக் ஊக்குவிக்கிறது. மேலும், நாளைய வெற்றியாளர்களை ஊக்குவிக்கும் தனது அர்ப்பணிப்புக்கு அமைவாக, தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட நெட்போல் தொடர்கள் மற்றும் பாடசாலை ரக்பி விளையாட்டுகளுக்கும் டயலொக் ஆதரவளித்து வருகின்றது.