டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ணம் 2026 ஆரம்பம்: தேசிய அரங்கில் பிரகாசிக்கக் காத்திருக்கும் கரப்பந்து திறமைகள்
2026 ஜூலை 10 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும (இடமிருந்து 4ஆவது), உத்தியோகபூர்வ அனுசரணை காசோலையை இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவிடம் (இடமிருந்து 3ஆவது) ஒப்படைப்பதைக் படத்தில் காணலாம். இதன்போது (இடமிருந்து வலமாக) இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் உப தலைவர் திரு. மஹிந்த சேனாரத் பண்டார, இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் விங் கமாண்டர் எச்.கே. அகில டி அல்விஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் திரு. ஹர்ஷ சமரநாயக்க ஆகிய ஏனைய அதிகாரிகள் உடனிருந்தனர்.
இலங்கையின் முதன்மை கரப்பந்து தொடரான Dialog President's Gold Cup Volleyball Championship 2026 எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடருக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் தொடர்ந்து 19ஆவது ஆண்டாகவும் பிரதான அனுசரணையாளராக தனது ஆதரவை வழங்குகின்றது.
இலங்கையின் முதன்மை கரப்பந்து தொடரான Dialog President's Gold Cup Volleyball Championship 2026 எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடருக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் தொடர்ந்து 19ஆவது ஆண்டாகவும் பிரதான அனுசரணையாளராக தனது ஆதரவை வழங்குகின்றது.
முதன்முதலில் 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முதலாவது இறுதிப் போட்டி புதிதாகப் புனரமைக்கப்பட்ட சுகததாச உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதுமுதல் இன்றுவரை, இந்த ஜனாதிபதி தங்கக் கிண்ணத் தொடரானது நாட்டின் மிக முக்கியமான உள்நாட்டு கரப்பந்து போட்டிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் 2005ஆம் ஆண்டு முதல் இத்தொடருக்குப் பக்கபலமாக இருந்து வருவதுடன், இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கரப்பந்து அணிகளின் முதன்மை அனுசரணையாளராகவும் செயல்பட்டு வருகின்றது.
இந்த வருடத்திற்கான போட்டித் தொடர் மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. மாவட்ட மட்டத்தில் சாம்பியன் பட்டம் பெறும் 25 ஆண்கள் அணிகளும், 25 பெண்கள் அணிகளும் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெறும். மாவட்ட மட்டப் போட்டிகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வார இறுதி நாட்களில் ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தேசிய மட்டப் போட்டிகள் அதிலிருந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டித் தொடரில் எந்தவொரு வயதினரைக் கொண்ட வீரர்களும் களமிறங்க முடியும் என்பதால், அனுபவமிக்க வீரர்களும் இளம் திறமையாளர்களும் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, வீரர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது அந்தந்த பிரதேச செயலகப் பிரிவிற்குள் வசித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த சாம்பியன்ஷிப் தொடருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஆகஸ்ட் 15 ஆகும்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், Dialog President's Gold Cup Volleyball Championship தொடருடனான எங்களது இரு தசாப்த கால பங்களிப்பைத் தொடர்வதில் பெருமையடைகிறோம் என்றார். கிராமிய மட்டத்திலான போட்டிகளில் இருந்து சர்வதேச அரங்கு வரை விளையாட்டு வீரர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே டயலொக்கின் தொலைநோக்காகும். இத்தொடரானது திறமையான வீரர்களைத் தொடர்ந்து உருவாக்குவதுடன் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. இத்தொடரைச் சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவளிக்கும் இலங்கை கரப்பந்து சம்மேளனத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான திரு. சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவதில் இந்தத் தொடர் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. பல வீரர்கள் கிராமிய மட்டக் கரப்பந்தாட்டத்தில் இருந்து முன்னேறி இலங்கை அணிக்காக விளையாடியுள்ளனர், அதற்கான பாதையை உருவாக்க டயலொக்கின் தொடர்ச்சியான ஆதரவு பெரிதும் உதவியுள்ளதுடன் இவ்விளையாட்டின் மீதான அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்புக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இப்போட்டித் தொடரை நாடு முழுவதும் உள்ள கரப்பந்து ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில், Dailog Televison, Dialog Play App மற்றும் ThePapare.com ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் Esports அணிகளின் பெருமைமிகு அனுசரணையாளராக விளங்குகின்றது. மேலும், இலங்கை கோல்ப் ஓபன் தொடரின் முதன்மை அனுசரணையாளராகவும், தேசிய பாரா போட்டிகள் மற்றும் உலக பாராலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இலங்கை குழுவினரை வலுவூட்டுவதன் மூலம் பாராலிம்பிக் விளையாட்டுத் துறைக்கும் ஆதரவளித்து வருகிறது. அத்துடன், நாளைய சாம்பியன்களை உருவாக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்கு இணங்க, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து, தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் நெட்போல் தொடர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகளுக்கும் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.