விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
டயலொக் சுவர்ண சக்தி சில்லறை விற்பனையாளர் லோயல்டி நிகழ்ச்சி – சில்லறை விற்பனையாளர்களுக்கான திருத்தப்பட்ட மற்றும் மீள்வடிவமைக்கப்பட்ட பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள் (2026 மீளறிமுகம்)
அமலுக்கு வரும் தேதி: 07 செப்டம்பர் 2026
இத்தகைய நியதிகள் மற்றும் நிபந்தனைகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC) இயக்கும் டயலொக் சுவர்ண சக்தி சில்லறை விற்பனையாளர் லோயல்டி நிகழ்ச்சியில் (Swarna Shakthi Retailer Loyalty Program) சில்லறை விற்பனையாளர்கள் பங்கேற்பதை நிர்வகிக்கின்றன.
பின்னணி – திருத்தம் மற்றும் மீள்வடிவமைப்பு
- இத்தகைய நியதிகள் மற்றும் நிபந்தனைகள், 2024 ஆம் ஆண்டின் டயலொக் சுவர்ண சக்தி வெகுமதி மற்றும் லோயல்டி திட்டத்திற்கான (Swarna Shakthi Reward & Loyalty Program) சில்லறை விற்பனையாளர்களுக்கான பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகத் திருத்தி, மீள்வடிவமைத்து, அவற்றிற்குப் பதிலாக அமலுக்கு வருகின்றன.
- இந்நிகழ்ச்சித்திட்டம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும். எனவே, இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள் புதியதொரு அல்லது தனியான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்குவதாகக் கருதப்படமாட்டாது.
- அமலுக்கு வரும் தேதிவரை முந்தைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் சில்லறை விற்பனையாளரால் முறையாக சேகரிக்கப்பட்ட அனைத்து புள்ளிகளும் (Points) முன் கொண்டு செல்லப்படும் என்பதோடு அவை இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், குறிப்பாக புள்ளிகளின் செல்லுபடித்தன்மை, காலாவதி மற்றும் மீட்பு தொடர்பான ஏற்பாடுகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்படவும் மீட்கப்படவும் முடியும்.
1. வரைவிலக்கணங்கள் மற்றும் பொருள்கோடல்
1.1 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளில், சூழல் வேறுவிதமாகக் கோராத வரையில், பின்வரும் வரைவிலக்கணங்கள் ஏற்முடையதாகும்.
- "போனஸ் புள்ளி": முந்தைய டயலொக் சுவர்ண சக்தி சந்தைப்படுத்தல் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான வரம்பை அடைந்தவுடன், ஒரு சில்லறை விற்பனையாளருக்கு வழங்கப்படும் மேலதிக புள்ளியைக் குறிக்கும்.
- • "CBSL": இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஆகும்.
- • "டயலொக்" (Dialog): இலங்கைச் சட்டங்களின் கீழ் முறையாக நிறுவப்பட்டு, PQ38 என்ற கம்பனிப் பதிவிலக்கத்தைக் கொண்டதுடன், தனது பதிவுசெய்யப்பட்ட தலைமையகத்தை இலக்கம் 475, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 இல் கொண்டுள்ள டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC) ஆகும்.
- • "Dialog Finance" அல்லது "DF": இந்நிகழ்ச்சியின் கீழ் Dialog Finance கணக்கு பராமரிக்கப்படுகின்ற உரிமம் பெற்ற நிதி நிறுவனமான Dialog Finance பிஎல்சி எனக் பொருள்படும்.
- • "Dialog Finance கணக்கு": இந்நிகழ்ச்சியின் கீழ் புள்ளிகளின் பணப் பெறுமதி மாற்றப்படுவதற்காக சில்லறை விற்பனையாளர் ஒருவரால் Dialog Finance இல் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்காகும்.
- • "Dialog Pay": டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தளத்தையும் அதனுடன் தொடர்புடைய சேவைகளையும் குறிக்கும். இது தற்போது “Dialog Pay” என்ற வர்த்தகப் பெயரில் இயங்கி வருகிறது, முன்னர் “ஜீனி” என்ற பெயரில் இயங்கியது. ஏற்முடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் (அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு அல்லது திருத்தப்படுபவை உட்பட) மற்றும் பொருந்தக்கூடிய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது உதவுகிறது.
- • "அமலுக்கு வரும் தேதி": 07 செப்டம்பர் 2026 ஆகும்.
- • "புள்ளி" (Point): இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக சில்லறை விற்பனையாளருக்கு இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் லோயல்டி புள்ளியாகும்.
- • "நிகழ்ச்சி" (Program): டயலொக் நிறுவனத்தால் இயக்கப்படும் டயலொக் சுவர்ண சக்தி சில்லறை விற்பனையாளர் லோயல்டி நிகழ்ச்சி ஆகும்.
- • "RH செயலி" (RH App): சில்லறை விற்பனையாளர் இந்நிகழ்ச்சித் திட்டத்தை அணுகுவதற்குப் பயன்படுத்தும் (Retail Hub) செயலியாகும்.
- • "சில்லறை விற்பனையாளர்" (Retailer): டயலொக் நிறுவனத்திற்காக தொலைத்தொடர்பு சேவைகளை விற்பனை செய்ய அங்கீகரிக்கப்பட்டு, டயலொக் அமைப்பில் சில்லறை விற்பனையாளராக வகைப்படுத்தப்பட்ட/தரப்படுத்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தைக் குறிக்கும்.
- • "PMS ID": Profile Management System ID-யைக் குறிக்கும்.
- • "மீட்புக் காலம்" (Redemption Period): சில்லறை விற்பனையாளர் தமக்குச் சேர்க்கப்பட்டுள்ள புள்ளிகளைப் பயன்படுத்தவோ அல்லது மீட்டுக்கொள்ளவோ டயலொக் அனுமதிக்கும் காலப்பகுதியாகும். இக்காலம் டயலொக் நிறுவனத்தால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும்.
1.2 பிரிவுகளின் தலைப்புகள் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன; அவை இவ்விதிமுறைகளின் விளக்கத்தைப் பாதிக்காது.
1.3 ஒருமையைக் குறிக்கும் சொற்கள் பன்மையையும், பன்மையைக் குறிக்கும் சொற்கள் ஒருமையையும் உள்ளடக்கும். மேலும், “நபர்” என்ற குறிப்பில் ஒரு நிறுவனமும் அடங்கும்.
1.4 ஏதேனும் நியதிச்சட்டம் அல்லது சட்ட ஏற்பாட்டிற்கான குறிப்பு, அவ்வப்போது திருத்தப்படும், மீளச்சட்டமாக்கப்படும் அல்லது மாற்றீடு செய்யப்படும் அந்த நியதிச்சட்டம் அல்லது சட்ட ஏற்பாட்டையும் உள்ளடக்கும்.
2. மீட்டெடுப்பிற்கான தகைமை
2.1 டயலொக் முறைமையில் பதிவுசெய்யப்பட்டு, தகுதியுடையவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள டயலொக் சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.
2.2 புள்ளிகளின் பணப் பெறுமதியை மீட்டுக்கொள்ள, சில்லறை விற்பனையாளர் Dialog Pay ஊடாக Dialog Finance இல் ஒரு Dialog Finance கணக்கைத் திறந்து, அதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும், அக்கணக்கின் விபரங்களை RH செயலி மூலம் டயலொக் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
2.3 Dialog Finance கணக்கு திறக்கப்படும் போது, Dialog Pay மூலம் கணக்கைத் திறப்பது, Dialog Finance நிறுவனத்தின் வாடிக்கையாளர் (சில்லறை விற்பனையாளர்) இணைத்துக் கொள்ளல், வாடிக்கையாளர் உரிய கவனிப்பு மற்றும் உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (Know Your Customer - KYC) தொடர்பான தேவைகள் மற்றும் பொருந்தக்கூடிய CBSL அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டதாகும். மேலும், Dialog Finance Account ஒன்றிற்கான எந்தவொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்படும் என டயலொக் நிறுவனம் எந்தவித உத்தரவாதமும் வழங்கமாட்டாது.
3. புள்ளி வழங்குதல் மற்றும் கணக்கீடு செய்தல்
3.1 இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெறப்படும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் (Point), சில்லறை விற்பனையாளர் ஒருவருக்கு இலங்கை ரூபாய் ஒன்று (ரூபாய் 1.00) என்ற பெறுமதி வழங்கப்படும்.
3.2 2026 அக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், போனஸ் புள்ளிகள் (Bonus Points) புள்ளி கணக்கீட்டிலிருந்து நீக்கப்படும். அதன் பின்னர் எந்தவொரு போனஸ் புள்ளிகளும் வழங்கப்படமாட்டாது.
3.3 2026 ஆகஸ்ட் 1 முதல், மீளநிரப்பல் அட்டைகள் (Recharge Cards) மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் புள்ளிகளைப் பெறுவதற்கான தகுதியான பரிவர்த்தனைகளாகக் கருதப்படமாட்டாது.
3.4 சில்லறை விற்பனையாளர், இந்நிகழ்ச்சியின் கீழ் தமக்குச் சேர்க்கப்பட்டுள்ள மொத்த புள்ளிகளை RH செயலி அல்லது டயலொக் அவ்வப்போது நியமிக்கும் ஏதேனும் மற்றொரு செயலி அல்லது தளத்தின் மூலம் பார்வையிட முடியும்.
3.5 புள்ளிகள் சில்லறை விற்பனையாளருக்கே உரியவை. இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் படி மீட்டுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர, அவற்றிற்கு பணப் பெறுமதி கிடையாது. மேலும், அவை விற்பனை, அன்பளிப்பு அல்லது வேறு எந்த முறையிலும் வேறு எந்த நபருக்கும் அல்லது கணக்கிற்கும் மாற்றப்படவோ ஒப்படைக்கப்படவோ முடியாது.
3.6 புள்ளிகள் பிரதான PMS ID-யின் அடிப்படையில் (அதாவது, தொடர்புடைய சில்லறை விற்பனையாளர் சுயவிவரத்தின் அடிப்படையில்) உருவாக்கப்பட்டு திரட்டப்படும். இதில் துணை முகவர்களால் (Sub-agents) மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளும் அடங்கும். அனைத்து துணை முகவர்களாலும் பெறப்படும் புள்ளிகளும் பிரதான PMS ID-க்கு சேர்க்கப்படும். மேலும், அனைத்து துணை முகவர்களும் பிரதான PMS ID-க்கு பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.
4. புள்ளிகளின் செல்லுபடித்தன்மை மற்றும் காலாவதி
4.1 புள்ளிகள், அவை சம்பாதிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று (3) வருட காலத்திற்கு செல்லுபடியாகும்; மேலும் அவை திரட்டப்பட்ட திகதியின் மூன்றாவது ஆண்டு நிறைவில் காலாவதியாகும். இருப்பினும், இந்த மூன்று (3) வருட காலாவதி ஏற்பாடு, அந்தக்காலப்பகுதியில் டயலொக் நிறுவனத்தால் எந்தவொரு புள்ளி மீட்டெடுப்பு நிகழ்ச்சித்திட்டமும் மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்திலும், அவ்வாறு மேற்கொள்ளப்படாத அளவிற்கும் மட்டுமே பொருந்தும். மேற்காட்டப்பட்ட காலப்பகுதியில் டயலொக் நிறுவனம் ஏதேனும் புள்ளி மீட்டெடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அத்தகைய மீட்டெடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, புள்ளிகள் தொடர்ந்து செல்லுபடியாகவும் மீட்டெடுக்கக்கூடியவையாகவும் இருக்கும்.
புள்ளிகள் காலாவதியானவுடன், அவை செல்லுபடியாகாமல் போவதுடன், இனிமேல் அவற்றைப்பயன்படுத்தவோ அல்லது மீட்டெடுக்கவோ தகுதியுடையவையாக இருக்காது. மேலும், அவை முறைமையில் தொடர்ந்து காணப்பட்டாலும் கூட, அவற்றிற்கு பண மதிப்பையோ அல்லது வேறு எந்த மதிப்பையோ இருக்கமாட்டாது. காலாவதியான புள்ளிகளை அமைப்பில் தொடர்ந்து வைத்திருப்பதற்கான உரிமையை டயலொக் நிறுவனம் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் கொண்டுள்ளது. மேலும், அத்தகைய புள்ளிகள் காலாவதியாகவிருப்பது மற்றும்/அல்லது அகற்றப்படவிருப்பது தொடர்பாக சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவிக்கலாம். அதன் பின்னர், டயலொக் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் திகதியில், அத்தகைய காலாவதியான புள்ளிகளை அமைப்பிலிருந்து அகற்றவோ, ரத்துச் செய்யவோ, முழுமையாக நீக்கம் செய்யவோ அல்லது வேறு எந்த முறையிலும் நீக்கவோ டயலொக் நிறுவனத்திற்கு உரிமையுண்டு.
4.2 2026 ஜூன் 30 வரை எஞ்சியுள்ள அனைத்து புள்ளிகளையும் சில்லறை விற்பனையாளர்கள் கட்டாயமாக மீட்டுக்கொள்ள வேண்டும். பகுதியளவிலான (Partial) புள்ளி மாற்றல்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
4.3 பொருந்தக்கூடிய காலாவதித் திகதிக்குள் மீட்டுக்கொள்ளப்படாத அல்லது வேறு விதமாக காலாவதியான எந்தவொரு புள்ளிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கருதப்படும்; அவற்றிற்கு எந்தவித பெறுமதியும் இருக்கமாட்டாது.
5. புள்ளிகள் மீட்கும் முறை
5.1 அமலுக்கு வரும் திகதியிலிருந்து, எளிமையாக்கப்பட்ட புள்ளி மீட்பு முறை ஏற்முடையதாகும். பரிசுகளை மீட்டெடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்ட செயல்பாடுகளை அணுகுதல் போன்றவை RH App அல்லது டயலொக் நிறுவனத்தால் அவ்வப்போது நியமிக்கப்படும் வேறு ஏதேனும் செயலி தளம் அல்லது ஊடகம் மூலம் மேற்கொள்ளப்படலாம். முந்தைய அல்லது வரலாற்று ரீதியான எந்தவொரு புள்ளி மீட்டெடுப்பு முறையிலிருந்தும் அல்லது அத்தகைய முறைகளுடன் தொடர்புடையதாக சில்லறை விற்பனையாளர்களுக்கு எந்தவொரு கோரிக்கையையோ, கோருதலையோ அல்லது உரிமைக்கோரிக்கையையோ முன்வைக்கும் உரிமை இருக்கமாட்டாது.
5.2 புள்ளிகளை மீட்டுக்கொள்ள, ஒரு சில்லறை விற்பனையாளர் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
- பிரிவு 2-இன் படி, Dialog Finance இல் ஒரு Dialog Finance கணக்கை திறக்க வேண்டும்.
- புள்ளிகளை மாற்றுவதற்கு தனது சம்மதத்தை வழங்க வேண்டும்; மேலும் Dialog Finance கணக்கு வெற்றிகரமாகத் திறக்கப்பட்டவுடன், அதன் விபரங்களை RH செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
- RH செயலியில் Dialog Finance கணக்கு இணைக்கப்பட்டவுடன், சில்லறை விற்பனையாளரின் புள்ளிகளுக்குரிய பணப் பெறுமதி Dialog Finance கணக்கிற்கு மாற்றப்பட்டு வரவு வைக்கப்படும்.
5.3 சில்லறை விற்பனையாளர், 2026 ஜூன் 30 வரை ஈட்டப்பட்ட புள்ளிகளை மாத்திரமே Dialog Finance கணக்கிற்கு மாற்ற முடியும்.
5.4 பகுதியளவிலான புள்ளி மாற்றங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. தகுதியுடைய அனைத்து புள்ளிகளையும் சில்லறை விற்பனையாளர் ஒரே பரிவர்த்தனையின் மூலம் முழுமையாக மாற்ற வேண்டும்.
5.5 மீட்டெடுப்பு காலப்பகுதியில் (Redemption Period) மேற்கொள்ளப்படும் புள்ளி மீட்டெடுப்புகளுக்கு மட்டுமே, அவற்றிற்குச் சமமான புள்ளிகளின் பண மதிப்பு, அத்தகைய கணக்கைத் திறப்பதன் மூலம் குறித்த சில்லறை விற்பனையாளரின் Dialog Finance கணக்கிற்கு வரவு வைக்கப்படலாம். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மீட்டெடுப்பிலும், இவ்வாறு சமமான மதிப்பைக் வரவு வைப்பது அனுமதிக்கப்படமாட்டாது.
மீட்டெடுக்கப்படாத எந்தவொரு புள்ளிகளும், அத்தகைய புள்ளிகள் திரட்டப்பட்ட திகதியிலிருந்து மூன்று (3) வருடங்கள் நிறைவடைந்தவுடன் காலாவதியாகும். அத்திகதியிலிருந்து, அவை எந்தவொரு மதிப்பையும் கொண்டிருக்காது என்பதோடு, அவை டயலொக் நிறுவனத்தால் ரத்துச் செய்யப்பட்டு நிரந்தரமாக அகற்றப்படும் வரை முறைமையில் தொடர்ந்து தோன்றினாலும் அல்லது தோன்றாவிட்டாலும், சில்லறை விற்பனையாளரால் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாதவையாகிவிடும்.
5.6 புள்ளிகள் பணமாக மாற்றப்பட்டு Dialog Finance கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னர், அந்த நிதியை Dialog Finance கணக்கிற்கு ஏற்முடைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் மற்றும் Dialog Finance பற்று அட்டையின் பயன்பாடும் ஏனைய கணக்குகளுக்கு நிதி மாற்றம் செய்வதும் நிபந்தனைகளுக்கும் இணங்க சில்லறை விற்பனையாளர் பயன்படுத்தலாம்.
5.7 சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, 2026 ஜூன் 30-க்கு பின்னர் ஈட்டப்படுகின்ற புள்ளிகள் பணமாக மாற்றப்படத் தகுதியற்றவையாகும். அவை, டயலொக் அவ்வப்போது அறிமுகப்படுத்தி அறிவிக்கும் ஏதேனும் ஏனைய மீட்பு முறைகள் (இருந்தால்) மூலமாக மாத்திரமே மீட்டுக்கொள்ளப்படலாம். அத்தகைய மீட்பு முறை அறிமுகப்படுத்தப்படாத பட்சத்தில், அத்தகைய புள்ளிகள், புள்ளிகளின் செல்லுபடித்தன்மை மற்றும் காலாவதி தொடர்பான இவ்விதிமுறைகளுக்கு அமைவாக காலாவதியாகி, பறிமுதல் செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
6. சம்மதம், தனிப்பட்ட தரவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் நியதிகள்
6.1 இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், Dialog Finance கணக்கை திறந்து இணைத்தல், புள்ளிகளின் பணப் பெறுமதியை மாற்றம் செய்தல் மற்றும் ஏற்முடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குறுத்துகைத் தேவைகளுக்கு இணங்க செயல்படுதல் ஆகிய நோக்கங்களுக்காக, சில்லறை விற்பனையாளர் தனது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கணக்குத் தகவல்களை டயலொக் மற்றும் Dialog Finance ஆகியவற்றால் சேகரிக்கவும், பயன்படுத்தவும், சேமிக்கவும் மற்றும் பரிமாறிக் கொள்ளவும் தனது சம்மதத்தை வழங்குகிறார்.
6.2 தனியுரிமை அறிவித்தல் (Privacy Notice): இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, சில்லறை விற்பனையாளர் வழங்கும் தனிப்பட்ட தரவுகளை டயலொக் சேகரிக்கலாம் அல்லது சேகரிக்க வேண்டியிருக்கலாம். இத்தகைய அனைத்து சந்தர்ப்பங்களிலும், டயலொக், தனது தனியுரிமை அறிவிப்பிற்கு (Privacy Notice) இணங்கவே அந்தத் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்கும். இத்தனியுரிமை அறிவிப்பு (அவ்வப்போது திருத்தப்படக்கூடியது) பின்வரும் https://www.dialog.lk/legal இணையதளத்தில் கிடைக்கிறது. சில்லறை விற்பனையாளர், டயலொக் நிறுவனத்திற்கு ஏதேனும் தனிப்பட்ட தரவுகளை வழங்குவதற்கு முன்னர், இத்தனியுரிமை அறிவித்தலை வாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6.3 Dialog Finance கணக்கு – மூன்றாம் தரப்புப் பொருள் தொடர்பான பொறுப்புத்துறப்பு:
Dialog Finance கணக்கு என்பது Dialog Finance பிஎல்சி நிறுவனத்தின் ஒரு தயாரிப்பாகும். இது தனித்துவமான சட்ட நிறுவனமாகும். இது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற நிதி நிறுவனமுமாகும். மேலும் Dialog Finance கணக்கு என்பது, Dialog Finance இன் நியதிகள் மற்றும் நிபந்தனைகளால் மட்டுமே (பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் உட்பட) நிர்வகிக்கப்படுகிறது. Dialog Finance கணக்கு தொடர்பான சில்லறை விற்பனையாளரின் உறவு, சில்லறை விற்பனையாளருக்கும் Dialog Finance க்கும் இடையில் மட்டுமே அமையும்.
டயலொக், Dialog Finance கணக்கு தொடர்பாக எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும், உத்தரவாதத்தையும் அல்லது பரிந்துரையையும் வழங்குவதில்லை. மேலும், சில்லறை விற்பனையாளருக்கு எந்தவொரு நிதி அல்லது முதலீட்டு ஆலோசனையையும் வழங்குவதில்லை. Dialog Finance கணக்கைத் திறத்தல், அங்கீகரித்தல், நிராகரித்தல், இயக்குதல், பராமரித்தல், கிடைப்பது, இடைநிறுத்தம், மூடுதல் அல்லது Dialog Finance இன் எந்தவொரு செயல் அல்லது தவறுக்கும் டயலொக் பொறுப்பேற்காது. இத்தகைய எந்தவொரு விஷயத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சில்லறை விற்பனையாளர் டயலொக் நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு உரிமைக்கோரிக்கையையும் முன்வைக்கவோ அல்லது இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்ட விதத்தைத் தவிர வேறு எந்தவொரு முறையிலும் புள்ளிகளை மீட்டுக்கொள்ள உரிமை கோரவோ முடியாது.
7. வரிகள்
7.1 புள்ளிகளை வழங்குதல், மீட்டுக்கொள்ளுதல் அல்லது பணமாக மாற்றுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து வரிகள், அறவீடுகள் மற்றும் கட்டணங்களும், அவற்றில் கட்டுப்படுத்தப்படாமல் பெறுமதி சேர் வரி (VAT), சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு (Social Security Contribution Levy - SSCL) மற்றும் நிறுத்தி வைத்தல் வரி (Withholding Tax) உட்பட, அனைத்தும் சில்லறை விற்பனையாளரின் பொறுப்பாகும்.
7.2 ஏற்முடைய சட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கவோ அல்லது கழித்துக் கொள்ளவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு தொகையையும், இந்நிகழ்ச்சியின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு பணப்பரிமாற்றத்திலிருந்தும் அல்லது தொகை மாற்றத்திலிருந்தும் கழித்துக் கொள்ள அல்லது நிறுத்தி வைப்பதற்கு டயலொக் நிறுவனத்திற்கு உரிமை உண்டு. அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு அனுப்பிவைக்கவும் டயலொக் நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
8. நிகழ்ச்சித்திட்டத்தில் மாற்றம், இடைநிறுத்தம் மற்றும் மீளப் பெறுதல்
8.1 இந்நிகழ்ச்சி முழுமையாக டயலொக் நிறுவனத்தின் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. டயலொக், தனது முழுமையான தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், எந்த நேரத்திலும் இத்திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
8.2 டயலொக், முன்கூட்டிய அறிவித்தல் வழங்கியோ அல்லது அறிவித்தல் வழங்காமலோ, எந்த நேரத்திலும் இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள், புள்ளி வழங்கும் முறைமை அல்லது இந்நிகழ்ச்சியின் வேறு எந்த அம்சத்தையும் மாற்றியமைப்பதற்கான உரிமையைத் தக்கவைத்துள்ளது.
8.3 சில்லறை விற்பனையாளரின் கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டாலோ அல்லது டயலொக் நிறுவனத்துடனான அவரது வணிக உறவு முடிவுக்கு வந்தாலோ, அவர் சேர்த்து வைத்துள்ள அனைத்து புள்ளிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
8.4 முறைமை அல்லது செயலாக்கப் பிழை காரணமாகவோ, தவறாக வழங்கப்பட்ட அல்லது வரவு வைக்கப்பட்ட புள்ளிகள் (அவற்றுடன் தொடர்புடைய பணப் பெறுமதி உட்பட), அல்லது மோசடி, கையாளுதல் (Manipulation), ரத்துச் செய்யப்பட்ட அல்லது மீளப்பெறப்பட்ட பரிவர்த்தனைகள், அல்லது இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ள சூழ்நிலைகளில், டயலொக் எந்த நேரத்திலும் அத்தகைய புள்ளிகளை சரிபார்க்கவும், திருத்தவும், மீளப்பெறவும், ரத்து செய்யவும் அல்லது நிறுத்தி வைக்கவும் முடியும்.
8.5 மோசடி, தவறான பயன்பாடு அல்லது இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன என்று நியாயமான சந்தேகம் டயலொக் நிறுவனத்திற்கு ஏற்பட்டால், டயலொக் ஏதேனும் சில்லறை விற்பனையாளரையும் இத்திட்டத்திலிருந்து இடைநிறுத்தவோ அல்லது விலக்கவோ முடியும். மேலும், அத்தகைய சில்லறை விற்பனையாளரின் புள்ளிகளையும் பறிமுதல் செய்ய முடியும்.
8.6 முன்கூட்டிய அறிவித்தலின்றி இந்நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக் கொண்டு சில்லறை விற்பனையாளர் டயலொக் நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு உரிமையையும் கோரவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது. இத்தகைய இடைநிறுத்தம் ஏற்பட்டால், புள்ளிகளை மீட்டுக்கொள்ள அனுமதிப்பது தொடர்பான முடிவு முழுமையாக டயலொக் நிறுவனத்தின் தனிப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே அமையும்.
9. பொறுப்பு தொடர்பான எல்லை
9.1 ஏற்முடைய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வரம்பிற்குள், இந்நிகழ்ச்சித்திட்டம், புள்ளிகள் அல்லது அவற்றின் வழங்கல், கணக்கீடு, செல்லுபடியாகும் காலம், காலாவதி, மீட்பு அல்லது பணமாக மாற்றுதல், RH செயலி, Dialog Finance கணக்கு, அல்லது இந்நிகழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏதேனும் மாற்றம், இடைநிறுத்தம் அல்லது திரும்பப் பெறுதல் ஆகியவற்றிலிருந்து அல்லது அவற்றுடன் தொடர்புடையதாக எழும் எந்தவொரு இழப்பு, சேதம், கிரயம் அல்லது செலவீனங்களுக்கு (நேரடி, மறைமுக, தற்செயலான, விசேட அல்லது தொடர்ச்சியான இழப்புகள் உட்பட) ஒப்பந்தம், தவறstates (கவனக்குறைவு உட்பட), சட்டப்பூர்வ கடமை மீறல் அல்லது வேறு எந்த அடிப்படையில் இருந்தாலும் அவற்றிற்கு டயலொக் நிறுவனம் எந்தவொரு சில்லறை விற்பனையாளருக்கும் பொறுப்பாக மாட்டாது. சில்லறை விற்பனையாளர் முற்றிலும் தனது சொந்த பொறுப்பிலும் இடரிலுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
10. இழப்பீடு
10.1 பின்வரும் காரணங்களால் டயலொக் நிறுவனத்திற்கு ஏற்படும் அல்லது டயலொக் நிறுவனம் அனுபவிக்கும் அனைத்து இழப்புகள், சேதங்கள், பொறுப்புகள், கோரிக்கைகள், வேண்டுகோள்கள், கிரயங்கள் மற்றும் செலவீனங்கள் (நியாயமான சட்டத்தரணி கட்டணங்கள் உட்பட) ஆகியவற்றிற்கு சில்லறை விற்பனையாளர் டயலொக் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்கி, அவ்வாறான இழப்புகளிலிருந்து டயலொக் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும்:
- சில்லறை விற்பனையாளரால் இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அல்லது மேற்கோள் மூலம் இணைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருந்தால்;
- சில்லறை விற்பனையாளரால் இந்நிகழ்ச்சித்திட்டம், RH செயலி அல்லது Dialog Finance கணக்கு தொடர்பாக மேற்கொள்ளப்படும் மோசடி, கவனக்குறைவு, வேண்டுமென்றே செய்யப்படும் தவறான நடத்தை அல்லது தவறான பயன்பாடு;
- சில்லறை விற்பனையாளரால் பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் மீறப்பட்டிருந்தால்;
- சில்லறை விற்பனையாளர் டயலொக் அல்லது Dialog Finance க்கு தவறான, முழுமையற்ற அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை வழங்கியிருந்தால்.
இவ்விழப்பீட்டுப் பொறுப்பு, இந்நிகழ்ச்சித்திட்டம் அல்லது அதில் சில்லறை விற்பனையாளரின் பங்கேற்பு முடிவடைதல், இடைநிறுத்தப்படுதல் அல்லது திரும்பப் பெறப்படுதலுக்கு பின்னரும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
11. ஆளுகைக்கு உட்படும் சட்டம் மற்றும் அதிகாரவரம்பு
11.1 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டங்களுக்கு இணங்க நிர்வகிக்கப்பட்டு, அவற்றின்படி பொருள்கோடல் செய்யப்படும்.
11.2 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து அல்லது அவற்றுடன் தொடர்புடையதாக எழும் எந்தவொரு பிணக்கையும் தீர்மானிக்கும் அதிகாரவரம்பு இலங்கையின் நீதிமன்றங்களுக்கே உரியது.
12. பொதுவான ஏற்பாடுகள்
12.1 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள ஏதேனும் ஒரு ஏற்பாடு செல்லுபடியற்றதாகவோ அல்லது அமல்படுத்த முடியாததாகவோ தீர்மானிக்கப்பட்டாலும், ஏனைய அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செல்லுபடியாகவும் அமலிலும் தொடர்ந்து இருக்கும்.
12.2 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள ஏதேனும் ஒரு ஏற்பாட்டை அமல்படுத்த டயலொக் தவறினாலும், அது அந்த ஏற்பாட்டையோ அல்லது வேறு எந்த ஏற்பாட்டையோ கைவிட்டதாக (Waiver) கருதப்படமாட்டாது.
12.3 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள், அமலுக்கு வரும் திகதியிலிருந்து, இத்திட்டம் தொடர்பாக முன்னர் நடைமுறையிலிருந்த அனைத்து நியதிகள் மற்றும் நிபந்தனைகளையும் திருத்தி, மீளவடிவமைத்து, அவற்றிற்குப் பதிலாக அமலுக்கு வருகின்றன. இருப்பினும், முந்தைய ஏற்பாடுகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் சில்லறை விற்பனையாளர்களால் முறையாக ஈட்டப்பட்ட புள்ளிகள், இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் “பின்னணி” பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொடர்ந்து செல்லுபடியாகப் பாதுகாக்கப்படும். இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளே, இந்நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக டயலொக் நிறுவனத்திற்கும் சில்லறை விற்பனையாளருக்கும் இடையே உள்ள முழுமையான ஒப்பந்தமாகும்.
12.4 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள எந்தவொரு ஏற்பாடும், டயலொக் நிறுவனத்திற்கும் சில்லறை விற்பனையாளர்க்கும் இடையே பங்காண்மை (Partnership), முகவர் உறவு (Agency), கூட்டு முயற்சி (Joint Venture) அல்லது வேலைவாய்ப்பு உறவு (Employment Relationship) ஆகியவற்றில் எதனையும் உருவாக்குவதாகவோ அல்லது உருவாக்கியதாகக் கருதப்படவோ கூடாது. மேலும், எந்தவொரு தரப்பினருக்கும் மற்றைய தரப்பினரைக் கட்டுப்படுத்தும் அல்லது அவர்களுக்குப் பதிலாகச் தொழிற்படும் அதிகாரம் கிடையாது.
12.5 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இம்மொழிப் பதிப்புகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், ஆங்கில மொழிப் பதிப்பே மேலோங்கி செல்லுபடியாகும்.
12.6 https://www.dialog.lk/legal என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு, தடைகள் (Sanctions), தகவல் பாதுகாப்பு, வலையமைப்பு அணுகல், மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள், இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக மேற்கோள் மூலம் இணைக்கப்பட்டு, அவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக அமைகின்றன. சில்லறை விற்பனையாளர், இந்நியதிகளைப் பரிசீலித்திருப்பதையும், அவை அவ்வப்போது திருத்தப்படும் வகையில் அவற்றை முழுமையாகப் பின்பற்றுவதை ஒப்புக்கொள்வதையும் இத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.