டயலொக் அனுசரணையில் தேசிய கனிஷ்ட வலைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணம் 2022
2022 நவம்பர் 01 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் முஹம்மத் கஸ்ஸாலி அவர்கள் NFSL இன் தலைவர் விக்டோரியா லக்ஷ்மிக்கு அனுசரணை காசோலையினை வழங்குகிறார் மேலும் (இடமிருந்து வலமாக) NFSL இன் பொருளாளர், பத்மினி ஹொரனகே அவர்களையும் படத்தில் காணலாம்
சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையின் அமோக வெற்றிகளை தொடரச் செய்யும் நோக்கில், இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தேசிய விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்கும் தனது வாக்குறுதிக்கமைய தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் கனிஷ்ட வலைப்பந்து செம்பியன் கிண்ண போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
அதற்கமைய, இம்முறை தேசிய கனிஷ்ட வலைப்பந்து செம்பியன் கிண்ணம் 2022 போட்டியானது நவம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் பொலன்னறுவை கல்லெல்ல மஹாஜன மைதானத்தில் (உள்ளக மற்றும் வெளி அரங்குகளில்) நடைபெறும். டயலொக் கனிஷ்ட தேசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் போட்டியானது இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தால் (NFSL) நாடு முழுவதிலுமுள்ள 20 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்டு வருடாந்தம் நடத்தப்படுகின்ற ஒரு முக்கிய போட்டியாக அமைவதுடன், இதனூடே சிறந்த வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதே முக்கிய நோக்கமாகவும் கொண்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தேசிய இளைஞர் அணிக்கு இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கான திறமைகளை இனங்காணும் வகையில் இந்த போட்டி திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதான அனுசரணையாளரான, டயலொக் ஆசிஆட்டா இப்போட்டிகளை thepapare.com, Dialog ViU மொபைல் App மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், இப்போட்டிகள் Dialog TV செனல் 140 இல் நேரடியாகவும் காண்பிக்கப்படும்.
"தேசிய அணிக்கு கனிஷ்ட திறமைகளை கண்டறிந்து தேர்வு செய்வதற்கான கடந்த செயல்முறையிலிருந்து தேசிய அணி மேலுமொரு படி முன்னேற்றம் அடைந்துள்ளது" என இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் (NFSL) தலைவர் லக்ஷ்மி விக்டோரியா தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் "தேசிய விளையாட்டுகளின் ஊக்குவிப்பாளர் என்ற ரீதியில், டயலொக் நிறுவனமானது இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கும் மற்றும் அதன் வீரர்கள் சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதில் ஆதரிப்பதிலும் முக்கிய பங்கினை வகித்துள்ளது" என்றார்.
டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி லீக், பாராலிம்பிக் விளையாட்டுக்கள், இராணுவ பாரா விளையாட்டுகள், மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கு இலங்கை அணியை வலுப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி இலங்கை விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.