பொருள் விரிவாக்கம்

டயலொக் அனுசரணையில் 144வது Battle of the Blues

இரண்டு வருடங்களின் பின்னர் றோயல் - தோமஸ் போட்டிகள் பார்வையாளர்களுக்கான அனுமதியுடன் நடைபெறுகின்றது

2023 மார்ச் 03         கொழும்பு

 

Battle of the Blues 2023

படத்தில் (இடமிருந்து வலம்): கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணியின் தலைவர் ரொமேஷ் மென்டிஸ், ரோயல் தோமியன் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் இணைத்தலைவர் குமுது வர்ணகுலசூரிய, புனித தோமஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை மார்க் பில்லிமோரியா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும டயலொக் எண்டர்பிரைஸின் பிரதான அதிகாரி நவீன் பீரிஸ், கொழும்பு -7 ரோயல் கல்லூரியின் அதிபர் ஆர்எம்எம் ரத்நாயக்க ,ரோயல் தோமியன் கூட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் ரெஹான் குணசேகர, கொழும்பு -7 ரோயல் கல்லூரி அணியின் தலைவர் தாசிஸ் மஞ்சநாயக்க ஆகியோரை காணலாம்.

கொவிட் -19 பரவலின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மிக நீண்டகால கிரிக்கெட் தொடர் வரலாற்றை கொண்ட கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிசை புனித.தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144 வது மாபெரும் கிரிக்கெட் போட்டி இம்முறை எவ்வித தடைகளுமின்றி நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, இம்முறை கௌரவ. டி. எஸ் சேனநாயக்க ஞாபகார்த்த கிண்ணத்திற்கான போட்டிகள் 2023 மார்ச் மாதம் 16 தொடக்கம் 18 ஆம் திகதி வரை கொழும்பு 07 எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

144 ஆவது றோயல் - தோமியன் போட்டிகள் இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி 18 ஆவது வருடமாக அனுசரணை வழங்குகின்ற போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் - 19 பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் போட்டி வீரர்களின் பாதுகாப்பு நிமித்தமாக பார்வையாளர்களுக்கு அனுமதியற்றதாக மூடிய விளையாட்டு அரங்கிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன, இருப்பினும் தற்போது கொவிட் – 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதனால் பாடசாலைகளின் கிரிக்கெட் ஆலோசனை குழு மற்றும் குறித்த பாடசாலைகளின் அதிபர்மார் ஆகியோரின் தீர்மானித்திற்கமைய இலங்கையின் Battle of the Blues சமர் என கருதப்படும் 144வது மாபெரும் கிரிக்கெட் போட்டி மேற்படி கல்லூரிகளின் தற்போதைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட கிரிக்கெட் அபிமானிகள் ஆகியோர் நேரடியாக கண்டுகளிக்கும் விதமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களை போலவே இம்முறையும் 144வது ‘Battle of the Blues’ கிரிக்கெட் போட்டி, டயலொக் டெலிவிஷன் அலைவரிசை எண் 22 இல் நேரலையில் ஒளிபரப்பப்படும், மேலும் ThePapare.com மற்றும் Dialog ‘Viu’ app ஊடாக LIVE stream இலும் பார்வையிடலாம். இதேவேளை , வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டியான ‘Mustangs Trophy’ கிண்ண போட்டி இதே மைதானத்தில் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும்.

பாடசாலைகளில் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையில், டயலொக் ஆசிஆட்டா அளித்திருந்த வாக்குறுதிக்கமைய 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது துடுப்பாட்ட வீரரின் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் தலா ரூ 1000 வீதமும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் தலா ரூ 10, 000 வீதமும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வருடம் நடைபெற்ற போட்டியின் போது ‘Play for a Cause’ எனும் உறுதிமொழிக்கு அமைய றோயல் கல்லூரி மற்றும் தோமஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபர்மாருடன் கலந்தாலோசித்து நாட்டில் உள்ள தகுதிவாய்ந்த பாடசாலைகளுக்கு ரூ. 834,000 நிதியுதவி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இம்முறை போட்டியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணிக்கு விக்கெட் காப்பாளரான ரொமேஷ் மென்டிஸ் தலைமை வகிக்கும் அதேவேளை, றோயல் கல்லூரி அணிக்கு சகலதுறை ஆட்டக்காரரான தசிஸ் மஞ்சநாயக்க தலைமை வகிப்பார் .

றோயல் – புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் 143 வருடங்களைக் கொண்ட செழுமையான மற்றும் வண்ணமயமான நீண்டதொரு வரலாற்றை கொண்டதாகும். மேலும், இந்த இரு பாடசாலைகளுக்கிடையிலான இப்போட்டியே உலகிலேயே தடையின்றி தொடர்ச்சியாக நீண்டகாலமாக நடைபெற்ற போட்டிகளுள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள போட்டியாகும். அவுஸ்திரேலியாவின் சென். பீட்டர்ஸ் மற்றும் பிரின்ஸ் அல்பிரட் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியே உலகிலேயே நீண்ட காலம் தொடர்ச்சியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டியாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே 1882 இல் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

1880 ஆம் ஆண்டில் பாடசாலை மட்டத்திலான முதலாவது கிரிக்கெட் போட்டி இலங்கையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் அமைந்துள்ள காலிமுகத்திடலிலேயே நடைபெற்றிருந்தது. நூற்றாண்டு பழமையான தொடரின் தொடக்கமாக இது அமைந்தது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக இரண்டு அணியினரும் கொழும்பு, பேரே வாவி(பெய்ரே லேக்) ஊடே படகின் மூலமாக காலி முகத்திடல் பகுதியை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.

1885 ஆண்டில் றோயல் - சென். தோமஸ் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது அபூர்வமான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருந்தது. அதாவது, இப்போட்டியின் போது றோயல் கல்லூரி சகல விக்கட்களையும் இழந்து ஒன்பது ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில், இரண்டாம் நாள் போட்டி நடைபெறாமலேயே சென்.தோமஸ் கல்லூரி வெற்றியை சுவீகரித்திருந்தது . 2019 ஆம் ஆண்டில் சித்தார ஹபுஹின்னவின் தலைமையின் கீழ் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், அப்போட்டியின் வெற்றிக்கிண்ணம் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி காட்சி கூடத்தில் மணிமகுடமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலப் பருவத்தில் தங்கள் போட்டியாளர்களுக்கு எதிராக சில கடினமான ஓட்டங்களை எடுத்த உறுதியான றோயல் XI (லெவன்) அணியினர் இந்த ஆண்டு 2023 இல் சவாலான ஓர் அணியாக திகழக்கூடும். றோயல் கல்லூரியினர் இறுதியாக 2016 இல் கீஷாந்த் படிதரத்னவின் தலைமையின் கீழ் கிண்ணத்தை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

றோயல் – புனித தோமஸ் ஆகிய கல்லூரிகள் மிகுந்த பாரம்பரியத்தையும், பிணைப்பையும், புரிந்துணர்வயும், கனவான் தன்மையையும், நட்புறவையும் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி களத்திற்கு வெளியேயும் உறுதியாக கடைபிடித்து வந்துள்ளன. இந்த நட்புறவானது கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்குகின்றது. றோயல் கல்லூரியின் முன்னாள் அதிபர் குறிப்பிட்டது போல்: “புனித.தோமஸ் இல்லாமல் றோயல் இல்லை, றோயல் இல்லாமல் புனித. தாமஸ் இல்லை” என்பது இதற்கு சிறந்தவோர் எடுத்துக் காட்டாகும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் வலைப்பந்து Esports அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, நொக்கவுட் கிண்ண போட்டிகள், பிரீமியர் கால்பந்து , ஜுனியர் கரப்பந்து மற்றும் பராலிம்பிக் விளையாட்டுக்கள், இராணுவ பரா விளையாட்டுகள் மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுகளுக்கு இலங்கை அணியை வலுப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி இலங்கை விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றது.