Body

84 அணிகள் களமாட டயலொக் பாடசாலை ரக்பி லீக் 2024 எதிர்வரும் ஜூன் 14 முதல் கோலாகலமாக ஆரம்பம்

29th May 2024       Colombo

 

A record 84 teams to compete at Dialog Schools Rugby League 2024

படத்தில் இ-வ:
நிரோத விஜேராம – அனைத்து போட்டி செயலாளர், SLSRFA, மனுஜா நிம்மான – செயலாளர், SLSRFA, ,கமல் ஆரியசிங்க – இலங்கை பாடசாலை ரக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர், கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர், லசந்த தெவெரப்பெரும – குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கௌரவ ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர், ஹர்ஷ சமரநாயக்க – துணைத்தலைவர், வர்த்தக நாமம் மற்றும் ஊடகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, புபுது அலுத்கெதர – சிரேஷ்ட பொது முகாமையாளர் / வணிக ஊடக மற்றும் உள்ளடக்கப் பிரிவு தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ப்ரஷான் கொஸ்டா – சிரேஷ்ட முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொழிற்பாடுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி

புதிய விளையாட்டு திறமைகளை வளர்க்கும் மற்றும் எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில், இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, டயலொக் பாடசாலை ரக்பி லீக் 2024 ஐ மீண்டும் முன்னெடுக்கின்றது. மொத்தம் 84 பாடசாலை அணிகள் மூன்று பிரிவுகளில் போட்டியிட உள்ளன, இது பாடசாலை ரக்பி லீக் வரலாற்றில் புதிய மைல்கல்லாகும். கடந்த சில ஆண்டுகளில் டயலொக் தொடர்ந்து வழங்கிய ஆதரவின் விளைவாக இம்முறை அதிகமான பாடசாலைகள் பங்கேற்கின்றன. அதில் அபிவிருத்தி சுற்றுப்போட்டிகள் போன்ற முன்னெடுப்புகளும் அடங்கும். பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பருவம் ஜூன் 14 ஆம் திகதி ஹவ்லொக் மைதானத்தில் பிரிவு 1 பகுதி A மோதலுடன் ஆரம்பமாகும்.

பிரதான அனுசரணையாளர் என்ற ரீதியில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த போட்டித்தொடரை Dialog Television - ThePapare TV (அலைவரிசை எண் 63), ThePapare TV HD (அலைவரிசை எண் 126), Dialog ViU மற்றும் Thepapare.com இல் நேரலையாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது தற்போதைய மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் இலங்கையின் ரக்பி ரசிக பட்டாளத்தின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைகின்றது.

டயலொக் பாடசாலை ரக்பி லீக் 2024 இல் பிரிவு 1 குழு A பட்டத்தை வெல்ல 16 பள்ளிகள் மோதுகின்றன. இதில் நடப்பு வெற்றியாளர்கள் புனித பீட்டர்ஸ் கல்லூரி, கடந்த ஆண்டின் இரண்டாம் இடம் பெற்ற றோயல் கல்லூரி, மற்றும் இஸிபத்தான கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, டிரினிட்டி கல்லூரி, வெஸ்லி கல்லூரி, வித்யார்த்த கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, விஞ்ஞான கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி, தர்மராஜ கல்லூரி, கிங்ஸ்வுட் கல்லூரி, டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, மற்றும் கண்டி சுமங்கல கல்லூரி, ஆகியவை அடங்கும். இவை கடந்த ஆண்டு பிரிவு 1 குழு B இலிருந்து முன்னேற்றம் பெற்றவையாகும். மேலும் 26 பள்ளிகள் பிரிவு 1 குழு B மற்றும் C இல் போட்டியிடும், அதேசமயம் 42 பள்ளிகள் பிரிவு 2 (12 அணிகள்) மற்றும் பிரிவு 3 (30 அணிகள்) இல் கலந்து கொண்டு, தமக்குரிய குழுக்களில் முன்னிலை வகிக்க முனையவுள்ளன.

இலங்கை பாடசாலை ரக்பி நாட்காட்டியில் முக்கிய போட்டித்தொடராக திகழும் டயலொக் பாடசாலை ரக்பி லீக் இன் முந்தைய பருவத்தில், புனித பீட்டர்ஸ் கல்லூரி வெற்றிவாகை சூடியது. டயலொக் பாடசாலை ரக்பி லீக் மற்றும் டயலொக் பாடசாலை ரக்பி K/O (நீக்கப் போட்டி) போட்டி இரண்டிலும் இறுதிப் போட்டியில் இஸிபத்தானவை தோற்கடித்து வெற்றிபெற்றது.

இந்த ஆண்டின் போட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரி, இஸிபத்தான கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, கல்கிஸை புனித தோமஸ் கல்லூரி மற்றும் கண்டி டிரினிட்டி கல்லூரி ஆகியன வலுவான போட்டியாளர்களாக எதிர்பார்க்கப்படுகின்றன.

“இந்த ஆண்டின் லீக், 84 அணிகளுடன் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான அணிகளை கொண்டுள்ளது. இது ஒரு முக்கியமான சாதனையாகும். டயலொக் பாடசாலை ரக்பி லீக் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, மற்றும் குறிப்பாக பொருளாதார நெருக்கடிமிக்க காலங்களில் , SLSRFAக்கு உறுதுணையாக இருந்த எங்கள் பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டாவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்று இலங்கை பாடசாலை ரக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் (SLSRFA) தலைவரான கமல் ஆரியசிங்க அவர்கள் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர் “தங்களது பிரிவுகளில் வெற்றி பெற 84 அணிகளும் போட்டியிடுவதால், எங்களுக்கு மிகவும் உன்னதமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

“நாளைய வெற்றியாளர்களை உருவாக்குவதில் நாம் காட்டும் உறுதியான அர்ப்பணிப்பின் அங்கமாக, பாடசாலை ரக்பி நாட்காட்டியில் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்” என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்கள் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், "2024 பருவம் சிறப்பாக நடைபெற SLSRFA மற்றும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் போட்டி மீதான அதீத எதிர்பார்ப்புகளுடன் எம் உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றார். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு தமது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ரக்பி உபகரணங்களை வழங்கவும் நிதியுதவிகளை அளித்துள்ளது.

“குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் பொருத்தமான பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய இலங்கை ரக்பி பாடசாலை ஒன்றியம் மற்றும் அதன் அதிகாரிகளை நாம் பாராட்ட வேண்டும், இது ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க உதவுகிறது. இந்த நிகழ்விற்கு அனுசரணை அளிப்பதன் மூலம் பாடசாலை ரக்பி ஒன்றியத்திற்கு உறுதுணையாக இருந்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியை நாங்கள் உளமாற பாராட்ட வேண்டும்,” என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார்.

“தேசிய மற்றும் சர்வதேச அளவுகளுக்கான அடித்தளத்தை பள்ளி ரக்பி அமைக்கிறது. 2020 முதல் பாடசாலை ரக்பி லீக் போட்டியின் பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, மேலும் நாட்டில் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளை பாராட்ட வேண்டும். இலங்கையில் ரக்பியை மேம்படுத்துவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்ட வேண்டும்,” என்று விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் கூறினார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் Esports அணிகளின் நீண்டகால ஆதரவாளராகவும், இலங்கை கோல்ஃப் ஓபன் போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் திகழ்கிறது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடக்கும் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உதவுவதற்காக, இலங்கை வலைப்பந்து சம்மேளனம் மற்றும் தேசிய பாராலிம்பிக் குழு போன்ற அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் பல்வகைமை, சம உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளிணைக்கும் விளையாட்டுச் சூழலை ஊக்குவித்து வருகிறது. மேலும், எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்துப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவு வலைப்பந்து போட்டிகள், மற்றும் பள்ளி ரக்பி போட்டிகளுக்கும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.