டயலொக் அனுசரணையில் 143வது Battle of the Blues
July 18, 2022 Colombo

கொழும்பு, ரோயல் கல்லூரியின் அணித் தலைவர் கிஷான் பாலசூரிய, ரோயல் தோமியன், கூட்டு போட்டி ஏற்பாட்டுக் குழு, துணை செயலாளர் அர்ஜுன வைத்தியசேகர, கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் சனத் ஜயலத் , Dialog Enterprise இன் குழும பிரதான அதிகாரி நவீன் பீரிஸ், கல்கிசை, புனித தோமஸ் கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய மார்க் பில்லிமோரியா, ராயல் தோமியன், கூட்டு போட்டி ஏற்பாட்டுக் குழு, துணை தலைவர் ரோஷன் ஆதம், கல்கிசை. புனித தோமஸ் கல்லூரியின் அணித்தலைவர் ரயன் பெர்னாண்டோ
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை சென் தோமஸ் கல்லூரி ஆகியவற்றிற்கிடையிலான 143 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஜூலை 21 தொடக்கம் 23 ஆம் திகதி வரை கொழும்பு-07 எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ டி.எஸ்.சேனநாயக்க ஞாபகார்த்த கிண்ண போட்டியாக மேற்படி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் பெருந்தொற்று மற்றும் நாட்டில் நிலவுகின்ற தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக, மேற்படி பாடசாலைகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் 143 வது றோயல் - தோமியன் கிரிக்கெட் போட்டியானது பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மாத்திரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அரங்கிலிருந்தவாறு போட்டியை கண்டுகளிக்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி 143வது ' நீலங்களின் சமர்' கிரிக்கெட் போட்டியானது டயலொக் டெலிவிஷன் அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும், ThePapare.com மற்றும் Dialog ‘Viu’ App ஆகியவற்றினூடே நேரடி ஸ்ட்ரீமிலும் போட்டியை கண்டு களிக்க முடியும். இப்போட்டிகளையடுத்து வரையறுக்கப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட ‘மஸ்டங்ஸ் கிண்ண ’ ஒரு நாள் போட்டியானது தொடர்ந்துவரும் சனிக்கிழமையன்று அதே மைதானத்தில் நடைபெறும்.
Battle of the Blues றோயல் - தோமஸ் 140 ஆவது போட்டியின்போது டயலொக் நீண்டதும் வெற்றிகரமானதுமான கூட்டாண்மையை மீண்டும் நிலைநாட்டியிருந்தது. அந்த வரிசையில் இம்முறைக்கான றோயல் - தோமஸ் 143வது போட்டியானது , இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா அனுசரணையளிக்கின்ற வெற்றிகரமான 14வது வருடமாகும். டயலொக் ஆசிஆட்டா தமது அனுசரணையின் கீழ் போட்டியின் போது துடுப்பாட்ட வீரரின் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் தலா ரூ 1000 வீதமும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் தலா ரூ 10, 000 வீதமும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை , கடந்த வருடம் நடைபெற்ற போட்டி யின்போது 'Play for a Cause’ நிதியத்திற்கு 383,000 ரூபா கிடைக்கப் பெற்றிருந்தது. அதன்படி , நாட்டில் இனங்காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், வலுவூட்டுவதற்கும் றோயல் கல்லூரியின் அதிபர் மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் அதிபர் ஆகியோருடன் கலந்தாலோசித்து அவர்களின் வழிகாட்டுதல்களின்படி இந்த நிதியுதவிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்குகின்ற இந்த வருட 143வது Battle of the Blues போட்டியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணியானது சகலதுறை ஆட்டக்காரரான ரயன் பெர்னாண்டோ தலைமையில் போட்டியிடும் அதேவேளை, கொழும்பு றோயல் கல்லூரி அணியானது மரபுவழி சுழல்பந்து வீச்சாளரான கிஷான் பாலசூரியவின் தலைமையில் போட்டியிடும்.
றோயல் - தோமஸ் கல்லூரி கிரிக்கெட் போட்டிகள் வண்ணமயமான நீண்டதொரு வரலாற்றை கொண்டதாகும். இந்த இரு பாடசாலைகளுக்கிடையிலான இப்போட்டியே உலகிலேயே தடையின்றி தொடர்ச்சியாக நீண்டகாலமாக நடைபெற்ற போட்டிகளுள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள போட்டியாகும். அவுஸ்திரேலியாவின் எடேலைட்டில் சென். பீட்டர்ஸ் மற்றும் பிரின்ஸ் அல்பிரட் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியே உலகிலேயே நீண்ட காலம் தொடர்ச்சியாக நடைபெற்ற பாடசாலைகளிற்கிடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டியாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்தே இரண்டு வருடங்களின் பின்னர் 1882 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 'ஏஷஸ் ' தொடர் முதன் முதலாக ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.
1880 ஆம் ஆண்டில்தான் ஆண்களிற்கான பாடசாலை மட்டத்திலான முதலாவது கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றிருந்தது. றோயல் கல்லூரிக்கும் சென். தோமஸ் கல்லூரிக்கும் இடையேயான இந்த போட்டியானது தற்போதைய கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் அமைந்துள்ள காலிமுகத்திடலை ஒட்டிய பகுதியிலேயே நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக இரண்டு அணியினரும் கொழும்பு, பேரே வாவி(பெய்ரே லேக்) ஊடே படகின் மூலமாக காலி முகத்திடல் பகுதியை வந்தடைந்தே போட்டியில் கலந்துகொண்டிருந்தனர். நூறாண்டுகளிற்குமேல் நடைபெற்று வருகின்ற இந்த றோயல் - தோமஸ் கிரிக்கெட் சமரின் ஆரம்பம் இப்படித்தான் அமைந்தது.
'ரோய் - தோ' ('Roy - Tho') என அழைக்கப்படும் இப்போட்டியின் ஆரம்பகர்த்தாவாக கருதப்படுபவர் தேசத்தின் தந்தையாக கருதப்படுகின்றவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த காலஞ்சென்ற கௌரவ டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் ஆவார்(1901 - 1902) அந்த வரிசையில் காலஞ்சென்ற மாண்புமிகு டி.எஸ்.சேனநாயக்க(எம்.பி) அவர்கள், மாண்புமிகு டட்லி சேனநாயக்க அவர்கள் - எம்.பி (1927 - 1929) ஆகியோர் நாட்டின் பிரதமர்களாக இருந்ததுடன் இப்போட்டிகளுக்ககான ஞாபகார்த்தமான பெருமைக்குரியவர்களாகவும் திகழ்ந்தனர். அவ்வாறே பிரதமராகிய காலஞ்சென்ற கௌரவ சேர் ஜோன் கொத்தலாவல-எம்.பி அவர்கள் (1914 - 1915) மற்றும் இலங்கையின் பிரதமராகவும் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகவும் இருந்த காலஞ்சென்ற கௌரவ ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களும் (1925) இப்பெருமைகளுக்குரியவர்களாவர்.
1885 ஆண்டில் றோயல் - சென். தோமஸ் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது அபூர்வமான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருந்தது. அதாவது, இப்போட்டியின் போது றோயல் கல்லூரி சகல விக்கட்களையும் இழந்து ஒன்பது ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில், இரண்டாம் நாள் போட்டி நடைபெறாமலேயே சென்.தோமஸ் கல்லூரி வெற்றியை சுவீகரித்திருந்தது. இவற்றின் தொடர்ச்சியாக இப்பாடசாலைகள் தத்தமது வெற்றிகளை குறிக்கும் விதமாக தமது பாடசாலைகளில் வெற்றி கேடயங்களை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் சித்தார ஹப்புஹின்னவின் தலைமையின் கீழ் சிறந்த ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர்,கொவிட் தாக்கத்தின் பின்னரும் கவனத்தை ஈர்க்கக்கூடிய திறமைகளை றோயல் கல்லூரி வெளிப்படுத்தியுள்ளது. றோயல் கல்லூரியினர் கடைசியாக 2016 இல் கீஷாந்த் பதித்தரத்னவின் தலைமையின் கீழ் வெற்றிக் கேடயத்தை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
"றோயல் - சென்.தோமஸ் கல்லூரிகள் மிகுந்த பாரம்பரியத்தையும், பிணைப்பையும், புரிந்துணர்வயும், கனவான் தன்மையையும், நட்புறவையும் விளையாட்டுக் களத்தில் மட்டுமன்றி களத்திற்கு வெளியேயும் உறுதியாக கடைபிடித்து வந்துள்ளது. இந்த நட்புறவானது கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்குகின்றது." என குறிப்பிட்டுள்ள றோயல் கல்லூரியின் அதிபர் அவர்கள், "சென்.தோமஸ் கல்லூரி இன்றி றோயல் கல்லூரி இல்லை, அவ்வாறே றோயல் கல்லூரி இன்றி சென்.தோமஸ் கல்லூரி இல்லை" என அழுத்தமாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து அணிகளுக்கு பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி லீக் மற்றும் நொக்கவுட் போட்டிகள் , பிரிமியர் கால்பந்து போட்டிகள், ஜூனியர் கரப்பந்து , பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.