டயலொக் அனுசரணையில் ‘88வது Battle of the Saints’
ஜுலை 11, 2022 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலம்: கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரஞ்சித் அந்தராடி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சட்ட மற்றும் ஒழுங்குமுறை, பிரிவு பொது ஆலோசகர்/துணைத் தலைவர் றினேஷ் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் ரோஹித்த ரொட்ரிகோ
இலங்கையின் 'பிக் மெட்ச்' நாட்காட்டியில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளுள் ஒன்றான 88வது வருடாந்த ‘Battle of the Saints’ போட்டி முதன்மையான கத்தோலிக்க ஆண்கள் கல்லூரிகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி ஆகியவற்றிற்கிடையே ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அருட்தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மேற்படி கிரிக்கெட் போட்டியானது , கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவுகின்ற தற்போதைய நெருக்கடி சூழ்நிலை காரணமாக, இந்த 88வது ‘Battle of the Saints’ கிரிக்கெட் போட்டியானது பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி மூடிய அரங்கில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, 'புனித ஜோசப் - பீட்டர்ஸ் கல்லூரிகளின் '88வது மாபெரும் கிரிக்கெட் போட்டி' மற்றும் வரையறுக்கப்பட்ட 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகிய போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி விளையாடப்படும் அதே வேளையில், இப்போட்டிகள் டயலொக் டெலிவிஷன் (Dialog Television ) அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாகவும், ThePapare.com லைவ் ஸ்ட்ரீம் மற்றும் Dialog ViU App மூலமாகவும் ஒளிபரப்பாகவுள்ளன.
'புனிதர்களின் சமர்' அதன் போட்டித் தன்மைக்கு மிகவும் புகழ்பெற்றது, ஏனெனில் போட்டியின் முதல் இன்னிங்ஸ் 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுவதால், இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியானது முடிவை எட்டும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதற்கமைய இம்முறை போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி அணிக்கு சகலதுறை ஆட்டக்காரரான ஷெவோன் டேனியல் தலைமை தாங்குவதுடன், புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிக்கு சகலதுறை ஆட்டக்காரரான வனுஜ குமார தலைமை தாங்குகின்றார். இந்த இருவரும் '19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணம் 2021' போட்டியில் கலந்து கொண்டவர்களாவர்.
இம்முறை போட்டிகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவாயின், இலங்கை தேசிய அணியின் புதிய இடது கை சுழற்பந்து வீச்சாளரும், கடந்த வருடம் இடம்பெற்ற புனித ஜோசப் - பீட்டர்ஸ் போட்டிகளின்போது புனித ஜோசப் அணியின் தலைவராகவும் இருந்த துனித் வெல்லாலகே, இம்முறை தனது கல்லூரியின் சார்பில் கலந்து கொள்ளும் இறுதி போட்டியாக இப்போட்டி அமையவுள்ளமையாகும். இது பாடசாலை அணியின் வீரர் ஒருவர் தேசிய அணியிலும் இடம்பெற்றவாறு தனது பாடசாலையின் சார்பிலும் போட்டியிடும் வாய்ப்பினை பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற அரிய சாதனையை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இதுபோன்றே , 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, பீட்டர்ஸ் அணியின் ஜாம்பவான் ரொமேஷ் ரத்நாயக்க உட்பட இன்னும் சிலரும் இவ்வாறு பாடசாலை அணியில் இடம்பெற்றவாறே தேசிய அணியிலும் இடம்பிடித்த சாதனைக்குரியவர்களாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவ்விரண்டு அணிகளும் இதுவரை பெற்றுள்ள மொத்த வெற்றிகளை நோக்குகையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் ருவந்த பெர்னாண்டோ புள்ளேயின் தலைமையின் கீழ் கிடைத்த கடைசி வெற்றியுடன், புனித ஜோசப் கல்லூரி 12 வெற்றிகளுடன் போட்டித் தொடர் வரிசையில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை, வினு மொஹொட்டியின் தலைமையின் கீழ் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் புனித பீற்றர்ஸ் கல்லூரி இறுதியாக வெற்றியீட்டியதுடன், தொடர் வரிசையில் இவ்வணியினர் பெற்ற 10 ஆவது வெற்றியாக இது அமைந்தது, மேற்படி வெற்றியை குறிக்கும் புனிதர் மொரிஸ் ஜே. லீ கொக் கிண்ணம் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் 50 ஓவர்களைக் கொண்டதும் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியாக (1975 இல்) கருதப்படுவதுமான 'அருட்தந்தை பீட்டர் ஏ. பிள்ளை ஞாபகார்த்த கிண்ணதிற்கான' ( 1975இல் ) ஜோசப் -பீட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியானது பாடசாலைகளுக்கிடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு எப்போதும் அதிக பார்வையாளர்களை ஈர்த்த ஒரு போட்டியாக அமைந்துள்ள ஒரு போட்டியாகும். அந்த வரிசையில் இம்முறையும் 50 ஓவர்களை கொண்ட புனித ஜோசப் -புனித பீட்டர்ஸ் ஒரு நாள் போட்டி ஜூலை 19 ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் வரிசையில் புனித ஜோசப் கல்லூரி கடந்த கடைசி மூன்று வருடங்களிலும் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுவந்துள்ளதுடன போட்டித் தொடர் வரிசையில் 24-20 என்ற கணக்கில் அவ்வணி முன்னணியில் உள்ளதுடன் இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த இரண்டு கல்லூரிகளும் பல தேசிய அணி தலைவர்களை உருவாக்கிய சிறப்பை கொண்ட கல்லூரிகளாகும். அதன்படி , இலங்கையின் தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்யூஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, ஆஷ்லி டி சில்வா, மைக்கல் வன்டோர்ட், ரொஷேன் சில்வா, பிரியமல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜோசப்பியன்களாகும் , அவ்வாறே , ரோய் டயஸ் , ரொமேஷ் ரத்நாயக்க, வினோதன் ஜோன், அமல் சில்வா, ரசல் ஆர்னோல்ட், கௌஷல் லொக்கு ஆராச்சி, மலிந்த வர்ணபுர , ஏஞ்சலோ பெரேரா மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய பீட்டரைட்ஸ்களாவர்.
டயலொக் ஆசி ஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து , வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி , பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.