Body

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, எயார்டெல் லங்காவை கையகப்படுத்துதல் பூர்த்தியடைந்துடன் ஒன்றிணைப்பு செயன்முறை ஆரம்பம்

2024 ஜூன் 27         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

பங்கு விற்பனை பரிவர்த்தனையின் பூர்த்தி (புகைப்படத்தில் இடமிருந்து வலமாக): விரந்தி ஆட்டிகல்ல, குழும நிறுவனச் செயலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ட்ரினேஷ் பெர்னாண்டோ, குழும பொது சட்ட ஆலோசகர் / துணைத்தலைவர் - சட்டம் மற்றும் ஒழுங்குமுறை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; யப் வை யிப், (பதில்) குழும பிரதம நிதியியல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர்/ குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஆஷிஷ் சந்திரா, பிரதம நிறைவேற்று அதிகாரி/ நிர்வாகப் பணிப்பாளர், பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட்; ரவி ஜெய்ன், உதவித் துணைத்தலைவர், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் வணிக அபிவிருத்தி, பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட்; பங்கஜ் கார்க், பணிப்பாளர்/ பிரதம நிதியியல் அதிகாரி, பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட்; முனேஷ் டேவிட், குழும பிரதம வர்த்தக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி

தேவையான அனைத்து ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதல்களை தொடர்ந்து, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (“Dialog”), ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட் (“Axiata”) மற்றும் பார்த்தி எயார்டெல் லிமிடட் (“Bharti Airtel”) (“தரப்பினர்” அனைவரும் ஒன்றாக), ஆகியன பங்கு விற்பனை பரிவர்த்தனை வெற்றிகரமாக பூர்த்தியானது. இந்த பங்கு பரிமாற்றத்தின் மூலம் டயலொக் நிறுவனம், பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடட்டின் (“Airtel Lanka”) வெளியிடப்பட்ட 100% பங்குகளை கையகப்படுத்துகிறது. இந்த பங்கு பரிமாற்றத்தின் பின்னர், டயலொக்கின் 73.75% பங்குகளை ஆசிஆட்டாவும், 10.355% பங்குகளை பார்த்தி எயார்டெல் நிறுவனமும் மிகுதி 15.895% பங்குகளை பொது மக்களும் உரிமை கொண்டாடுவர். கம்பனி சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளுக்கு அமைய எயார்டெல் லங்காவை தன்னுடன் ஒன்றிணைக்க டயலொக் முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பாக டயலொக் திகழும்.

இந்த இணைப்பு, 2023 மே மாதத்தில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இரண்டு முன்னணி நிறுவனங்களின் பலத்தையும் நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைத்து, நாட்டின் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலகத்தர டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி, நாட்டின் டிஜிட்டல் சூழலமைப்புக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கவுள்ளன.

இணைப்பின் பின்னர், டயலொக் மற்றும் எயார்டெல் லங்கா ஆகியன வழமைபோலவே வாடிக்கையாளர்களுக்கு தமது சேவைகளை தொடர்ந்து அளிக்கும் அதேவேளை, அபரிமிதமான மதிப்பும் மற்றும் அதிசிறந்த இணைப்பு தீர்வுகளையும் அளிக்கும் நோக்குடன் இரு வலையமைப்புகளும் இணைந்து பணிகளை தொடங்கவுள்ளன.

“இந்த மைல்கல் டயலொக் மற்றும் எயார்டெல் லங்கா இடையிலான இணைப்பின் பூர்த்தியைக் குறிக்கின்றது. எயார்டெல் குழுவினரையும் அவர்தம் 3 மில்லியன் சந்தாதாரர்களையும் டயலொக் குடும்பமாகிய நாம் உளமார வரவேற்கின்றோம். இத்தருணத்தில் இப்பரிவர்த்தனையை இனிதே நிறைவேற்ற தம் ஒப்பில்லா ஆதரவை நல்கிய இலங்கை அரசாங்கம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC), முதலீட்டுச் சபை (BOI), கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை (CSE), இலங்கை மத்திய வங்கி (CBSL), ஆசி ஆட்டா மற்றும் பார்த்தி எயார்டெல் மற்றும் இதர பங்குதாரர்கள் அனைவருக்கும் எமது உளம்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்.

“இம்மாறுதல்மிக்க பயணத்தை நாம் ஆரம்பிக்கும் இவ்வேளையில், நமது கவனம் இப்போது டயலொக் மற்றும் எயார்டெல் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு பலத்தைப் பயன்படுத்தி, இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் முன்னேற்றங்களை நிகழ்த்துவதன்மீது குவிந்திருக்கின்றது. இந்த ஒரு இணைப்பு, பாரிய வளர்ச்சியை அடைய ஏதுவாக நம்மை நிலைநிறுத்துகிறது, மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் புதுமைக்காக மட்டுமின்றி, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுவதற்கும் உதவுகிறது. இந்த வெற்றிகரமான மாற்றம் இணைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய அடித்தளங்களை அமைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதிகளவான நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம், மாறிவரும் டிஜிட்டல் உலகத்தில் வணிகங்களையும் தனிநபர்களையும் சக்திவாய்ந்தவையாக மாற்றும் வகையில் புதிய அடைவுமட்டங்களை எட்டுவதில் நாம் காட்டும் அர்ப்பணிப்பை இந்த மூலோபாய நகர்வு வலியுறுத்துகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.