Body

அனைவருக்கும் ஏதுவான வகையிலான online பாவனையை ஆதரிக்கும் வகையில் டயலொக் தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தை தரமுயர்த்துகிறது.

2023 நவம்பர் 20         கொழும்பு

 

 Official Website to Support Inclusive Online Journeys

புகைப்படம் இடமிருந்து வலமாக: சுகத் வசந்த டி சில்வா, கௌரவ தலைவர், இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் கழகம், சாண்டரா டி சொய்ஸா, குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அஷானி சேனாரத்ன, பொது முகாமையாளர் - குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அசங்க பிரியதர்ஷன, குழும இடர் மற்றும் இணக்க தலைவர் மற்றும் பேண்தகைமைக்கான தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர், தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான dialog.lk ஐ அனைவரையும் கருத்தில்கொள்ளும் நிறுவன கொள்கையின் மீதுள்ள அசைக்கமுடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாக மாற்றுத்திறனாளி பயனர்களுக்கு இலகுவான வகையில் மீள வடிவமைத்து தரமுயர்த்தவுள்ளதை அறிவித்துள்ளது.

எல்லாவிதமான மக்களும் பாவிக்கக்கூடிய வகையில் அவர்களை கருத்திற்கொண்டு இவ்வலைத்தளம் தரமுயர்த்தப்படுகிறது. இதனுடன் dialog.lk இனி வாசிப்பவருக்கு இணக்கமான திரையமைப்பு, நிறக்குருடு உள்ளோருக்கேற்ற வண்ணக்கோர்வைகள், படங்கள் மற்றும் பல்ஊடக பதிவுகளுக்கு ஒத்த மாற்று எழுத்து வடிவ பதிவுகள், துலங்கல் மிகு வடிவமைப்பு, தெளிவான மற்றும் இலகுவான மொழிநடையுடன் பயனருக்கு இலகுவான வகையில் உலவும் வசதியையும் தொழில்நுட்ப ஆதரவு வசதியையும் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. பார்வை குறைபாடுகள், இயக்கத் திறன் சீர்கேடு, அறிவுத்திறன் வளர்ச்சி குறைபாடு, அவதானக்குறை மிகையியக்க குறைபாடு (ADHD) மற்றும் வலிப்பு நோய் உள்ளோர் முதலான பலதரப்பட்ட தேவைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள அனைவரது தேவைகளையும் இவ்வசதிகள் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் குறிப்பாக இலக்கு 9 - மீண்டெழக்கூடிய உட்கட்டமைப்பை கட்டியெழுப்புதல், உட்சேர்க்கைமிக்கதும் நிலைபேறானதுமான தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் புதுமைகளை வளர்ப்பது என்பதற்கிணங்க டயலொக்கின் சேவைகளை அணுகும் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்கச்செய்வதே நிறுவனத்தின் இலக்கு. அதன்படி வலைத்தளத்தை தரமுயர்த்துவது, வாடிக்கையாளர்கள் நிறுவனத்துடன் ஊடாடும் அனைத்து டிஜிட்டல் தொடுபுள்ளிகளையும் மறுசீரமைப்பதற்காக நிறுவனம் வகுத்துள்ள பாரிய திட்டத்தின் முதல் கட்டமாகும்.

இதுகுறித்து இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் கழக கௌரவ தலைவர் சுகத் வசந்த டி சில்வா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மாற்றுத்திறனாளிகளும் அணுக்கக்கூடிய வகையில் சேவைகளை வழங்குவதற்கு டயலொக் மேற்கொள்ளும் முயற்சியை காண்கையில் நான் பேருவகையடைகிறேன். மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக தமது சேவைகளை தம் வலைத்தளம் வழியே பெறுவதற்காக டயலொக் அளிக்கும் அர்ப்பணிப்பானது ஒரு சமமான உலகை நோக்கி நாம் எடுத்துவைக்கும் முக்கியமான அடியாகும். இது புரிந்துணர்வு மற்றும் பொறுப்பான கூட்டுத்தாபன குடியுரிமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாக அமைகிறது” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும இடர் மற்றும் இணக்க தலைவர் மற்றும் பேண்தகைமை தலைவர் அசங்க பிரியதர்ஷன அவர்கள் உரையாற்றுகையில், “மாற்றுத்திறனாளிகளையும் எம்மவர் போல் உள்வாங்கி அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக நாம் காட்டும் அர்ப்பணிப்பின் ஒரு படியாக, dialog.lkவை மீண்டும் கட்டமைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் சேவைகளை அனைவரும் பெறக்கூடிய வகையில் ஒரு சமமான அணுகலை உறுதி செய்வதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறோம் என்பதற்கு இதுவோர் சான்று. வாசிப்பவருக்கு இணக்கமான திரையமைப்பு, பார்வைக்கேற்ற வண்ணக்கோர்வைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வசதி போன்ற அம்சங்களுடன், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த முன்னெடுப்பு அனைவரையும் உள்வாங்கி சேவையாற்ற வேண்டும் என்ற எங்கள் பாரிய திட்டத்திற்கு இது ஒத்திசைகின்றது, அனைவரும் அணுகக்கூடியதும் பயனருக்கு இலகுவான டிஜிட்டல் அனுபவங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தனிநபர்களையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் காட்டும் அர்ப்பணிப்பை இது எதிரொலிக்கிறது” என்றார்.

இந்த அறிவிப்பு இரத்மலானை செவிப்புல மையம் மற்றும் யாழ் பேச்சுசிகிச்சை மையம் உட்பட பல குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளைப் பின்பற்றுகிறது, அவை செவிப்புலன் மற்றும் பேச்சு பிரச்சினைகளுக்கான சிறந்த மையங்களாக செயற்படுகின்றன மற்றும் 2007 முதல் சமூகங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மற்றொரு முன்னெடுப்பான, Deaftawk, பயனர்கள் சைகை மொழிமொழிபெயர்ப்பாளர்களுடன் நிகழ்நேரத்தில் (realtime) தொடர்புகொள்ள அனுமதிப்பதன் மூலம் செவிப்புலனற்ற சமூகத்தினரிடையே உள்ள தொடர்பாடல் இடைவெளியைக் குறைக்க உதவும் ஒரு app வடிவமைக்கப்பட்டுள்ளது.