சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளை நிறைவுசெய்தது டயலொக்
முழுமையான வசதிகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உள்நோக்கியியல் பிரிவு என்பன மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வைப்பு
2026 அக்டோபர் 07 கொழும்பு
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் நினைவுப் பலகையைத் திறந்து வைத்தல். இடமிருந்து வலமாக: திரு. அசங்க பிரியதர்ஷன, குழும தலைமை நிறுவன அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு), பணிப்பாளர் நாயகம், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு; திரு. டேவிட் நை பெக் லாவ், தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கௌரவ டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்; டாக்டர் சுமித் அத்தநாயக்க, பணிப்பாளர், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை; திருமதி ஹிருணி விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்; டாக்டர் தினேஷ் கொக்கலாகே, பிரதிப் பணிப்பாளர், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை; டாக்டர் பி. ஏ. டி. டி. எஸ். பொன்வீர, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சிலாபம்.
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் நவீனமயமாக்கப்பட்ட உள்நோக்கியியல் பிரிவை விருந்தினர்கள் பார்வையிடுகின்றனர்.
இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் புனரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, முழுமையான வசதிகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சைப் பிரிவு (Operating Theatre) மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உள்நோக்கியியல் பிரிவு (Endoscopy Unit) என்பவற்றை வைத்தியசாலைக்கு மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளித்துள்ளது. அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய இந்த புதிய வசதிகள், அறுவைச் சிகிச்சை மற்றும் நோயறிதல் சேவைகளை வலுப்படுத்துவதுடன், சிலாபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்குத் தரமான சுகாதார வசதிகள் கிடைப்பதை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.
'டிட்வா' (Ditwah) சூறாவளி பாதிப்பிற்குப் பிந்தைய காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் உள்ள முக்கியமான சுகாதார மற்றும் கல்வி உள்கட்டமைப்புகளைப் புனரமைத்து வலுப்படுத்துவதற்காக டயலொக் மேற்கொண்டுள்ள பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சிலாபம் திட்டம் அமைந்துள்ளது. இச்சூறாவளியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வைத்தியசாலை வசதிகளைப் புனரமைத்தல், பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய மீண்டெழும் திறனை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் உட்பட நாட்டின் முன்னுரிமைத் தேவைகளுக்காக வளங்களை வழங்கி, நாட்டின் மீட்சிக்கு ஆதரவளிக்க டயலொக் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.
புனரமைக்கப்பட்ட மருத்துவ வசதிகள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சரான கௌரவ டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் 2026 அக்டோபர் 07 அன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தலைவர் திரு. டேவிட் நை பெக் லாவ் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க ஆகியோருடன் அரசாங்கப் பிரதிநிதிகள், சுகாதார அதிகாரிகள், வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், “வலுவான சுகாதார அமைப்பையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம், தனியார் துறை மற்றும் எமது சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமானதுடன், தேசிய முன்னுரிமைகளுக்கு ஆதரவாக அவர்களின் ஆற்றல்களை ஒன்றுதிரட்டுவதும் முக்கியமாகும். சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை மற்றும் நோயறிதல் சேவைகளை வலுப்படுத்துவதுடன், சுற்றியுள்ள சமூகங்களுக்குத் தரமான சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் இத்திட்டமானது, இத்தகைய கூட்டுப்பங்களிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. டயலொக்கின் பங்களிப்பையும், இலங்கை முழுவதிலும் உள்ள சுகாதார சேவைகளுக்கு ஆதரவளிப்பதில் அதன் தொடர்ச்சியான கூட்டாண்மையையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தலைவர் திரு. டேவிட் நை பெக் லாவ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் மற்றும் நீண்டகால அபிவிருத்திப் பங்காளர் என்ற வகையில், இந்நாட்டோடும் இதன் மக்களோடும் இணைந்து வளர்ச்சிபெறும் வாய்ப்பை ஆசிஆட்டா மற்றும் டயலொக் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. மிகவும் அத்தியாவசியமான தேவைகள் உள்ள இடங்களில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையினால் சேவையாற்றப்படும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் மருத்துவப் பராமரிப்பை மேம்படுத்த இத்திட்டம் உதவும் என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இதுபோன்ற முயற்சிகள் ஊடாக, நிலையான தாக்கத்தை ஏற்படுத்தவும், இலங்கையர்களின் வாழ்க்கையையும் தொழில்துறைகளையும் வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்,” எனக் கூறினார்.
இம்முதலீடானது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு டயலொக் வழங்கி வரும் நீண்டகாலப் பங்களிப்பின் தொடர்ச்சியாகும். கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில், நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம பொது வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை (ICU) அமைத்தல், PCR பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குதல் உட்பட தேசிய ரீதியான நடவடிக்கைகளுக்கு டயலொக் ஆதரவளித்தது. அன்றிலிருந்து, நாட்டின் முக்கியமான பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் டயலொக் அரசாங்கத்துடனும் சுகாதார நிறுவனங்களுடனும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது.
பேரிடருக்குப் பிந்தைய டயலொக்கின் பரந்த மீட்சித் திட்டத்தில் சிலாபம் திட்டத்தின் நிறைவானது மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், அத்தியாவசிய சேவைகளை மீளமைக்கவும், சமூகங்களின் மீண்டெழும் திறனை வலுப்படுத்தவும், நாட்டின் நீண்டகால அபிவிருத்தி மற்றும் மீட்சிக்குப் பங்களிக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் டயலொக் கொண்டுள்ள தொடர்ச்சியான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.