தேசிய வலைப்பந்தாட்டத்திற்கான ஆதரவை டயலொக் நீடித்துள்ளது!
2022 ஆகஸ்ட் 26 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் அஷானி சேனாரத்ன அவர்கள் NFSL தலைவர் விக்டோரியா லட்சுமியிடம் அனுசரணையை கையளித்தார்.
மேலும் படத்தில் (இடமிருந்து வலமாக) NFSL இன் செயலாளர் விந்தனா தயாரத்ன மற்றும் NFSL இன் பொருளாளர் பத்மினி ஹொரணகே
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையின் தேசிய வலைப்பந்து சம்மேளனத்திற்கு 2024 ஆம் ஆண்டு வரை தனது கூட்டாதரவை தொடர்ந்தும் வழங்க முன்வருவதன் மூலம் தேசிய விளையாட்டுகளுக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வலைப்பந்தாட்ட போட்டியானது பாடசாலை, கழகம் மற்றும் தேசிய மட்டங்களில் அதிகளவான விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் பரவலாக விளையாடப்படும் ஒரு விளையாட்டாகும். அதற்கமைய, இலங்கை தேசிய வலைப்பந்து அணியானது ஆசிய செம்பியன்ஷிப்பில் தொடர்ந்து சிறப்பாக பிரகாசித்து வருவதுடன் தற்போது நடப்பு செம்பியனாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக 2018 ஆம் ஆண்டிலேயே இலங்கை தேசிய வலைப்பந்து சம்மேளனத்திற்கு (NFSL) டயலொக் தனது கூட்டாதரவை வழங்கத் தொடங்கியது. மேலும், பல வருடங்களாக தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து செம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருவதன் மூலம் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும் எதிர்கால செம்பியன்களை வளர்ப்பதற்கும் டயலொக் தமது ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
“கடந்த சில வருடங்களாக கொவிட் - 19 பெருந்தொற்றின் காரணமாக எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும் தேசிய சிரேஷ்ட செம்பியன்ஷிப் போட்டிகளை வெற்றிகரமாக நாங்கள் நடத்தினோம், இது எமது அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்க முடியாது. எனவே, இவ்வாறு இலங்கையில் வலைப்பந்து போட்டிகளுக்கு ஆதரவளிப்பதில் டயலொக் ஆசிஆட்டா தமது கூட்டாதரவை நீடித்தமைக்காக டயலொக்கிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என தேசிய வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சனி ஜெயக்கொடி தெரிவித்தார்.
“இலங்கையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதிலும் எதிர்கால செம்பியன்களை வளர்ப்பதிலும் தேசிய வலைப்பந்து சம்மேளனத்திற்கான கூட்டாதரவை தொடர்ந்தும் வழங்க முடிந்துள்ளதையிட்டு டயலொக் ஆசி ஆட்டா நிறுவனமானது மகிழ்ச்சி அடைகின்றது. தேசிய வலைப்பந்தாட்ட அணியானது ஆசிய மட்டத்திலான சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்டு வருகின்ற அதேவேளை, ஏனைய சர்வதேச போட்டிகளிலும் இவ்வணி இதே உத்வேகத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் என நான் நம்புகின்றேன்” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் அஷானி சேனாரத்ன தெரிவித்தார்.
டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கு பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், பாடசாலை ரக்பி, பிரீமியர் கால்பந்து பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.