டயலொக் ஆசிஆட்டா இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து ”Youth Can” நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வலுவூட்டுகின்றது.
ஆகஸ்ட் 12, 2021 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலப்புறமாக:அனுராத விஜேகோன் - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர், கௌரவ நாமல் ராஜபக்ஷ - இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சர், சுபுன் வீரசிங்க - பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி
இலங்கையில் திறமைசாலிகளாகவுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து, வழிகாட்டி, வலுவூட்டி மற்றும் வளர்ச்சி பெறச் செய்வதற்காக நாடளாவிய அளவில் ஒரு தளத்தை உருவாக்குவதற்காக இலங்கையின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து நாட்டில் முதன்முதலில் தேசிய அளவிலான “Youth Can” எனும் செயற்றிட்டத்தின் மூலம் இளைஞர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தமது கனவுகள், வீரியம் மற்றும் உற்சாகத்தின் உந்துசக்தியைக் கொண்டுள்ள இலங்கை இளைஞர்களுக்கு வழிகாட்டும் மற்றும் வளர்க்கும் நோக்கத்துடன், இலங்கையில் மறைந்திருக்கும் திறமைசாலிகளைத் தேடி வெளிக்கொண்டு வருவதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றுக்கு டயலொக் ஆசிஆட்டா தனது ஆதரவினை வழங்குகின்றது. மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், சிறுதொழில் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் ஆகியனவும் இதற்கு மேலதிக ஆதரவை வழங்குகின்றன. இந்த முயற்சியானது ஆற்றல்மிக்க, இலட்சியம்மிக்க நபர்களை அவர்களுக்கு விருப்பமான துறைகளில் தமது கனவுகளை நனவாக்க வாய்ப்பளிப்பதன் மூலம் அவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மூன்று ஆண்டுத் திட்டம் நாடு முழுவதிலுமிருந்து 14 முதல் 35 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் தலைமையிலான வணிக தொடக்கங்கள் மற்றும் தனிநபர்களை விளையாட்டு, உத்வேகம், கைவினை, ஃபேஷன் டிசைன், சமையல் மற்றும் குறும்படம் எனும் 6 விதமான வகைப்படுத்தலின் ஊடாக இனம் காணுவதில் கவனம் செலுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு மாறுபட்ட, தனித்துவமான அல்லது புத்தாக்கத்துடனான திறமை, சிந்தனை அல்லது திறன்கள் ஆகியவற்றுடன் நீண்ட கால வளர்ச்சி மனநிலையையும் கொண்டிருக்க வேண்டும். ஆண்டு முழுவதும், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் தமது வர்த்தகநாமத்தை சிறப்பாக வளர்க்கவும், பொருத்தமான கருவிகள் மற்றும் தங்களை சிறப்பாக சந்தைப்படுத்த பயிற்சி அளிக்கவும் செயலமர்வுகள் மூலம் டயலொக் ஆசிஆட்டா தொடர்ந்து அவர்களை வலுவூட்டும். திறமை தேர்வு குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம், சிறு தொழில் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் கீழ் செயல்படுவார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.youthcan.lk எனும் இணையதளத்திற்கு சென்ற இளைஞர் திறமைகளை அடையாளம் காணல் மற்றும் அதிகாரமளித்தல் திட்டம் தொடர்பான தகவல்களை அணுகி தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்துரைத்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ஷ, “இளைஞர் நலன், இளைஞர் பங்கேற்பு மற்றும் மிக முக்கியமாக இளைஞர்களுக்கு ஒரு தெளிவான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதில் எங்களுடன் ஒத்துழைப்பதற்கு அயராது முயற்சி செய்த டயலொக் ஆசிஆட்டாவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் சார்பில் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கூட்டாண்மை மூலம், இளைஞர்கள் வரும் காலங்களில் உலகில் வெற்றிபெற ஒரு தளத்திற்கு நாங்கள் இடமளித்துள்ளோம். நமது இளைஞர்களின் பெருமையை பாதுகாக்கும் திறனை நாம் பெற்றுக்கொள்வதுடன், வருங்கால உலகளாவிய இளம் தலைவர்களுக்கு ஒரு களத்தையும் நாம் வழங்குகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளரான அனுராத விஜேகோன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்த்த டயலொக் ஆசிஆட்டாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் முயற்சியால் நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் எதிர்கால அபிவிருத்திகளுக்கான எங்கள் வேலைத்திட்ட அட்டவணையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும். எம்முன்னால் ஒரு நீண்டகால மற்றும் நற்பலனளிக்கும் பயணம் உள்ளது, இந்த கூட்டாண்மை ஒரு வருங்கால அத்திவாரத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து சென்று, வரும் காலங்களில் டயலொக்கின் அனைத்து எதிர்கால ஒத்துழைப்புகளையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இளைஞர்கள் நம் நாட்டுக்கு ஒரு அருஞ்சொத்து. இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியில் அவர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். இந்த கூட்டாண்மை மூலம், நமது தேசத்தின் இளைஞர்களுக்கு தமது ஆர்வத்தை சிறப்பாக முன்னெடுக்க எதிர்காலத்தை வெல்வதற்கு ஊக்குவிப்பதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பதில் டயலொக் ஆசிஆட்டா பெருமிதம் கொள்கின்றது.