டயலொக் அனுசரணையில் பாணந்துறை மொரட்டுவை மோதும் 72வது தங்கச்சமர்
2024 மார்ச் 21 கொழும்பு
படத்தில் இ-வ: மஹித் அப்புஹாமி - அணித்தலைவர், மொரட்டுவை மகா வித்தியாலயம், திலின பீரிஸ் - உப பொருளாளர், பழைய மொரட்டு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு கழகம், ருவன் ஆரம்பேபொல - அதிபர், மொரட்டு மகா வித்தியாலயம், புபுது அளுத்கெதர - சிரேஷ்ட பொது முகாமையாளர்/ வணிக தலைவர், Dialog Television , டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, லசந்த தெவரப்பெரும - குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ரவீந்த்ர புஷ்பகுமார - அதிபர், ஸ்ரீ சுமங்கல கல்லூரி, பாணந்துறை, சாமர பீரிஸ் - செயலாளர், ஸ்ரீ சுமங்கல கல்லூரி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சங்கம், விதுஷ பீரிஸ் - அணித்தலைவர், ஸ்ரீ சுமங்கல கல்லூரி, பாணந்துறை
நாளைய வெற்றியாளர்களுக்கு வலுவூட்டிடும் அயராத அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ‘பாணந்துறை மொரட்டுவை மோதும் 72வது தங்கச்சமருக்கு’ அனுசரணை வழங்குகிறது. பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி மற்றும் மொரட்டுவை மொரட்டு மகா வித்தியாலயத்திற்கு இடையிலான இப்போட்டிகள் மார்ச் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் மொரட்டுவை டீ சொய்ஸா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆட்டம் அதே இடத்தில் மார்ச் 31ந்திகதி அன்று நடைபெறும்.
பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா, பெருஞ்சமர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. Dialog Television - ThePapare TV HD (அலைவரிசை இலக்கம் 127) மற்றும் ThePapare.com இணையதளம் மற்றும் Dialog ViU App ஆகியவற்றில் ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பாகக் காணலாம்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “பெருஞ்சமர் பருவம் என்பது இலங்கையின் விளையாட்டு பாரம்பரியத்தின் அடிக்கல்லாகும். எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவிருக்கும் நாளைய வெற்றியாளர்களுக்கு வளமூட்டும் வகையில் தொடர்ந்து அளிக்கும் ஆதரவளிப்பது எமக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கி பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி மற்றும் மொரட்டுவை மொரட்டு மகா வித்தியாலயத்திற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
பாணந்துறை அணியை விதுஷ பீரிஸ் தலைமை தாங்கும் அதேவேளை மொரட்டுவை அணி மஹித் அப்புஹாமி தலைமையில் களமிறங்குகிறது. ஸ்ரீ சுமங்கல கல்லூரி 8 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்க மொரட்டு மகா வித்தியாலயம் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. 56 ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளன. இறுதியாக நடைபெற்ற 71வது சமர் இடைவிடாத மழை காரணமாக சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மொரட்டு மகா வித்தியாலயம் 55.3 ஓவர்கள் முடிவில் 144 ஓட்டங்களை பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ சுமங்கல கல்லூரி 86 ஆட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருக்கையில் மழை குறுக்கிட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆட்டங்களில் இதுவரை 30 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஸ்ரீ சுமங்கல கல்லூரி 15 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்க மொரட்டு மகா வித்தியாலயம் 12 வெற்றிகளை பெற்றுள்ளது. இரண்டு ஆட்டங்கள் முடிவேதுமின்றி நிறைவடைந்தன. இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு ஆடவர் மற்றும் மகளிர் என் இரு பிரிவிலும் வீர வீராங்கனைகளை வழங்கிய இலங்கையின் ஒரே பாடசாலை என்ற பெருமை மொரட்டு மகா வித்தியாலயத்தையே சேரும். இரு பாடசாலைகளும் திறமைவாய்ந்த வீரர்களை இலங்கை அணிக்கு அளித்துள்ளன. சரத் பெர்னாண்டோ, பெர்னார்ட் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் நிஷான் மதுஷங்க ஆகியோர் மொரட்டு மகா வித்தியாலயத்திலிருந்தும் திஸ்ஸ எலெபெரும, டொன் அனுரசிறி, இந்திக கல்லகே மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் ஸ்ரீ சுமங்கல கல்லூரியிலிருந்தும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவானோர் ஆவர்.
முன்னாள் இலங்கை வீரர் ஹசந்த பெர்னாண்டோ தனது பாடசாலை கிரிக்கெட்டை மொரட்டு மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். இனோஷி பெர்னாண்டோ மற்றும் உபேக்ஷா தப்ரூ ஆகியோர் மொரட்டு மகா வித்தியாலயத்திலிருந்து இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தெரிவானவர்கள் ஆவர். இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் தேசிய அணியில் சுமங்கல கல்லூரியை சேர்ந்த விஷ்வ லஹிரு இடம்பிடித்துள்ளார். அத்துடன் கௌஷல் சில்வா, கித்ருவான் விதானகே மற்றும் ஓஷத பெர்னாண்டோ ஆகியோர் ஸ்ரீ சுமங்கல கல்லூரியில் தமது பாடசாலை கிரிக்கெட்டை ஆரம்பித்தோர் ஆவர். மற்றுமொரு முக்கியமான சுமங்கல கல்லூரி மாணவர் என்றால் அது தற்போதைய இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன ஆவார். 1981 பெருஞ்சமரில் சதமடித்து (104 ஆட்டமிழக்காமல்) ஒரு hat-trick உடன் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இவர் நிகழ்த்திய சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை பகிரங்க கொல்ஃபிற்கு பிரதான அனுசரணையாளராக திகழ்வதுடன், பராலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய பரா விளையாட்டுகளுக்கும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கும் அனுசரணை அளிக்கிறது. இவற்றுடன் நாளைய வெற்றியாளர்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி ஆகியவற்றிற்கு தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.