2026 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி தொடருக்கு டயலொக் ஆசிஆட்டா வலுசேர்க்கின்றது
2026 මාර්තු 09 කොළඹ
இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு. புத்திக அத்தனாயக்கவிடம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும, இத்தொடருக்கான பிரதான அனுசரணை காசோலையை (Title Sponsorship Cheque) கையளித்தார்.
இந்நிகழ்வில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் திரு. ஹர்ஷ சமரநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரதிப் பணிப்பாளர் திரு. தில்ருக் ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் முதன்நிலை இணைப்பு வழங்குனரும், விளையாட்டுத்துறையின் தீவிர ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 6-வது ஆண்டாக இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து டயலொக் பாடசாலைகள் ரக்பி தொடருக்கு வலுசேர்க்கின்றது.
கடந்த ஆண்டின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தத் தொடர் நாக்-அவுட் சுற்றுடன் ஆரம்பமாகிறது. இதில் 16 முன்னணி பாடசாலைகள் மதிப்புமிக்க ஜனாதிபதி கிண்ணத்திற்காக மார்ச் 11 முதல் போட்டியிடவுள்ளன. இதனைத் தொடர்ந்து லீக் தொடர் நடைபெறும், இதில் 90 பாடசாலைகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் டயலொக் பாடசாலைகள் ரக்பி லீக் 2026 பட்டத்திற்காகப் போட்டியிடுவர்.
இந்த நாக்-அவுட் தொடர் இலங்கையின் சிறந்த இளம் ரக்பி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கொழும்பின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது. மார்ச் 11 அன்று ஆரம்பமாகும் முதல் போட்டிகளில், புனித பீற்றர் கல்லூரி மற்றும் ஆனந்தா கல்லூரி ரோயல் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்திலும், டிரினிட்டி கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி CR&FC மைதானத்திலும் மோதவுள்ளன. இவ்விரு போட்டிகளும் மாலை 4:15 மணிக்கு ஆரம்பமாகும். மார்ச் 13 அன்று வெஸ்லி கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி அணிகள் ரோயல் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் மாலை 4:15 மணிக்கு மோதவுள்ளன.
மார்ச் 14 அன்று இசிபதான கல்லூரி எதிர் விஞ்ஞானக் கல்லூரி ரோயல் மைதானத்திலும், புனித ஜோசப் கல்லூரி எதிர் கிங்ஸ்வுட் கல்லூரி ஹாவ்லொக் மைதானத்திலும் மாலை 4:15 மணிக்கு மோதவுள்ளன. டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் சாஹிரா கல்லூரி இடையிலான போட்டி CR&FC மைதானத்தில் இரவு 7:15 மணிக்கு நடைபெறும். மார்ச் 15 அன்று ரோயல் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி அணிகள் மின்விளக்கு ஒளியின் கீழ் இரவு 7:15 மணிக்கு CR&FC மைதானத்தில் மோதவுள்ளன. அதே நாளில் மாலை 4:15 மணிக்கு புனித தோமியர் கல்லூரி மற்றும் ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணிகள் ஹாவ்லொக் மைதானத்தில் போட்டியிடும்.
காலிறுதிப் போட்டிகள் மார்ச் 21 மற்றும் 22 ஆம் திகதிகளிலும், அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன. இத்தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் 4 அன்று சுகததாச அரங்கம் அல்லது ரோயல் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெறும். முக்கிய அனுசரணையாளர் என்ற வகையில், டயலொக் நிறுவனம் இப்போட்டிகளை டயலொக் தொலைக்காட்சியின் ThePapare TV (அலைவரிசை 62 & 63) மற்றும் ThePapare TV HD (அலைவரிசை 126 & 127) ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும், Dialog Play Mobile APP மற்றும் ThePapare.com இணையதளம் வாயிலாகவும் மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ரக்பி ரசிகர்கள் இப்போட்டிகளைத் தடையின்றி கண்டு களிக்கலாம்.
"நாளைய வெற்றியாளர்களுக்கு வலுவூட்டும் எமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பாடசாலை விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றான 2026 பாடசாலை ரக்பி தொடருடன் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கத்திற்கும், பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவித்தார்.
"நீண்டகாலமாக லீக் மற்றும் நாக்-அவுட் தொடர்களுக்கு டயலொக் வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொடர் மாணவர்கள் தேசிய மட்டத்திலான ரக்பி கனவுகளை நனவாக்க ஒரு பாலமாக அமையும். இந்த ஆண்டு போட்டிகள் சிறந்த விளையாட்டுத் திறனுடன் விளையாடப்படும் என நம்புகிறோம்" என இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு. புத்திக அத்தனாயக்க குறிப்பிட்டார்.
டயலொக் ஆசிஆட்டா தேசிய கிரிக்கெட், கைப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளின் பெருமைமிகு அனுசரணையாளராகும். டயலொக் Srilanka Golf open மற்றும் தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுக்களுக்கான இலங்கை அணியின் முக்கிய அனுசரணையாளராகவும் உள்ளது. மேலும் நாளைய சாம்பியன்களை ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஜனாதிபதி தங்கக் கிண்ண கைப்பந்து, தேசிய இளையோர் மற்றும் மூத்தோர் வலைப்பந்து போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி ஆகியவற்றையும் நிறுவனம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.