டயலொக் தேசிய சிரேஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்துக்கு தொடர்ந்தும் வலுவூட்டவுள்ளது
2024 ஜனவரி 18 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலமாக: இலங்கை வலைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அஷானி சேனாரத்ன
இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் தேசிய சிரேஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்துக்கு அனுசரணை வழங்கி வலுவூட்டவுள்ளது. இதன்மூலம் விளையாட்டில் ஈடுபடும் மகளிரை ஊக்குவிப்பதுடன் வளர்ந்துவரும் திறமைசாலிகளை தட்டிக்கொடுப்பதிலும் தான் காட்டும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டியுள்ளது.
தேசிய சிரேஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணம் 2024 ஜனவரி 20 மற்றும் 21ந்திகதிகளில் வென்னப்புவவில் அமைந்துள்ள சேர் ஆல்பர்ட் எஃப் பீரிஸ் விளையாட்டு வளாகத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரையிறுதிப்போட்டிகள் மற்றும் மாபெரும் இறுதிப்போட்டி 2024 ஜனவரி 21ந்திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 35 இற்கும் மேற்பட்ட அணிகள் வெற்றியாளர் பட்டத்திற்காக ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். இலங்கை வலைப்பந்து கூட்டமைப்பை பொருத்தவரை இந்த வெற்றிக்கிண்ணம் திறமைசாலிகளுக்கான ஒரு தேடுதல் வேட்டை என்றே கூறலாம். தேசிய மட்ட வீராங்கனைகளின் குழாமை விரிவாக்குவதே இதன் நோக்கம். எதிர்வரும் 2024 செப்டெம்பர் 26 முதல் ஒக்டோபர் 6 வரை சவுதி அரேபியாவில் இடம்பெறவிருக்கும் ஆசிய வலைப்பந்து வெற்றிக்கிண்ண போட்டிகளுக்கு தேசிய வலைப்பந்து அணி தயாராகி வருவதனால் இந்த முன்னெடுப்பு இன்றியமையாததாகியுள்ளது.
தேசிய சிரேஷ்ட வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்துக்கு அனுசரணை வழங்கி வரும் டயலொக் அதில் ஒரு அங்கமாக ஜனவரி 21 ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை thepapare.com மற்றும் Dialog ViU mobile app வழியாக நண்பகல் 12:00 முதல் நேரலையாக ஒளிபரப்பவுள்ளது.
இலங்கை வலைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி அவர்கள் டயலொக் ஆசிஆட்டா வழங்கிவரும் திடமான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் அணியின் திறமையும் மேம்பட்டிருப்பதை அவர் இதன்போது குறிப்பிட்டார். “கடந்த சில ஆண்டுகளில் அணியானது அபரிமிதமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இத்தருணத்தில் ஒரு மதிப்புமிக்க பங்களராக எமக்கு ஆதரவு நல்கி வரும் டயலொக் ஆசிஆட்டாவுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என விக்டோரியா கூறினார்.
“தொடர்ந்து ஐந்தவாது ஆண்டாகவும் தேசிய சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலமாக நாட்டின் விளையாட்டுத்துறையில் மகளிருக்கு ஊக்கமளிப்பதிலும் வளர்ந்துவரும் திறமைசாலிகளை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதிலும் நாம் காட்டிவரும் நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக இது தொடர்வது குறித்து நாம் பெருமிதம் கொள்கின்றோம். ஆசிய வலைப்பந்து போட்டிகளில் அடுத்தடுத்து மகுடம் சூடிக்கொள்ளும் வகையில் அணியை வழிநடத்தும் இலங்கை வலைப்பந்து கூட்டமைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நிகழ்வு திறமைசாலிகளை கண்டெடுக்கும் ஒரு தளமாக மட்டுமின்றி நாட்டில் மகளிர் விளையாட்டுத்துறைக்கு நாம் காட்டும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு களமாகவும் அமைகின்றது. தேசிய மட்டத்தில் வலைப்பந்தை மேம்படுத்தவிருக்கும் வகையிலான விறுவிறுப்பான போட்டிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அஷானி சேனாரத்ன அவர்கள் தெரிவித்தார்.
கடந்த முறை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய வலைப்பந்து வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் Mercantile Netball Associationஐ சேர்ந்த HNB வலைப்பந்து அணி விமானப்படை அணியை 45-28 என வீழ்த்தி வெற்றியை சுவீகரித்தது.
டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, இலங்கை பகிரங்க கொல்ஃப், பராலிம்பிக் விளையாட்டுகள் உட்பட இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.