டயலொக் தனது வாடிக்கையாளர் சேவை நிலையங்களை DeafTawk சேவைகள் மூலம் செவிப்புலனற்றோரும் அணுகும் வகையில் மேம்படுத்துகிறது
2024 ஜூலை 18 கொழும்பு
அசங்க பிரியதர்ஷன, நிலைபேற்றுத்தன்மையின் தலைவர் மற்றும் குழும பிரதம இடர் மற்றும் இணக்கப்பாட்டு அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; துசித குமார விஜயரங்க, செயலாளர், இலங்கை செவிப்புலனற்றோர் மறுவாழ்வு அமைப்பு; சாண்ட்றா டீ சொய்ஸா, குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; துலிப் திலகரத்ன, மூலோபாய கூட்டாண்மை பணிப்பாளர், மனிதாபிமான புத்தாக்கத்திற்கு தொலைபேசி, GSMA; சாமர சந்தகெலும், சைகை மொழிபெயர்ப்பாளர், இவர்களுடன் டயலொக் பிரதிநிதிகள்.
இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாடுமுழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் DeafTawk மொழிபெயர்ப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. செவிப்புலன் குறைபாடு உள்ளவர்களுக்கு சேவைகளை இலகுவாக அணுகும்தன்மையை மேம்படுத்தும் பொருட்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயலாமையுடையவர்களை (PWDs) சென்றடையக்கூடிய வகையில் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவதன் மூலம் அவர்களை உள்ளிணைப்பதில் நிறுவனம் காட்டும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமைகிறது.
DeafTawk சேவை மூன்று மொழிகளில் செவிப்புலன் குறைபாடுடைய பயனர்களுக்கு தகுதிவாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்களுடன் தொடர்புகொள்ள உதவும் தளமாகும். இதன் மூலம், செவிப்புலனற்றவர்கள் DeafTawk ஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். ஒரு சேவை நிலையத்திற்குச் செல்கையில், சைகை மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மூலம் தேவையுடைய வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சேவைப் பகுதியை நோக்கி வழிநடத்தப்படுவார்கள். அங்கு ஒரு பிரதிநிதி DeafTawk Appஐப் பயன்படுத்தி சைகை மொழி மொழிபெயர்ப்பாளருடன் தொடர்புகொள்வார், அவர் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்பை எளிதாக்குவார்.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி சாண்ட்ரா டீ சொய்ஸா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் சேவைகளை அனைவரும் சமமாக அணுகுவதற்கான எமது நீண்டகால திட்டப் பயணத்தின் இரண்டாவது கட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பார்வை குறைபாடுகள், அறிவாற்றல் சவால்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இயலாமையுடையவர்களின் மாறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்ய dialog.lk-ஐ வெற்றிகரமாக மறுவடிவமைப்பு செய்தமையையடுத்து, DeafTawk-ஐ எங்கள் சேவையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செவிப்புலனற்றோருக்கு உதவி பெறுவதில் உள்ள தொடர்பாடல் தடைகளைத் தகர்க்க முடியும். எமது வாடிக்கையாளர்களை எங்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் மையமாகக் கொண்டு செயற்படுவதில் டயலொக் உறுதியாக இருக்கிறது” என்றார்.
மேலும், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் நிலைபேற்றுத்தன்மையின் தலைவர் மற்றும் குழும பிரதம இடர் மற்றும் இணக்கப்பாட்டு அதிகாரி அசங்க பிரியதர்ஷன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “உள்ளிணைக்கையை வளப்படுத்தும் முகமாக தொழில்நுட்பத்தின் ஆற்றலை உந்துதலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG 9, SDG 10) மீதான அர்ப்பணிப்பும் டயலொக் பேணும் மரபின் அடையாளமாக திகழ்கின்றன. இந்த புதிய முன்னெடுப்பு, இலங்கையின் அணுகல்தன்மை மீதான முன்னெடுப்புகளில் ஓர் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். பல்வகைமை, நியாயம், உள்ளிணைக்கை ஆகியவற்றை பேணிக்காக்கும் அதேவேளை, அனைவரும் அணுகத்தக்க சமத்துவமான வெளிகளை உருவாக்குவதன் ஊடாக இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்தும் இப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க நாம் மிகுந்த ஆவலுடன் உள்ளோம்” என்றார்.
நிறுவனத்தின் உதவித்தொழில்நுட்ப (Assistive Tech) செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டமாக, இயலாமையுடையவர்களுக்கு (PWDs) மேலும் எளிதான சேவையை வழங்கும் வகையில், அனைத்து வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் உதவித்தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த டயலொக் திட்டமிட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு, தயவுசெய்து https://dialog.lk/ ஐப் பார்வையிடவும்.