Body

டயலொக் இலங்கையின் பராலிம்பிக் கனவுகளை நனவாக்குகிறது: ‘Road to Paris 2024’ இற்கான தன் ஆதரவை அளிக்கிறது

2024 ஆகஸ்ட் 28         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் மொபைல் தொலைதொடர்பு வணிகத் தலைவர் யூஷான் குணதிலக, 2024 பாரிஸ் பராலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு உத்தியோகப்பூர்வ அனுசரணையை வழங்கினார். இது அணித்தலைவர் சமித டுலான் மற்றும் தேசிய பராலிம்பிக் குழு (NPC) தலைவர் கர்னல் தீபால் ஹேரத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த அனுசரணை வழங்கும் வைபவத்தில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சமூக புத்தாக்க சிரேஷ்ட முகாமையாளர் அசித் டி சில்வா மற்றும் 2024 பாரிஸ் பரா விளையாட்டுகளுக்குத் தயாராகி வரும் இலங்கை பராலிம்பிக் அணியின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரும் இலங்கை விளையாட்டுத்துறையின் வளமிக்க ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகும் எட்டு உறுப்பினர்களை கொண்ட பராலிம்பிக் அணிக்கு பெருமையுடன் அனுசரணை வழங்குகிறது. அசாத்தியமான ஈட்டியெறிதல் வீரர் சமித டுலான் அவர்களின் தலைமையில் செல்லும் இந்த அணி, தத்தமது பிரிவு விளையாட்டுகளில் அபாரமான திறன் படைத்த மெய்வல்லுனர்களை கொண்டுள்ளது. இந்த மெய்வல்லுனர்கள் மீண்டெழுந்தன்மை, முனைப்பு மற்றும் தேசத்தின் பெருமையையும் தம் தோள்களில் சுமந்த வண்ணம் நாட்டின் பெயரை உலக மேடையில் முழங்கச் செய்திட தயாராகி வருகின்றனர். கடந்த 23 வருடங்களாக டயலொக் இலங்கை பராலிம்பிக் வீரர்களுக்கு தோள்கொடுத்து வருகிறது. இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவின் (NPC) உறுதிமிகு அனுசரணையாளராக நாட்டின் மெய்வல்லுனர்கள் தம் கனவை நனவாக்கிடும் பயணத்திற்கு உற்றதுணையாய் இருந்து வருகிறது.

2012 லண்டன் பராலிம்பிக் போட்டிகள் இடம்பெற்றபோது இலங்கையின் பிரதீப் சஞ்சய் 400 மீட்டர் T46 இல் 49.28 செக்கன்களுக்குள் ஓடி வெண்கலப்பதக்கத்தை வென்றார். பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை பதக்கம் பெறுவது அதுவே முதன்முறையாகும். அதனை தொடர்ந்து 2016 ரியோ பராலிம்பிக்கின் போது தினேஷ் பிரியந்த ஹேரத் அவர்கள் ஆண்களுக்கான ஈட்டியெறிதலில் வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் 2019 ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். ஹேரத்தின் பதக்க வேட்டை அத்தோடு நில்லாமல் 2020 டோக்கியோ பராலிம்பிக்கின் போது இலங்கையின் முதல் தங்கப்பதக்கத்தையும் வென்று கொடுத்தார். அவரது அணியின் சக வீரரான டுலான் கொடிதுவக்கு F64 ஈட்டியெறிதல் போட்டியில் 65.61 மீட்டர்கள் எனும் தனிப்பட்ட சாதனையோடு வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த அபரிமிதமான வெற்றிகள் உலக மேடையில் தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்துவரும் இலங்கை பராலிம்பிக் மெய்வல்லுனர்களின் முனைப்பை காட்டுகிறது.

Road to Paris அணியின் கொடி சுமக்கும் வீரராக திகழும் சமித டுலான், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி F44 ஈட்டியெறிதல் போட்டியில் பங்கேற்பார். அவருடன் T44 ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் நுவான் இந்திக்க, T46 ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் பிரதீப் சோமசிறி ஆகியோர் களம் காண்கின்றனர். பாலித பண்டார T42 ஆடவர் குண்டெறிதல் போட்டியிலும் பிரசன்ன ஜயலத் T42 ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் பங்கேற்பார். ஜனனி தனஞ்சன இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி T47 மகளிர் நீளம் பாய்தலிலும், நவீட் ரஹீம் S9 ஆடவர் 400 மீட்டர் Freestyle நீச்சல் போட்டியிலும், ரஞ்சன் தர்மசேன ஆடவர் திறந்த தனிநபர் சக்கரநாற்காலி டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்பர்.

இம்மெய்வல்லுனர்கள் தங்கள் திறன், மனோதிடம் மற்றும் தளரா அர்ப்பணிப்புடன் டயலொக்கின் தொடர்ச்சியான ஆதரவுடன் உத்வேகமளிக்க தயாராகிவருகின்றனர். 2000 ஆம் ஆண்டிலிருந்து, டயலொக் மற்றும் இலங்கையின் NPC (தேசிய பரா ஒலிம்பிக் குழு) இடையேயான இக்கூட்டாண்மை, இந்த வீரர்கள் வளர்ச்சியோடு சர்வதேச வெற்றிகளை அடையும் ஒரு சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நீண்டகால கூட்டாண்மை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவுக்கு டயலொக்கின் தளராத உறுதியின் சான்றாகும். இது வெறுமனே ஒரு விளையாட்டு அனுசரணை மாத்திரம் அல்ல, மாறாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னோடியாக விளங்குவதாலும், மாற்றுத்திறனாளிகளின் உள்ளிணைக்கையை (inclusion) ஊக்குவிப்பதற்காகவும் தொடர்கிறது.

தனது இடைவிடாத ஆதரவின் மூலம், டயலொக் பரா விளையாட்டு வீரர்கள் வளரவும், சாதிக்கவும், உலக அரங்கில் மிளிரவும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டாண்மையின் பலன்கள் எங்கள் விளையாட்டு வீரர்கள் கடந்த வருடங்களில் அடைந்த அசாத்திய சாதனைகளில் தெளிவாகக் காணக்கிடைக்கின்றன. இதில் பராலிம்பிக் விளையாட்டுகளில் தங்கம் 1 மற்றும் வெண்கலப் பதக்கங்கள் 3, உலக பரா மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள், பொதுநலவாய விளையாட்டுகளில் 1 வெள்ளி பதக்கம், மற்றும் ஆசிய பரா விளையாட்டுகளில் 9 தங்கம், 18 வெள்ளி, மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளோம்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் Esports அணிகளின் நீண்டகால ஆதரவாளராகவும், இலங்கை கோல்ஃப் ஓபன் போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் திகழ்கிறது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடக்கும் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உதவுவதற்காக, இலங்கை வலைப்பந்து சம்மேளனம் மற்றும் தேசிய பராலிம்பிக் குழு போன்ற அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் பல்வகைமை, சம உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளிணைக்கும் விளையாட்டுச் சூழலை ஊக்குவித்து வருகிறது. மேலும், எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்துப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவு வலைப்பந்து போட்டிகள், மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகளுக்கும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.