Body

டயலொக் கொவி மித்துரு மற்றும் ருஹுணு பல்கலைக்கழகம் இணைந்து விவசாயத் துறையில் புத்தாக்கங்களை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மை

2026 செப்டம்பர் 22         கொழும்பு

 

வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சரான கௌரவ கே. டி. லால்சாந்த அவர்கள், 2026 விவசாயம் மற்றும் சுற்றாடல் தொடர்பான சர்வதேச மாநாட்டின் (ISAE) போது இடம்பெற்ற கொவி மித்துரு AI கண்காட்சியில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் ருஹுண பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் இணைந்து கலந்துகொண்டார்.
இடமிருந்து வலமாக: அசாங்க பிரியதர்ஷன, குழும தலைமை நிறுவன அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சிரேஷ்ட பேராசிரியர் பி. ஏ. ஜயந்த, துணைவேந்தர், ருஹுண பல்கலைக்கழகம்; சிரேஷ்ட பேராசிரியர் ஜி. வை. ஜயசிங்க, பீடாதிபதி, விவசாய பீடம், ருஹுண பல்கலைக்கழகம்; கௌரவ கே. டி. லால்சாந்த, வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்; சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்த குமார, உப தலைவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; மற்றும் கலாநிதி ரொமேஷ் ரணவன, குழும தலைமை பகுப்பாய்வு மற்றும் AI அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் சக்ரா லேப்ஸ் (Chakra Labs) ஆகியவற்றுடன் இணைந்து, டயலொக்கின் கொவி மித்துரு (Govi Mithuru) தளத்தின் ஊடாக விவசாய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை முன்னெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இக்கூட்டாண்மை, கல்வியியலாளர்களின் நிபுணத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, இலங்கையின் விவசாயத் துறைக்கான நடைமுறை தீர்வுகளை உருவாக்க உதவுகிறது.

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு விவசாய அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்ற கொவி மித்துரு, மொபைல் சார்ந்த விவசாய ஆலோசனைச் சேவையாகத் தொடங்கியது. 2025 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல்களுடன் மேம்படுத்தப்பட்டு, இலங்கையின் முதலாவது AI அடிப்படையிலான விவசாயத் தளமாக உருவெடுத்தது. இன்று இது பயிர்ச்செய்கை வழிகாட்டல், வானிலை தகவல்கள், பயிர் விபரங்கள், சந்தை விலைகள், AI அடிப்படையிலான Chatbot மற்றும் குரல் உதவி, பூச்சி மற்றும் நோய் அடையாளம் காணல் ஆகியவற்றை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்குகிறது. இச்சேவையை கொவி மித்துரு செயலி, 616 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்துதல் அல்லது govimithuru.lk இணையதளம் மூலம் அணுகலாம்.

இக்கூட்டாண்மையின் திறனை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச விவசாய மற்றும் சுற்றுச்சூழல் மாநாட்டில் (ISAE 2026), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ருஹுணு பல்கலைக்கழகம், சக்ரா லேப்ஸ் மற்றும் ஜப்பானின் ஷிபௌரா தொழில்நுட்ப நிறுவனம் (Shibaura Institute of Technology) இணைந்து உருவாக்கிய AI அடிப்படையிலான விவசாய ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது. கொவி மித்துரு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, விவசாய நிலங்களில் தானாக இயங்கி, பயிர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கிறது. மேலும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பூச்சிகள், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான சிகிச்சை அல்லது மருந்துகளை நேரடியாக அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து 25 மாவட்டங்களிலும் 1,000க்கும் மேற்பட்ட நேரடி 5G தளங்களுடன் இயங்கும் Dialog 5G Ultra மூலம் ஆற்றலூட்டப்படும் இத்தீர்வு, விவசாய நிலங்களின் புகைப்படங்கள், நேரலை வீடியோக்கள் மற்றும் AI மூலம் பெறப்பட்ட பயிர் ஆரோக்கியத் தகவல்களை உடனுக்குடன் அனுப்ப உதவுகிறது. இது தொலைதூரக் கண்காணிப்புக்கும் தரவு சார்ந்த விவசாய முறைகளுக்கும் ஆதரவளிக்கிறது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ISAE 2026 மாநாடு, “தரவு சார்ந்த பசுமை விவசாய மாற்றம்: ஆரோக்கியமான மண்ணிலிருந்து ஆரோக்கியமான மனிதர்களுக்கு” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இம்மாநாடு விவசாயம், நிலையான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உள்ள புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை ஆராய உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.

விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி. லால் காந்த அவர்களின் பங்கேற்பு, இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதில் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை மேலும் சுட்டிக்காட்டியது. டயலொக்கின் AI மற்றும் இணைப்புச் சேவைகளைப் பயன்படுத்தி அறிவு சார்ந்த விவசாயத் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கொவி மித்துருவின் இந்த மேம்பாட்டுப் பயணம் அமைந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ. ஜயந்த, “ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் நிபுணத்துவத்தை நடைமுறைப் பயன்பாடுகளாக மாற்றி, நிஜ உலக விவசாய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு இக்கூட்டாண்மை ஒரு முக்கிய வாய்ப்பை உருவாக்குகிறது. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறன்களை டயலொக்கின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம், புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இலங்கையின் விவசாயத் துறையின் எதிர்காலத்திற்கு கல்வியியலாளர்களின் பங்களிப்பையும் வலுப்படுத்த முடியும்” என்று கூறினார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர் / குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் விவசாயத் துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களுக்குத் தீர்வுகாண்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் தொழில்நுட்பத்திற்கு உள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்துடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், அதிக உற்பத்தித்திறன், சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் நடைமுறைத் தீர்வுகளை ஆராய இணைப்புச் சேவை, AI மற்றும் கல்வியியல் நிபுணத்துவம் ஆகியவற்றை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும், நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் நாங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.