டயலொக் பாடசாலை அபிவிருத்தி ‘ரக்பி – 7’ போட்டித்தொடர் 2022
பெப்ரவரி 18, 2022 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார, இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சங்கத்தின் தலைவர் பி.ஏ. அபேரத்ன அவர்களிடம் அனுசரணையினை கையளிப்பதையும் மேலும் படத்தில் (இடமிருந்து வலமாக) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தக மற்றும் ஊடகம் பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சங்கத்தின் செயலாளர் நிரோத விஜேராம
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது , இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சங்கத்துடன் இணைந்து பாரம்பரியமாக ரக்பி போட்டிகளில் ஈடுபடுகின்ற பாடசாலைகளுக்கும் அப்பால் பாடசாலைகளில் ரக்பி விளையாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கும், திறமைகளை இனங்காண்பதற்கும் என முதற்தடவையாக 14 வயதுக்குட்பட்ட அணிக்கு 7 பேரைக்கொண்ட பாடசாலை மட்டத்திலான அபிவிருத்திகாண் ‘ரக்பி 7’ போட்டித் தொடரொன்றை நடத்த முன்வந்துள்ளது.
ஆறு மாகாணங்களைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட 40 பாடசாலை அணிகள் பங்குபற்றும் மேற்படி அணிக்கு 7 பேரைக்கொண்ட டயலொக் பாடசாலைகள் 'ரக்பி 7' அபிவிருத்திகாண் போட்டித்தொடர் பெப்ரவரி 20 ஆம் திகதி ருவன்வெல்ல ரக்பி மைதானத்திலும், மார்ச் 12ஆம் திகதி பல்லேகெலே ரக்பி மைதானத்திலும் காலை 8.30 முதல் ஆரம்பமாகவுள்ளன .
இலங்கையில் ரக்பி விளையாட்டானது கொழும்பு மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் அதிகமாக விளையாடப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றது, இருப்பினும் போதிய வசதிகள் மற்றும் பயிற்றுனர்களின் பற்றாக்குறை காரணமாக பின்தங்கிய கிராமப்புறங்களை ரக்பி போட்டிகள் சென்றடைவது மந்த கதியிலேயே நடைபெறுகின்றது. எனவே, கிராமிய பாடசாலை ரக்பி அணிகளின் திறன் மட்டம் மற்றும் உடற் தகுதியை மதிப்பிடுவதற்கும் தேவையான பயிற்சி மற்றும் மேம்படுத்தல்களை வழங்குவதற்கும் அபிவிருத்திகாண் சுற்றுப் போட்டிகளை நடத்துவது அவசியமானது எனவும் , அதன்மூலம் குறித்த பின்தங்கிய கிராமப்புறங்களில் ரக்பி போட்டிகளை விருத்தியடையச் செய்ய முடியும் என இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கம் (SLSRFA) தெரிவித்துள்ளது.
டயலொக் பாடசாலைகள் அபிவிருத்தி 'ரக்பி - 7' சுற்றுப் போட்டிகள் சுகாதாரத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் தத்தமது பாடசாலைகளின் உயிர்குமிழி பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பில் கீழ் இருப்பர். அத்துடன் அவர்களுக்கு விரைவான அன்டிஜன்ட் சோதனைகள் ஒவ்வொரு இடைவேளைகளின்போதும் நடத்தப்படும்.
மேற்படி 14 வயதுக்குட்பட்டோருக்கான ரக்பி போட்டிகளில் 20 ஆம் திகதி நடைபெறும் போட்டிகளில் தமது பங்கு பற்றலை உறுதிபடுத்தியுள்ள பாடசாலைகளின் விபரங்கள் வருமாறு ; மேல்மாகாணத்தின் சார்பாக கொலன்னாவை புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி, குலசிங்க மகா வித்தியாலயம், ஓமல்பே மகா வித்தியாலயம், ஜயவர்தனபுர மகா வித்தியாலயம்.சப்ரகமுவ மாகாணத்தின் சார்பாக குலரத்ன மத்திய கல்லூரி, சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம், பிபிலேகம மகா வித்தியாலயம், தொரப்பனே மகா வித்தியாலயம், விமலசார வித்தியாலயம், கொடவல வித்தியாலயம், கிரிபோருவ வித்தியாலயம். தென் மாகாணத்தின் சார்பாக ஸ்ரீதம்ம கல்லூரி, சரலங்கர கல்லூரி, உடுகம தேசிய பாடசாலை, ஸ்ரீ சித்தார்த்த மகா வித்தியாலயம். ஆகியன களத்தில் இறங்கவுள்ளன.
"கிராமப்புர பாடசாலைகளைப் பொறுத்தளவில் ரக்பி விளையாட்டானது செயற்திறன் குறைந்து காணப்படுவதன் காரணமாக இலங்கையில் ரக்பி திறமைகளின் பெரும்பகுதி இழக்கப்படுகிறது, குறிப்பாக அணிக்கு 7 பேரைக்கொண்ட வடிவத்திலான போட்டிகளைப் பொறுத்தளவில் லீக் வடிவ போட்டிகளைவிட உடல்ரீதியான ஆர்வம் இதில் குறைவாகவே அமைந்துள்ளது." என இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் பி.ஏ.அபேரத்ன அவர்கள் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் ,“ இலங்கையில் உள்ள கிராமப்புற பாடசாலைகள் ஆசிய விளையாட்டு மற்றும் உலக செம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சர்வதேச அளவிலான தடகள விளையாட்டு வீரர்களை உருவாக்கும் ஒரு பாரம்பரியம் நிலவுகின்றது. எனவே , நாங்கள் அத்தகைய திறமைகளை ரக்பி போட்டிகளிலும் அடையாளம் கண்டு பயன்படுத்த விரும்புகிறோம்." என்றார்."டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் அனுசரணையின்றி நம்மால் இந்த அளவிலான போட்டித் தொடரை நடத்துவதென்பது சாத்தியமாகியிருக்காது. மேலும், இலங்கையில் பாடசாலை ரக்பியை வலுப்படுத்துகின்றமைக்காக டயலொக் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புகிறேன்," எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரைப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி லீக், நொக்கவுட் (knockout) போட்டிகள், செவன்ஸ் ரக்பி போட்டிகள், முன்னணி கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.