Dialog Pay வர்த்தகக் கட்டமைப்பில் இணைகிறது Daraz Sri Lanka
2026 ஜூலை 15 கொழும்பு
இடமிருந்து வலமாக: முதித்த பிரேமரத்ன, உப தலைவர் - டிஜிட்டல் தளங்கள் மற்றும் கூட்டாண்மைகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லசந்த தெவரப்பெரும, குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ; ருக்ஷான் சேவியர், நிர்வாக இயக்குனர், Daraz Sri Lanka).
இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Daraz நிறுவனத்திடமிருந்து Cash on Delivery (COD) முறையிலான ஆர்டர்களைப் பெற்றுக்கொள்ளும் போது, வாடிக்கையாளர்கள் இனி Dialog Pay ஐப் பயன்படுத்தி பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி ஆன்லைன் வர்த்தகத் தளமான Daraz, Dialog Pay வர்த்தகக் கட்டமைப்பில் இணைவதன் மூலம், டிஜிட்டல் கட்டண முறைகளின் வசதியை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்த்துள்ளது.பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது (Checkout) COD முறையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், பொருட்களை விநியோகிக்க வரும் Daraz முகவரால் (Rider) வழங்கப்படும் Dialog Pay QR குறியீட்டை Scan செய்வதன் மூலம் எளிதாகப் பணம் செலுத்த முடியும். அத்துடன் தகுதிபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இலவச டயலொக் டேட்டா சலுகைகளையும் பெற்று மகிழலாம்.
இந்தக் கூட்டாண்மை குறித்து Daraz Sri Lanka நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ருக்ஷான் சேவியர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையின் ஆன்லைன் வர்த்தகத் துறையின் (e-commerce) எதிர்காலத்தை வடிவமைப்பதில் டிஜிட்டல் கட்டண முறைகள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று Daraz இல் நாங்கள் நம்புகிறோம். டயலொக் நிறுவனத்துடனான எங்களது இந்தக் கூட்டாண்மை, ஆன்லைன் கொள்வனவுகளை மிகவும் தடையற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கும், அதே வேளையில் நாடு மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் பணப் புழக்கம் குறைந்த (cash-light) பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு ஆதரவளிப்பதற்கும் இரு நிறுவனங்களும் கொண்டுள்ள பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. டயலொக்கின் டிஜிட்டல் கட்டணத் திறன்களை Daraz இன் ஆன்லைன் வர்த்தக விஸ்தரிப்புடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பணம் செலுத்தும் போது அதிக வசதி, தெரிவு மற்றும் நன்மைகளை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அத்துடன் நாடு முழுவதும் டிஜிட்டல் கட்டணங்களை பரவலாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
Dialog Pay App மற்றும் MyDialog App ஊடாக அணுகக்கூடிய Dialog Pay ஆனது, தொலைத்தொடர்பு இணைப்பு, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே கட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறது. இது டிஜிட்டல் கட்டணங்களை எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மற்றும் ஒவ்வொரு இலங்கையருக்கும் சலுகைகள் நிறைந்ததாகவும் மாற்ற வேண்டும் என்ற டயலொக்கின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தமது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தமக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ மிக வசதியாகச் செயல்படுத்திக்கொள்ள முடியும். அதன் மூலம், பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணப் பரிமாற்றம் செய்யவும், தங்களது Digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளைத் திறக்கவும், Dialog Finance மூலமாக வழங்கப்படும் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். நாடு முழுவதிலும் உள்ள 100,000 க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதிபெறும் QR கட்டணச் செலுத்தல்களுக்கு இலவச டயலொக் டேட்டாவைச் சலுகையாக வழங்குகிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் பணப் புழக்கம் குறைந்த பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் தொடர்ச்சியான பயணத்திற்கு வலுவூட்டுகிறது.