Body

இலங்கையின் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்காக ‘IESL National Startup Challenge’ இனை ஆரம்பிக்கும் டயலொக் மற்றும் IESL

2026 அக்டோபர் 07         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: பொறியியலாளர் நவோதனா கன்கானம்கே (இணைத் தலைவர், தொழில்முனைவோர் மன்றம் - IESL); பொறியியலாளர் ஜாஸ்மின் நாணயக்கார (தலைவர், தொழில்முனைவோர் மன்றம் - IESL மற்றும் நிறுவுனர்/இயக்குநர், REAL LIFE); பொறியியலாளர் கோசல கம்புரதேனிய (தலைவர், IESL); சாமில விஜயவர்தன (தயாரிப்பு மற்றும் சேவைகள் புதுமைப்படுத்தல் பிரிவுத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி).

இலங்கையின் முதன்மைத் தொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்துடன் (IESL) இணைந்து 'IESL National Startup Challenge' இனை ஆரம்பித்துள்ளது. வளர்ந்துவரும் தொழில்முனைவோரின் புதுமையான யோசனைகளை வர்த்தக ரீதியாக வெற்றிபெறக்கூடிய, முதலீட்டிற்குத் தயாரான ஸ்டார்ட்அப் (Startup) வியாபாரங்களாக மாற்றுவதற்கான தேசிய அளவிலான வழியை இத்திட்டம் உருவாக்குகிறது. முறையான கட்டமைப்பு, துறைசார் வழிகாட்டல் மற்றும் நடைமுறை உதவிகள் ஊடாக சந்தை வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் நோக்கி அவர்களின் யோசனைகளை நகர்த்தி, இலங்கையின் தொழில்முனைவோர் சூழமைப்பை வலுப்படுத்துவதற்கான இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கிறது.

2026 அக்டோபர் 5 ஆம் திகதி டயலொக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற IESL தொழில்முனைவோர் அரங்கத்தின் (IESL Entrepreneurship Forum) போது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு பொறியியல் பீட மாணவர்கள், பொறியியல் வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அல்லாதோருக்கான திறந்த பிரிவின் கீழ் போட்டியாளர்கள் அழைக்கப்படுகின்றனர். தேசிய முன்னுரிமைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சந்தைப் போக்குகள் மற்றும் உள்ளடக்கிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுடன் சீரமைக்கப்பட்ட 12 வெவ்வேறு துறைகளின் கீழ் தமது யோசனைகளை இவர்கள் சமர்ப்பிக்க முடியும். துறைசார் வல்லுநர்கள், வழிகாட்டிகள் மற்றும் கூட்டாளர்களின் ஆதரவுடன், போட்டியாளர்கள் யோசனை உருவாக்கம், கருத்துப் பகிர்வு (pitching), அடைக்காத்தல் (incubation), மாதிரி உருவாக்கம் (prototyping), சரிபார்த்தல் (validation), குறைந்தபட்ச நன்மையளிக்கும் தயாரிப்பு உருவாக்கம் (MVP development) மற்றும் வணிக விரிவாக்கம் ஆகிய நிலைகளைக் கடந்து முன்னேறுவர். இத்திட்டத்தின் நிறைவில் சிறந்த 10 குழுக்கள் (Top 10) தெரிவுசெய்யப்படுவதுடன், முதலிடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு LKR 1 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

பிரதான அனுசரணையாளராகவும் முக்கிய சூழமைப்பு ஊக்கியாகவும் செயற்படும் டயலொக், வெறுமனே நிதி அனுசரணையுடன் நின்றுவிடாமல், பங்கேற்கும் குழுக்கள் தங்களது தீர்வுகளை உருவாக்கவும், சரிபார்க்கவும், விரிவுபடுத்தவும் உதவும் வகையில் தொழில்நுட்ப நிபுணத்துவம், வழிகாட்டிகள் மற்றும் டிஜிட்டல் வளங்களையும் வழங்கி நடைமுறை ரீதியான ஆதரவை வழங்குகிறது. மேலும், தெரிவுசெய்யப்படும் சிறந்த 10 குழுக்களில் ஒவ்வொரு குழுவிற்கும் LKR 250,000 பெறுமதியான 'டயலொக் டிஜிட்டல் ஸ்டார்ட்அப் ஆதரவுத் தொகுப்பு' (Dialog Digital Startup Support Package) வழங்கப்படும். இதில் தெரிவுசெய்யப்பட்ட டயலொக் டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளடங்கும்.

"உருவாக்கப்படும் யோசனைகளைச் சந்தையில் விரிவடையும் வணிகங்களாக உருமாற்றத் தேவையான தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் நடைமுறை வளங்களை வழங்கி, தொழில்முனைவு இலக்குகளைச் சாத்தியமாக்குவதில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி உறுதியுடன் செயற்படுகிறது. இலங்கையின் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 'IESL தேசிய ஸ்டார்ட்அப் சவாலின்' மூலம் வளரும் ஆற்றல்மிக்க குழுக்கள் தங்களின் வணிகக் கருத்துருக்களைச் சரிபார்த்து, முதலீடுகளைப் பெறுவதற்கான தயார்நிலையை அடைவதற்குத் தேவையான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், வழிகாட்டல்கள் மற்றும் சூழலமைப்புச் சார் ஆதரவுகளை டயலொக் விரிவாக்கி வழங்குகிறது," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் தொழில்முனைவோர் அரங்கத்தின் தலைவரான பொறியியலாளர் ஜாஸ்மின் நாணயக்கார தெரிவிக்கையில், "வளர்ந்துவரும் தொழில்முனைவோரைத் துறைசார் நிபுணத்துவம், வழிகாட்டல் மற்றும் தொடர்ச்சியான நடைமுறை ஆதரவுடன் இணைப்பதன் மூலம் புதுமையான யோசனைகளைச் சாத்தியமான வியாபாரங்களாக மாற்றுவதற்கே IESL National Startup Challenge வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இது 'பொறியியலாளரைத் தொழில்முனைவோராக' (Engineer to Entrepreneur) மாற்றும் ஒரு பயணத்தை உருவாக்குவதுடன், IESL சமூகத்திற்குள் வலுவான தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எமது பொறியியலாளர்களையும் வளர்ந்துவரும் நிறுவனர்களையும் தீர்வுகளை உருவாக்கவும், வர்த்தகமயமாக்கவும், விரிவுபடுத்தவும் ஊக்குவிப்பதன் மூலம், புதிய வணிகங்கள், புதிய வாய்ப்புகள் மற்றும் இலங்கையின் திறமையான, கல்வியறிவு பெற்ற அடுத்த தலைமுறைக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்க நாங்கள் பங்களிக்க எதிர்பார்க்கிறோம். கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கான இந்த வழியை உருவாக்க IESL உடன் கைகோர்த்ததற்காக டயலொக் நிறுவனத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டார்.

IESL National Startup Challenge ஆனது, நம்பிக்கையளிக்கும் யோசனைகளிலிருந்து சந்தைக்குத் தயாரான வியாபாரங்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழியை அமைப்பதன் மூலம் இலங்கையின் புதுமைப்படைப்பு மற்றும் தொழில்முனைவோர் சூழமைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியைப் பிரதிபலிக்கிறது. திறமைமிக்க தொழில்முனைவோருக்கு வெற்றிபெறத் தேவையான வளங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் www.iesl.lk/announcements ஊடாக விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் 2026 நவம்பர் 16 ஆம் திகதி முடிவடையும். மேலதிக தகவல்களுக்கு mgr.pub@iesl.lk / 071 109 4393 என்ற முகவரியை/இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.