Body

மாற்றுத்திறனாளிகளுக்கான பணிமனை உள்ளடக்கல் திட்டத்தை Dialog MAS Enabler வேலைத்திட்டம் முன்னெடுத்துச் செல்கிறது

2026 ஆகஸ்ட் 11         கொழும்பு

 

Enabler Programme 2026 இன் பங்கேற்பாளர்களுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் MAS Holdings இன் பிரதிநிதிகள்.

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்பு சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான MAS Holdings உடன் இணைந்து, 4 ஆவது Dialog MAS Enabler திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு (PWDs) கார்ப்பரேட், உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் சேவைச் சூழல்களில் முறையான கள அனுபவத்தை வழங்குவதன் மூலம் பணிமனைகளில் அவர்களை உள்ளடக்கும் கூட்டு முயற்சியை இது தொடர்ந்தும் வலுப்படுத்துகிறது.

இலங்கையிலுள்ள முன்னணி அரச மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 10 பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் Dialog மற்றும் MAS இன் கார்ப்பரேட் அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் போன்ற பணிமனைகளில் நேரடியாக ஈடுபட்டு, நிறுவனச் செயல்பாடுகள், பணிமனை எதிர்பார்ப்புகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்த முதற்கட்டக் கள அனுபவங்களைப் பெற்றனர்.

இத்திட்டத்தில் பணிமனை நடைமுறைகள் (Workplace etiquette), ஆட்சேர்ப்புச் செயன்முறைகள், நேர்காணல் தயாரிப்புகள் மற்றும் தொழில் பாதைகள் குறித்த கட்டமைக்கப்பட்ட அமர்வுகள் இடம்பெற்றன. அத்துடன், துறை சார்ந்த நிபுணர்களுடனான கலந்துரையாடல்களும் நடைபெற்றன. அதேவேளையில், பங்கேற்பாளர்களின் வாழ்வியல் அனுபவங்களைப் புரிந்து கொள்ளவும், பணிமனைகள் மற்றும் செயன்முறைகளில் அணுகல்தன்மையை (Accessibility) மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும், நிறுவனக் கற்றல் மூலம் உள்ளடக்கப் பழக்கவழக்கங்களை வலுப்படுத்தவும் Dialog மற்றும் MAS இணைந்து பணியாற்றின. மேலும், குழுக்களிடையே உள்ளடக்க நடத்தைகளை வலுப்படுத்துவதற்காக அகக் கட்டமைப்பு சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் திட்டம் முழுவதும் தொடர்ந்தன.

MAS Capital (Private) Limited நிறுவனத்தின் குழு சட்ட விவகாரங்கள் மற்றும் நிறுவன விவகார இயக்குனர் ரஜிதா ஜெயசூரிய கூறுகையில்: "ஒரு அர்த்தமுள்ள உள்ளடக்கமானது, நாங்கள் எவருக்கு அதிகாரமளிக்க விரும்புகிறோமோ அவர்களுக்கு ஏற்ப பணிமனைகளும் மாற்றமடைய வேண்டும் என்பதை Dialog MAS Enabler திட்டம் எங்களுக்குத் தொடர்ந்து உணர்த்துகிறது. ஒவ்வொரு ஆண்டும், பங்கேற்பாளர்களின் அனுபவங்களிலிருந்து நாங்கள் நேரடியாகக் கற்றுக்கொள்கிறோம். இது அனைத்துத் திறன்களையும் கொண்ட மக்கள் பங்களிக்கவும், வளரவும், அர்த்தமுள்ள தொழில்களைக் கட்டியெழுப்பவும் கூடிய சூழலை உருவாக்க உதவுகிறது. எங்களது 'Plan for Change 2030' திட்ட இலக்குகளின் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அனைத்து இடங்களையும் முழுமையாக அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு MAS உழைத்து வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் நாங்கள் கற்றுக்கொள்ளவும், மேம்படவும், அந்த இலக்கை அர்த்தமுள்ள செயலாக மாற்றவும் உதவுகின்றன."

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழு தலைமை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன கூறுகையில்: "உள்ளடக்கிய பணியாளர்களை உருவாக்க, நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு முறையில் அணுகல்தன்மையையும் சமமான பங்கேற்பையும் பதிய வைக்க வேண்டும். MAS Holdings உடனான எங்களது கூட்டாண்மை மூலம், Dialog MAS Enabler திட்டமானது எங்களது நிறுவனம் முழுவதும் உள்ளடக்க நடைமுறைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், நிலையான வேலைவாய்ப்புக்கான பாதைகளை உருவாக்கவும் உதவுகிறது. இது மிகவும் மீள்திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கும், நிலையான, உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமான எங்களது நீண்டகால உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது."

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவாக்குவதுடன், தங்களது நிறுவனங்கள் முழுவதும் அணுகல்தன்மை மற்றும் உள்ளடக்க நடைமுறைகளைப் பதிய வைப்பதற்கான திட்டங்களில் Dialog மற்றும் MAS Holdings தொடர்ந்தும் இணைந்து செயல்படுகின்றன. சீரான கூட்டுமுயற்சி மற்றும் தொடர்ச்சியான பணிமனை மேம்பாடுகள் மூலம், இரு நிறுவனங்களும் இலங்கையின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மிகவும் மாறுபட்ட, மீள்திறன் கொண்ட மற்றும் நிலையான பணியாளர்களின் வளர்ச்சிக்குப் பங்களித்து வருகின்றன.